30. திருவிருந்து

1. இயேசு கிறிஸ்து தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அதே நாளில் திருவிருந்தை ஏற்படுத்தித் தந்தார். கிறிஸ்துவின் மரண பலியைக் காட்டவும், அவரைத் தொடர்ந்து நினைவு கொள்ளவும், உலக முடிவு பரியந்தமும் திருவிருந்து அவரது சபைகளில் அனுசரிக்கப்பட வேண்டும். கிறிஸ்துவின் பலியினால் ஏற்பட்ட அனைத்துப் பலாபலன்களும் பரிசுத்தவான்களுக்கு உரியது என்பதை நிரூபிக்கவும் இது ஏற்படுத்தப்பட்டது. மேலும், கிறிஸ்துவில் அவர்களுடைய ஆத்மீக சக்தியையும் வளர்ச்சியையும் விஸ்தரிக்கவும் கிறிஸ்துவுக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யும்படி அவர்களை கிறிஸ்துவோடு இணைக்கும் அனைத்தையும் உறுதிபெறச் செய்யவும் இது ஏற்படுத்தப்பட்டது. விசுவாசிகளுக்கு கிறிஸ்துவுடனும், ஒருவருக் கொருவருடனும் இருக்கும் ஐக்கியத்தைக் கட்டுவதாகவும் உறுதிப்படுத்துவதாகவும் திருவிருந்து இருக்கிறது.

1 கொரிந்தியர் 10:16,17,21; 11:23-26.

2. இத்திருநியமத்தின் மூலம் கிறிஸ்து பிதாவுக்கு பலியாகக் கொடுக்கப்படுவதில்லை. அதுமட்டுமன்றி உயிரோடிருப்பவர்களுடையதும், மரித்தவர்களினதும் பாவ நிவாரணத்திற்காக இதன் மூலம் எந்தப் பலியும் செலுத்தப்படுவதில்லை. கிறிஸ்து சிலுவையில் எப்போதைக்குமாக ஒரே தடவை தன்னையே பலியாகக் கொடுத்ததை நினைவுகூருவதாகவே திருவிருந்து இருக்கிறது. அத்தோடு கல்வாரியில் ஒரே தடவை நிகழ்ந்த அந்தச் செயலுக்காக கடவுளுக்குக் கொடுக்கக்கூடிய ஆத்மீகத் துதியாகவும் இது இருக்கிறது. ஆகவே, போப் (றிஷீஜீமீ) கொடுக்கும் மாஸ் (விணீss) என்று அழைக்கப்படும் பலி சகிக்கமுடியாததாகவும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பாவ நிவாரணத்திற்கான ஒரே பரிகாரப்பலியான கிறிஸ்துவின் பலியைப் பாதிக்கிறதாகவும் இருக்கிறது.

மத்தேயு 26:26-28; 1 கொரிந்தியர் 11:24; எபிரெயர் 9:25,26,28.

3. இத்திருநியமத்தை அனுசரிக்கும்போது தன்னுடைய போதகர்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஜெபம் செய்யுமாறும், ரொட்டியையும், திராட்சை இரசத்தையும் ஆசீர்வதித்துப் பரிசுத்தமாகப் பயன்படுத்தும்படியும் வழி நடத்துகிறார். அவர்கள் ரொட்டியைக் கையில் எடுத்து அதை உடைத்தபின், கோப்பையையும் கையில் எடுத்து அவை இரண்டையும் விசுவாசிகளுக்குக் கொடுப்பதோடு தாமும் அதேவேளை அத்திருவிருந்தில் கலந்துகொள்ள வேண்டும்.

1 கொரிந்தியர் 11:23-26.

4. கோப்பையை ஆத்துமாக்களுக்கு கொடுக்க மறுப்பதும், திருவிருந்தின் சாதனங்களை ஆராதிப்பதும், அவற்றை உயர்த்திப் பிடிப்பதும், அவற்றை மகிமைப்படுத்தும்படியாக தூக்கிச் செல்லுவதும், சமய ஆசாரங்களுக்காக அவற்றை ஒதுக்கி வைப்பது போல் நடிப்பதும், திருவிருந்தின் தன்மைக்கு எதிரானதும், அதை ஏற்படுத்திய கிறிஸ்துவின் நோக்கங்களுக்கும் மாறானவையாகும்.

யாத்திராகமம் 20:4,5; மத்தேயு 15:9; 26:26-28.

5. திருவிருந்தின் வெளிப்புறச் சாதனங்களான ரொட்டியும், திராட்சை இரசமும் முறையாக திருவிருந்திற்காக தயார் செய்து வைக்கப்படும்படியாக கிறிஸ்து நியமித்துள்ளார். இவை இரண்டும் சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவரோடு அடையாளபூர்வமான தொடர்புடையவையாக இருந்தபோதும், சில வேளைகளில் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் பொருள்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. அதாவது, கிறிஸ்துவின் சரீரமும், இரத்தமும் என அவை அழைக்கப்படுகின்றன. அவை திருவிருந்தில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையிலேயே தமது தன்மையிலும், சாரத்திலும் எந்தவித மாற்றமுமடையாமல் ரொட்டியாகவும், திராட்சை இரசமாகவும் இருக்கின்றன.

1 கொரிந்தியர் 11:26-28.

6. திருவிருந்தின் நியமங்களான ரொட்டியும், திராட்சை இரசமும் ஆசாரியர் அதைக் கையாளும்போதோ அல்லது வேறு விதத்திலோ மாற்றமடைந்து கிறிஸ்துவின் சரீரமாகவும், இரத்தமாகவும் மாறுகின்றன என்ற “பொருள் மாற்றமைவுத் தத்துவம்” (Transubstantiation) வேதாகமத்திற்கு முரணானது மட்டுமல்லாமல் பொது அறிவுக்கும், காரணகாரிய சிந்தனைக்கும் முரணானது. அத்தோடு, இது திருவிருந்தின் தன்மையையே தூக்கி எறிகின்றது. இப்போதனை சகலவிதமான சிலை வழிபாட்டிற்கும், மூட நம்பிக்கைகளுக்கும் காரணமாக இருந்துள்ளது.

லூக்கா 24:6,39; அப்போஸ்தலர் 3:21; 1 கொரிந்தியர் 11:24,25.

7. திருவிருந்தில் பங்குகொள்ளத் தகுதியுடையவர்கள் புறத்தில் கண்ணுக்குப் புலனாகிற ரொட்டியையும், திராட்சை இரசத்தையும் உட்கொண்டாலும், அதேவேளை கிறிஸ்துவின் மரணத்தினால் ஏற்பட்ட பலன்கள் அனைத்தையும் சிலுவையில் மரித்த கிறிஸ்துவின் மூலம் பெற்று அனுபவிக்கிறார்கள். இதை அவர்கள் ஒரு மனிதனுடைய சரீரத்தையும், இரத்தத்தையும் உண்பதால் அனுபவிப்பதுபோல் இல்லாமல் தம்முடைய விசுவாசத்தால் அகத்தில் அனுபவிக்கிறார்கள். திருவிருந்தில் ரொட்டியையும், திராட்சை இரசத்தையும் விசுவாசிகளுடைய சரீர புலன்கள் உணவாகக்கொள்வது போல், அவற்றின் மூலம் கிறிஸ்துவின் சரீரமும், இரத்தமும் விசுவாசிகள் தம்முடைய விசுவாசத்தால் கிறிஸ்துவில் ஆத்மீக அனுபவத்தை அடைவதற்காகக் கொடுக்கப்படுகிறது. ஆனால், அவை எந்த விதத்திலும் மாம்ச ரீதியில் கொடுக்கப்படுவதில்லை.

1 கொரிந்தியர் 10:16; 11:23-26.

8. திருவிருந்தில் அபாத்திரமாய் கலந்துகொள்கிறவர்கள் கிறிஸ்துவின் சரீரத்திற்கும், இரத்தத்திற்கும் எதிராகப் பாவம் செய்கிறார்கள். அவர்களுடைய புசித்தலும், பாணம் பண்ணுதலும் அவர்களைத் தெய்வீகத் தண்டனைக்குக் கீழ் கொண்டுவருகின்றன. ஆகவே, அறியாமையுடையவர்களும், பரிசுத்தமற்றவர்களும், கிறிஸ்துவோடு ஐக்கியத்தில் வரும் தகுதியற்று திருவிருந்தில் கலந்துகொள்ளும் தகுதியில்லாதவர்களாயிருக்கிறார்கள். அந்நிலையில் அவர்கள் தொடர்ந்திருப்பார்களானால் அவர்களைத் திருவிருந்தில் கலந்துகொள்ள அனுமதித்தலாகாது. அவ்வாறு அனுமதிப்பது கிறிஸ்துவுக்கு எதிரான பெரும் பாவத்தை செய்ததாகும்.

மத்தேயு 7:6; 1 கொரிந்தியர் 11:29; 2 கொரிந்தியர் 6:14,15.