போதகர்களின் போதகன்

1. போதகர் அல்பர்ட் மார்டினின் அறிமுகம்

2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சென்னையில் சபை அமைக்கும் ஊழியத்தைத் துவங்கியபோது, வாரந்தோறும் பிரசங்கிக்கும் மாபெரும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அதன் பொருட்டு, பிரசங்கத் தயாரிப்பிற்கான ஆய்வின் ஒரு பகுதியாக, சீர்திருத்த மற்றும் தூய்மைவாதிகளின் ஆக்கங்களை இணையத்தில் தேடி வாசிப்பதில் கவனம் காட்டினேன்.

ஒரு முறை என்னுடைய தேடலின் போது, போதகர் அல்பர்ட் மார்டினின் No Neutral Ground (நடுநிலை என்ற ஒன்றில்லை) என்ற பிரசங்கத்தைக் கேட்க நேரிட்டது. கர்த்தருடைய பணியிலும், என்னுடைய சபை மற்றும் பிரசங்க ஊழியத்திலும் போதகர் அல்பர்ட் மார்டின் கர்த்தருடைய மாபெரும் ஆசீர்வாதமாகத் திகழப் போகிறார் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

முதன்முறையாக அவருடைய பிரசங்கத்தைக் கேட்டபோது எனக்குள் ஏற்பட்ட உணர்வுகள் இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. அந்தப் பிரசங்கத்தை நான் வீடியோவில் கண்டேன். பிரசங்கச் செய்தியின் உள்ளடக்கத்தை அவர் கையாண்ட விதம் மட்டுமன்றி, பிரசங்க மேடையில் அவருடைய அணுகுமுறையும் அர்ப்பணிப்பும் கணினித் திரையிலிருந்து என் கண்கள் சற்றும் சிதறாதபடி என்னைக் கட்டிப்போட்டன.

உண்மையில், அவர் அந்தப் பிரசங்கத்தைப் பிரசங்கித்து ஏறத்தாழ 10 ஆண்டுகள் கடந்திருந்தன. ஆனால், நான் அதைக் கேட்ட அந்நாளில், அவர் அப்போதுதான் என் கண்முன்னே பிரசங்கித்துக் கொண்டிருப்பது போலவும், அந்தச் சபைக் கூட்டத்தில் நானும் ஒருவனாக அமர்ந்திருப்பது போலவும் உணர்ந்தேன். அந்த ஆவிக்குரிய தாகத்தோடு, உடனே அவருடைய மற்றொரு பிரசங்கத்தையும் கேட்டேன். அதில், லூக்கா 5:32ல் உள்ள, “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்ற வசனத்தை மையமாக வைத்துப் பிரசங்கித்தார். “நான் வந்தேன்” என்ற இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு: யாருக்காக வரவில்லை?, யாருக்காக வந்தார்?, என்ன செய்ய வந்தார்? என்ற மூன்று முக்கிய குறிப்புகளின்கீழ் அவர் பிரசங்கித்தார். இதில் என்னுடைய கவனத்தை ஈர்த்தது அவருடைய தனித்துவமான அணுகுமுறைதான். ஒவ்வொரு முறையும் அவர் அந்த வசனத்தைச் சுட்டிக்காட்டி, அதிலுள்ள வார்த்தைகளை ஆழமாகக் கவனிக்கச் செய்தார். Look at the verse (வசனத்தைக் கவனியுங்கள்)  என்ற வார்த்தைகளை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருந்தார். நம்முடைய கவனம் முழுக்கக் கர்த்தருடைய வார்த்தையின் மீதே நிலைத்திருக்கும் வண்ணம் அவருடைய பிரசங்க நடை அமைந்திருந்தது.

அவருடைய பிரசங்கம் இத்தகைய பலத்த தாக்கத்தை என்னில் ஏற்படுத்தியிருந்த போதிலும், எனக்குள் இயல்பாகவே இருந்த ஒரு எச்சரிக்கை உணர்வு, அவருடைய பிரசங்கங்களைத் தொடர்ந்து கேட்பதில் ஒரு தயக்கத்தை உண்டாக்கியது. என்னவென்றால், இணையத்திலுள்ள தகவல்கள் நம்பகமானதா, நிரூபிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் நான் எப்போதும் எச்சரிக்கையாகவே இருந்தேன். ஆகவே, போதகர் மார்டின் அவர்களின் பிரசங்கங்கள் என்னை கவர்ந்து, என்னில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், அவருடைய சத்தியப் பின்னணி போன்ற விஷயங்களை, உடனடியாக இணையத்திலிருந்து அறிய முடியவில்லை. அதற்குக் காரணம், அக்காலத்தில் இணையப் பயன்பாடு தற்காலத்தைப் போலப் பரவலாகக் இருக்கவில்லை. ஆனால், கர்த்தருடைய பேரன்பின் பராமரிப்பினால், என்னுடைய இந்த அச்சத்தைப் போக்கும் விதமாக ஒரு காரியம் நிகழ்ந்தது.

2009 ஆம் ஆண்டு திருமறைத்தீபத்தின் முதல் இதழில், போதகர் பாலா அவர்கள் போதகர் அல்பர்ட் மார்டினின் “வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை” என்ற ஆக்கத்தைத் தமிழில் வெளியிட்டார். அதற்கு முன்பு திருமறைத்தீபத்தில் அவரைப் பற்றிய தகவல்கள் வந்திருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை; ஒருவேளை வந்திருந்தாலும் நான் அதைக் கவனிக்காமல் போயிருக்கலாம். கர்த்தருடைய பராமரிப்பு ஆச்சரியங்களால் நிறைந்தது என்பதை நான் நம்புகிறேன். அந்த ஆச்சரியங்களில் ஒன்றாகவே, திருமறைத்தீபத்தில் அந்த ஆக்கம் வெளிவந்த தருணத்தை நான் உணர்ந்தேன். அக்காலகட்டத்தில், திருமறைத்தீபத்தின் பிழைதிருத்தும் பணியில் போதகர் பாலா அவர்களுக்கு நான் உதவியாக இருந்ததால், போதகர் மார்டினைப் பற்றியும் அவருடைய ஊழியத்தைப் பற்றியும் அவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். ஆனால் வருத்தம் என்னவென்றால், போதகர் மார்டின் 2008 ஆம் ஆண்டோடு தன்னுடைய சபையின் மூப்பர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பதுதான். உண்மையில் அது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவருடைய பல வருட ஊழியத்தின் பிரசங்கங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது என்பது எனக்குப் பெரும் ஆறுதலாக அமைந்தது.

2. போதகர் அல்பர்ட் மார்டின்: பிரசங்க ஊழியத்தில் என் ஆசான்

போதகர் அல்பர்ட் மார்டினைப் பிரசங்க ஊழியத்தில் ‘என் ஆசான்’ என்று குறிப்பிடுவதை மிகுந்த தயக்கத்துடனேயே தெரிவிக்கிறேன். ஏனென்றால், கர்த்தருக்காக அவர் ஆற்றிய பணிகளும், அவருடைய பிரசங்க வரமும், அவரை என் ஆசான் என்று சொல்வது ஓர் அசட்டுத் துணிச்சலோ என்ற எண்ணத்தையே எனக்குள் ஏற்படுத்துகிறது. இருப்பினும், போதகர் அல்பர்ட் மார்டினின் பிரசங்க ஊழியத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட எந்தவொரு பிரசங்கியும், அவரைத் தன் ஆசான் என்று தைரியமாக சொல்லுவார்கள் என்றே எண்ணுகிறேன். இது அசட்டுத் துணிச்சலல்ல, மாறாக அவருடைய ஊழியத்தினால் பெற்ற நன்மையின் காரணமாக அவர் மீது கொண்ட பேரன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு. இதை நான் வெறும் வார்த்தைக்காகவோ அல்லது அவருக்கான புகழஞ்சலியாகவோ சொல்லவில்லை என்பதற்கு என் சபை மக்களே சாட்சிகளாக இருக்கிறார்கள். அவருடைய பிரசங்க ஊழியத்தின் மூலம் நான் பெற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை என் சபை மக்களிடம் நன்றியோடு பகிர்ந்துகொள்ளுவது மட்டுமல்லாமல், அந்த ஆசீர்வாதத்தை அவர்களும் பெறுகிற விதத்தில், அதன் பலனை அவர்களுக்கான ஊழியத்தில் நான் பயன்படுத்தியிருக்கிறேன், தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறேன்.

பிரசங்க ஊழியத்தைக் குறித்துப் புகழ்பெற்ற இறையியலாளர்களின் முக்கிய நூல்கள் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். ஸ்பர்ஜனின் “பிரசங்கிகளுக்கான அறிவுரை”, போதகர் பாலா அவர்கள் எழுதிய “பிரசங்கிகளும் பிரசங்கமும்”, மற்றும் ஸ்டூவர்ட் ஆலியட்டின் “Preaching: Pure and Simple” போன்ற புத்தகங்கள் பிரசங்கத்தைக் குறித்து அநேக காரியங்களை அறிந்துகொள்ள எனக்குப் பேருதவியாக இருந்திருக்கின்றன. ஆனால், போதகர் அல்பர்ட் மார்டினின் பிரசங்கங்களோ, பிரசங்கத்தைக் குறித்து நான் படித்த அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வாழும் வழிகாட்டியாக அமைந்தன; இன்றும் அவ்வாறே இருந்து வருகின்றன.

2009 ஆம் ஆண்டிலிருந்து சில வருடங்களுக்கு, இணையத்திலிருந்த போதகர் மார்டினின் பிரசங்கங்களை, ஒவ்வொரு நாளும் ஒரு பிரசங்கமாவது கேட்கிற விதத்தில் தொடர்ந்து கேட்டு வந்தேன். சில பிரசங்கங்களை மூன்று, நான்கு முறைகூடத் திரும்பக் கேட்டதுண்டு. ஆரம்பத்தில் வேத சத்தியங்களை ஆழமாக அறிய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவற்றைக் கேட்டேன். ஆனால், அது மெல்ல மெல்ல என்னை அறியாமலேயே, என்னுடைய பிரசங்க ஊழியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க, சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை பிறகு என்னால் உணர முடிந்தது.

போதகர் அல்பர்ட் மார்டின், “Here We Stand” என்ற தலைப்பில், வேதத்தின் அடிப்படைச் சத்தியங்களைக் குறித்த ஒரு நீண்ட தொடர் பிரசங்கத்தைத் தன் சபைக்குப் போதித்திருந்தார். ஆரம்பத்தில் ஒரு சிறு தொடராகத் தொடங்கப்பட்ட அது, பின்னர் 100க்கும் மேற்பட்ட செய்திகளைக் கொண்ட நீண்ட தொடராக நிறைவு பெற்றது. அதை ஆதாரமாகக் கொண்டு, என்னுடைய சபையிலும் “அடிப்படை சத்தியங்களில் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் நான் பிரசங்கித்தேன். அந்தப் பிரசங்கத் தொடரின்போது, என் சபை மக்களோடு சேர்ந்து நானும் சத்தியத்தில் மட்டுமன்றி, பிரசங்கிக்கும் முறையிலும் வளர கர்த்தர் அந்தத் தொடரைப் பெரிதும் ஆசீர்வதித்தார். இதன் காரணமாகவே போதகர் அல்பர்ட் மார்டின் அவர்களைப் பிரசங்க ஊழியத்தில் என் ஆசான் என்கிறேன்.

3. போதகர் அல்பர்ட் மார்டினின் பிரசங்க ஊழியத்தின் சிறப்பு

போதகர் மார்டின் அவர்களின் பிரசங்க ஊழியத்தின் சிறப்பினை விவரிக்கும் அளவுக்கு என்னை நான் தகுதியுள்ளவனாகவோ, திறமையுள்ளவனாகவோ கருதவில்லை. இருப்பினும், அவருடைய ஊழியத்தினால் ஆவிக்குரிய பலனடைந்தவன், தொடர்ந்து பலனடைந்து வருகிறவன் என்ற முறையில், நான் கவனித்த மற்றும் அனுபவித்த சில சிறப்புகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

முதலாவதாக, போதகர் மார்டின், தன் பிரசங்கத்தைக் கேட்கிறவர்கள், செய்தியின் ஊடாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் காண வேண்டும் என்பதில் எப்போதும் கண்ணும் கருத்துமாய் இருந்தார். இதற்கான சான்றாக, அவருடைய 2,000க்கும் மேற்பட்ட பிரசங்கங்களைக் கேட்க வேண்டிய அவசியமில்லை; அவர் மூப்பர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றபோது ஆற்றிய பிரியாவிடைப் பிரசங்கத் தொடரின் முதல் செய்தியிலேயே இதைக் காண முடியும். (இத்தொடர் தமிழில், “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்” என்ற தலைப்பில் நூலாக சீர்திருத்த வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கிறது.)

அந்தப் பிரசங்கத்தின் கருப்பொருளாக அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலிக்கின்றன:

“விசுவாசத்தோடும் அன்போடும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். அந்த விசுவாசமும் அன்பும் அவருடைய வார்த்தைக்குத் தீர்மானத்துடன் கீழ்ப்படிவதாக இருக்கட்டும்.”

46 ஆண்டு காலம் அவர் ஆற்றிய பிரசங்க ஊழியத்தின் அடிநாதமாக விளங்கியது இந்த உன்னத நோக்கம் மட்டுமே.

இரண்டாவதாக, போதகர் மார்டின் எப்போதும் திருச்சபையை மையமாகக் கொண்டும், விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் பிரசங்கித்தார். இதையும் அவருடைய இறுதிப் பிரசங்கத் தொடரிலேயே கவனிக்கலாம்.

“இயேசுவை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்” என்று முதல் பிரசங்கத்தில் சொல்லிவிட்டு, அதற்கு அடுத்த பிரசங்கத்திலேயே விசுவாசிகளின் சபை வாழ்க்கையைக் குறித்துப் போதிக்கத் தொடங்கினார். சபை வாழ்க்கையைக் குறித்து மட்டுமே தொடர்ந்து நான்கு செய்திகளை வழங்கினார். அதில், திருச்சபையின் தனித்துவம், அதன் கோட்பாட்டுத் தூய்மை, மற்றும் சபை அங்கத்துவத்தின் தகுதிகள் ஆகியவற்றில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்பதை மிக உறுதியாக வலியுறுத்தினார்.

மூன்றாவதாக, போதகர் மார்டின் வேத சத்தியங்களில் ஒருபோதும் வளைந்துகொடுத்ததில்லை. அவர் மூப்பர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, பிரஸ்பிடீரியன் சபை மக்கள் மத்தியில் நடைபெற்ற ஒரு குடும்பக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போது, கிறிஸ்தவக் குடும்பம் தொடர்பான பல காரியங்களைக் குறித்து விளக்கியவர், ஒரு கட்டத்தில் பிரஸ்பிடீரியன்கள் பின்பற்றுகிற குழந்தை ஞானஸ்நானத்தை வேதபூர்வமாக நிரூபிக்க முடியாது என்பதை எவ்விதத் தயக்கமுமின்றி நேரடியாகக் குறிப்பிட்டார்.

இதை அவர் மேடை நாகரிகமற்ற முறையிலோ, அவர்களைக் கேலிச் செய்கிற விதமாகவோ, கடிந்துரைக்கிற விதமாகவோ செய்யவில்லை. மாறாக, அன்போடும், அக்கறையோடும், அவர்களோடு தனக்கிருந்த நட்புரிமையோடும் எடுத்துரைத்தார். அவர் எந்த மேடையில் நின்றாலும், வேத சத்தியத்திற்கு மட்டுமே உண்மையாக வாழ்ந்தார் என்பதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு.

நான்காவதாக, போதகர் மார்டின் ஒருபோதும் தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டதில்லை. கர்த்தர் தம்முடைய சபைக்குப் பல்வேறு வரங்களைப் பகிர்ந்தளித்திருக்கிறார் என்ற சத்தியத்தின்படி, பழங்கால இறையியலாளர்கள் மட்டுமன்றி, தன் சமகாலத்துப் பிரசங்கிகளின் வரங்களையும் அவர் தன்னுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காக பயன்படுத்தியது மட்டுமல்லாமல், தன் சபை மக்களும் அவர்களின் வரங்களினால் பயனடையும் பொருட்டு, அவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தன் பிரசங்கங்களில் சுட்டிக்காட்ட அவர் தயங்கியதே இல்லை.

தற்காலத்தில், யாருடைய பிரசங்கங்களைக் கேட்பது, யாருடைய புத்தகங்களை வாசிப்பது என்ற குழப்பம் பலருக்கு உண்டு. ஆனால், போதகர் மார்டினின் பிரசங்கங்களைத் தொடர்ந்து கேட்பதன் மூலம், நம்பகமான பல விசுவாசமிக்க இறையியலாளர்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும். பழங்கால இறையியலாளர்கள் மட்டுமல்ல, தன் சமகாலத்தில் வாழ்ந்த, தன்னைவிட வயதில் இளையவர்களின் வரங்களையும் அவர் பெரிதும் மதித்திருக்கிறார். மார்டின் லொயிட் ஜோன்ஸ், ஸ்டூவர்ட் ஆலியட், ஜொயல் பீக்கி, சின்க்ளெயர் ஃபர்கசன் போன்றோரின் புத்தகங்களைப் பல பிரசங்கங்களில் அவர் ஆவலோடு பரிந்துரைத்ததை நான் கவனித்திருக்கிறேன்.

ஐந்தாவதாக, போதகர் மார்டின், தூய்மைவாதிகளின் பாணியில், மனிதத் தன்மையின் எதார்த்தங்களைக் கொண்ட நடைமுறைப் பிரசங்கங்களைச் செய்தார். மனிதனுடைய உடல் உறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு அவர் ஆற்றிய ஒரு பிரசங்கத் தொடரில், “காது” என்ற உறுப்பைக் குறித்து அவர் விவரித்த குறிப்புகள் எவ்வளவு உண்மையானவை என்பதை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்தேன்.

நான் போதகர் மார்டினின் பிரசங்கங்களைக் கேட்கத் தொடங்கியபோது, சத்தியத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் கேட்டேனே தவிர, என் பிரசங்க முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. ஆனால், தொடர்ச்சியாகக் கேட்டு வந்ததன் விளைவாக, நாளடைவில் என்னை அறியாமலேயே என் பிரசங்க நடையில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டதை நான் கவனித்தேன். இதில் நிச்சயமாகக் கர்த்தருடைய பராமரிப்பின் ஆசீர்வாதம் இருந்தது என்பது உண்மை. ஆனால் அந்த ஆசீர்வாதத்தைக் கர்த்தர் தன்னுடைய மக்கள் அவர்களின் காதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதன் மூலம் செய்கிறார். அதாவது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சியில் நம்முடைய காதின் பங்கு மிக முக்கியமானது.

இதன்காரணமாகவே அவர், கர்த்தருடைய வார்த்தை தன் பிரசங்கத்தைக் கேட்பவர்களின் ஆத்துமாவிற்குள் ஆழமாக ஊடுருவிப் பாய்கிற விதமாக அவர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களின் காதுகளில் அவற்றைக் கொண்டு போய் சேர்ப்பதில் மிகவும் அக்கறைகாட்டியிருக்கிறார். அவருடைய போதக இறையியல் புத்தகத்தில், ஒரு பிரசங்கி, தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்கள், தான் சொல்லுகிற வார்த்தைகளைக் கவனத்தோடு கேட்பதற்கான நீதியான எல்லா வழிமுறைகளையும் கவனத்துடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

4. போதகர் அல்பர்ட் மார்டினின் பிரசங்கக் களஞ்சியத்திலிருந்து சில முத்துக்கள்

போதகர் மார்டினின், “Here We Stand” என்ற பிரசங்கத் தொடர், ஒரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் தொகுப்பைப் போல பரிசுத்த வேதாகமத்தில் தொடங்கி, இயேசுவின் இரண்டாம் வருகையின் மகிமைப்படுதல் வரையிலான அனைத்து அடிப்படைச் சத்தியங்களையும் கொண்டதாக இருக்கிறது. எளிய முறையில், அதேசமயம் சத்தியத்தில் எவ்வித சமரசமும் இன்றி, சபையின் அன்றாட வாழ்விற்கான நடைமுறைப் பயன்பாடுகளோடு இத்தொடர் அமைந்திருந்தது. கிறிஸ்தவ வரலாற்றில் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு கோட்பாடு, இரட்சிப்பில் கடவுளின் ‘தெரிந்துகொள்ளுதல்’ பற்றிய போதனையாகும். தேவனுடைய தெரிந்துகொள்ளுதல் பாரபட்சமானது, அநீதியானது என்ற எண்ணம் மனிதர்களுக்கு இயல்பாகவே எழக்கூடும். இதை விளக்குவதற்கு அவர் கையாண்ட ஓர் எளிய உதாரணம் இச்சத்தியத்தை எவ்வளவு அழகாக விளக்குகிறது பாருங்கள்.

“ஒரு பெரிய வீடு தீப்பற்றி எரிகிறது; அதற்குள் 10 பேர் சிக்கியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, அங்கிருக்கும் ஒருவர் துணிச்சலாக எரியும் வீட்டிற்குள் நுழைந்து, அவர்களைக் காப்பாற்ற முயல்கிறார். அவர் தன் முழுப் பலத்தோடு போராடி 8 பேரைக் காப்பாற்றிவிடுகிறார். துரதிர்ஷ்டவசமாக, மீதமிருந்த இருவர் அந்த நெருப்பிலேயே கருகிவிடுகின்றனர். அப்போது, அங்கிருக்கும் மக்கள் ஓடிவந்து, 8 பேரைக் காப்பாற்றிய அந்த மனிதரைப் பார்த்து, ‘நெருப்பில் மடிந்த அந்த இருவர் உனக்கு என்ன துரோகம் செய்தார்கள்? ஏன் அவர்களை அநியாயமாகக் கைவிட்டாய்?’ என்று கேட்டால் அது எவ்வளவு அறியாமை? அப்படிக் கேட்பவர்களைப் புத்திமான்கள் என்று சொல்ல முடியுமா? 8 பேரைக் காப்பாற்றிய அவரது தியாகத்தைப் பாராட்ட வேண்டுமே தவிர, மீதமுள்ள இருவரைக் குறித்து அவரிடம் குறை காண்பது முறையான சிந்தனை அல்ல.”

இதைப்போலவே, இரட்சிப்பில் கடவுளின் தெரிந்துகொள்ளுதல் என்பது, தகுதியற்ற நமக்கு அவர் காட்டிய அளவற்ற கிருபையையும் தேவ அன்பின் சிறப்பையும் போற்றித் துதிப்பதற்கே அன்றி, அவரிடம் குறை காண்பதற்கல்ல என்பதை மிகத் தெளிவாக விளக்கினார்.

அடுத்து, “தேவபயம்” என்ற தலைப்பில் 9 செய்திகளைக் கொண்ட ஒரு பிரசங்கத் தொடரை அவர் வழங்கியிருந்தார். இந்தப் பிரசங்கங்கள் ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்து, பின்னர் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நூலைச் சீர்திருத்த வெளியீடுகள் மூலமாகத் தமிழில் கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்யும்படி போதகர் பாலா அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார். அந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்த வேளையில், பலமுறை இடையில் நிறுத்தி ஜெபித்திருக்கிறேன். அந்தளவுக்கு தேவபயத்தைக் குறித்த வேத சத்தியங்களை மனித மனச்சாட்சியை உலுக்கும் வண்ணம் அவர் பிரசங்கித்திருந்தார். நான் இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்பதை, அந்தப் பிரசங்கத்தைக் கேட்ட அல்லது அந்தப் புத்தகத்தை வாசித்த எவரும் மறுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

அடுத்து, போதகர் மார்டின் அதிகமாக பிரசங்கித்த தலைப்புகளில் ஒன்று, மனிதனுடைய “பேச்சு”. இணையப் பதிவுகளின்படி மூன்று பிரசங்கத் தொடர்களைச் செய்திருக்கிறார். பேச்சு மற்றும் நாவின் முக்கியத்துவத்தையும், அதன் நன்மை தீமைகளையும் விரிவாக விளக்கியிருக்கிறார். அதில் ஒரு பிரசங்கத்தின் தலைப்பு “When Silence is Sin”. இந்தத் தலைப்பு, பேச்சைக் குறித்த வேத சத்தியங்களை அவர் எவ்வளவு ஆழமாக ஆராய்ந்து போதித்திருக்கிறார் என்பதை நமக்குக் காட்டுகிறது.

மேலும், லூக்கா 8:18ல் உள்ள நம் ஆண்டவருடைய வார்த்தைகளான, “உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்ற வசனத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘வேத பிரசங்கத்தைக் கேட்க வேண்டிய முறை’ குறித்து 16 செய்திகள் அடங்கிய ஒரு தொடரை வழங்கியிருக்கிறார். பெரும்பாலானோர், இப்பகுதியை ‘விதைக்கிறவன் உவமையின்’ நிறைவாக மட்டுமே கடந்து போவார்கள். ஆனால், அவரோ இது வேத பிரசங்கத்தைக் கேட்க வேண்டிய முறையைக் குறித்து நமக்குத் தரும் எச்சரிப்பை விவரிக்கிறது என்று சொல்லி, பிரசங்கத்தைக் கேட்பதற்கு முன், கேட்கும் போது, கேட்ட பின்பு என மூன்று நிலைகளில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை ஆழமாகப் போதித்திருக்கிறார்.

இறுதியாக, போதகர் அல்பர்ட் மார்டின் அவர்களின் ஊழிய பொக்கிஷத்தில், சிறந்த முத்தாகப் பார்க்கப்படுகிற, போதகர்களுக்காக அவர் நடத்திய இறையியல் வகுப்புகளின் தொகுப்புகள். இவை ஆடியோ பதிவுகளாக இணையத்தில் கிடைப்பதுடன், மூன்று பாகங்கள் கொண்ட புத்தகமாகவும் வெளிவந்துள்ளன. கர்த்தருடைய சபையில் ஆவிக்குரிய தலைமைத்துவப் பொறுப்பில் இருப்பவர்களின் வாழ்க்கை, பிரசங்கம் மற்றும் போதகப் பணி தொடர்பான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான கருவூலம் இது. இந்தத் தொகுப்பில் உள்ளவை வெறும் எழுத்துக்கள் அல்ல; கர்த்தருடைய பணியில் போதகர் மார்டின் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையின் உண்மைப் பிரதிபலிப்பு. 1960களில் அவர் ஆற்றிய ஆரம்பகால பிரசங்கங்களையும், அவருடைய ஊழியத்தின் இறுதிப் பிரசங்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குத் துலங்கும்.

போதகர் மார்டினின் இந்தப் ‘போதக இறையியல்’ நூலுக்கு முன்னுரை எழுதிய புகழ்பெற்ற இறையியலாளர் ஜொயல் பீக்கி, அதன் முதல் வரியிலேயே இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“நான் இளம் ஊழியனாக இருந்த காலகட்டத்தில், போதகர் அல்பர்ட் மார்டினின் பிரசங்க ஆடியோ பதிவுகள் எனக்குக் கிடைத்தன. அவை அறிவுக் கூர்மையும் ஆத்மீக ஞானமும் நிறைந்த ஒரு தங்கச் சுரங்கமாக எனக்கு அமைந்தன.”

ஜொயல் பீக்கியின் இந்த வார்த்தைகள் என் வாழ்விலும் முற்றிலும் உண்மையானவை. எனக்கு மட்டுமல்ல, வேதம் போதிக்கும் சீர்திருத்த சத்தியங்களின் மீது தாகமும் ஆர்வமும் கொண்ட எவரொருவரும், போதகர் அல்பர்ட் மார்டினின் பிரசங்கங்களைக் கேட்டால், நிச்சயமாக இவ்வார்த்தைகளை முழுமனதோடு ஆமோதிப்பார்கள்.

போதகர் அல்பர்ட் மார்டினின் பிரசங்கங்கள், அவர் 46 ஆண்டுகள் மூப்பராகப் பணியாற்றிய திரித்துவ பாப்திஸ்து திருச்சபையின் இணையதளத்திலும் (https://www.trinitymontville.org/sermon-audio), www.sg-audiotreasures.org/am.htm,  மற்றும் https://www.sermonaudio.com/gb/speakers/12331/ போன்ற தளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளன. நேரத்தை ஒதுக்கி இவற்றைக் கேட்டு ஆவிக்குரிய பலனடையுங்கள்.

போதகர் அல்பர்ட் மார்டின் கர்த்தரிடம் சென்றடைந்திருக்கிற இந்த வேளையில், அவரைப் பற்றிய நினைவுகள் இந்த வசனத்தையே எனக்கு நினைவூட்டுகிறது.

“தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” (எபிரெயர் 13:7)

போதகர் அல்பர்ட் மார்டின் போன்ற தேவ மனிதர்களை நம்முடைய தலைமுறையில் கர்த்தர் தந்திருப்பது, அவர்களின் ஊழியத்தை வெறும் மனிதர்களாக நாம் மெச்சிக் கொள்வதற்காக அல்ல. மாறாக, அவர்கள் காட்டிய விசுவாசப் பாதையில் நாமும் கர்த்தரைப் பின்தொடர வேண்டும் என்பதற்காகவே! எனவே, போதகர் அல்பர்ட் மார்டின் தன்னுடைய பிரியாவிடைப் பிரசங்கத்தில் சொன்னது போல்,

“விசுவாசத்தோடும் அன்போடும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இறுகப் பற்றிக்கொள்ளுவோம். அந்த விசுவாசமும் அன்பும் அவருடைய வார்த்தைக்குத் தீர்மானத்துடன் கீழ்ப்படிவதாக இருக்கட்டும்.” ஆமென்.

– ஜேம்ஸ்,
போதகர்,
கிருபை சீர்திருத்த திருச்சபை, சென்னை

2 comments on போதகர்களின் போதகன்

  1. போதகர் ஆல்பர்ட் மார்டின் அவர்கள் உங்களுடைய ஊழியத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்று இந்த ஆக்கத்தை வாசிக்கின்றபோது அறிந்து கொள்ள முடிகிறது பாஸ்டர். அவர் போதர்களுக்கெல்லாம் போதகர் என்பது உண்மையும் சரியானதும் கூட. அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள் என்ற புத்தகத்தை நான் வாசித்து இருக்கிறேன், அதில் பல காரியங்கள் குறித்து விளக்கியிருந்தாலும் அதில் “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசமும், அன்பும் உடையவர்களாக, அவரை ஒரு நபராக எண்ணி, விடாமல் இறுக்கமாக பற்றிக்கொள்ளுங்கள்” என்ற கருப்பொருளில் அவர் பிரசங்கித்தது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.

  2. Dear pastor,
    போதகர் அல்பர்ட் என் மார்டின் பிரசங்க ஊழியத்தில் உங்களுடைய ஆசான் என்பதை பலமுறை உங்கள் வாய்மொழி வார்த்தையாகக் கேட்டிருப்பதோடு, உங்கள் பிரசங்க தயாரிப்பு முறை மற்றும் பயன்பாடுகளில் அதன் ஆதிக்கத்தை அதிகமாக உணர்ந்திருக்கிறேன்; குறிப்பாக அவரது போதகர்களுக்கான பிரசங்க தயாரிப்பு குறிப்புகளை வாசித்த போது அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடியான ஒரு ideal பிரசங்கியாக உங்களைக் கண்டிருக்கிறேன்; உங்களுடைய இந்த ஆக்கம் அதற்கான ஒரு ஆவணச் சான்று மட்டுமே! அதைத் தெளிவாக எழுத்துருவில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். போதகர் மார்டினை ஆசான் ஆக கொண்ட உங்களை நாங்கள் போதகரராகப் பெற்றிருப்பது வரப்பிரசாதம் ஆகும். அதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். போதகர் மார்டின் மரித்தும், இன்றும் பேசுகிறார் உங்களைப் போன்றோரின் மூலமாக!!!
    கர்த்தருடைய பராமரிப்பின் ஆச்சரியங்களில் ஒன்றாக, போதகர் அல்பர்ட் என் மார்டின் அவர்களின் பிரசங்கங்களைச் சீர்திருத்த வெளியீடுகள் மூலமாக வாசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. போதகர் பாலா மூலமாக கிருபையின் போதனைகளோடு உறவு ஏற்பட்ட ஆரம்ப நாட்களில், சீர்திருத்த வெளியீடுகள் மூலமாக வெளிவந்த அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி வாசிப்பது என்று நானும் எனது கணவரும் முடிவு செய்தோம். அது நிகழ்ந்தது 2019 – ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்படி வாங்கியப் புத்தகங்களில் முதலில் வாசித்தது ‘ உன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள் இருக்கும் பொல்லாத இதயமும் ‘ என்ற போதகர் மார்டினின் சுவிசேஷ பிரசங்கம். அது ஒரு மிகவும் சிறிய , வெறும் 15 பக்கங்களைக் கொண்ட கையேடு. ஆனால் அது விளக்கும் மூலப் பாவம் மற்றும் எனக்குள் இருக்கும் பொல்லாத இதயம் குறித்த வேதச் சத்தியங்கள் என்னுடைய சிந்தனையில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது; மெய்யாக அதன் அட்டைப்படத்தில் காணப்படும் சுத்தியல் கொண்டு ஓங்கி அடித்து போலவே இருந்தது. அதைத் தொடர்ந்து அவரது சுவிசேஷ பிரசங்க கையேடுகள் மற்றும் பிற தமிழ் நூல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வாசித்து பயனடைந்தேன். சுமார் 2 வருடங்களுக்கு முன்பிருந்து அவரது ஆடியோ பிரங்கங்களையும் அவ்வப்போது கேட்டு வருகிறேன். இது அது என்று பிரித்துக் கூற முடியாத அளவுக்கு பரந்த அளவில் அவரது இறையியல் போதனைகள் மற்றும் நடைமுறை பிரசங்க பயன்பாடுகள் எனக்குள் வேரூன்றி இருக்கிறது. எல்லோரும் அறிந்திருக்கிறபடி அவர் ஆத்துமாவை ஊடுருவி பிரசங்கிக்கும்படி ஆவியாகிய தேவனால் வழிநடத்தப்பட்ட ஒரு வல்லமையானப் பிரசங்கி. ஆனால் தனிப்பட்ட விதத்தில் அவரை நான் எப்போதும் ” ஆத்மீக விதத்தில் மந்தையிலிருந்து சிதறிப்போன ஒரு பெலவீனமான ஆடு எதிர்பார்த்து ஏங்கும் அனைத்து குணாதிசயங்களையும் கொண்ட ஒரு அற்புதமான ஆத்மீக மேய்ப்பனாகவே” கண்டிருக்கிறேன். அவர் மூலமாக கர்த்தர் எனக்கு அளித்துள்ள அனைத்து ஆத்மீக நன்மைகளுக்காக எப்போதும் நன்றியுள்ளவளாக இருக்கவும், நடைமுறை வாழ்க்கையில் அதை வெளிப்படுத்தி வாழவும் உறுதி செய்கிறேன். மறுமையில் நமது இரட்சகரைக் காணும் போது அவரது முகப்பிரகாசத்திலிருந்து நமது முகத்தைத் திருப்ப முடியுமா என்றுத் தெரியவில்லை. ஆனால் அங்கிருக்கும் பரிசுத்தவான்களோடு உறவாட முடியுமானால் கண்டிப்பாக எனது உளமார்ந்த நன்றிகளை போதகர் மார்டினுக்கு தெரிவிப்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உங்கள் கேள்விகள்?