27. பரிசுத்தவான்களின் ஐக்கியம்

1. எல்லாப் பரிசுத்தவான்களும் விசுவாசத்தாலும், பரிசுத்த ஆவியாலும் தங்களுடைய தலையாகிய கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் கிறிஸ்துவோடு ஒரே ஆளாக இணைந்துவிடுகிறார்கள் என்று பொருளல்ல. இருப்பினும், அவர்கள் கிறிஸ்துவின் கிருபைகளிலும், துன்பங்களிலும், மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும், மகிமையிலும் ஐக்கியத்தை அனுபவிக்கிறார்கள். அத்தோடு அவர்கள் ஒருவரோடொருவர் அன்பால் இணைக்கப்பட்டிருப்பதால் ஏனையோரின் அனுபவங்களிலும், கிருபைகளிலும் பங்குகொள்வதோடு ஆவிக்குரியதும், இவ்வாழ்வுக்குரியதுமான காரியங்களில் பரஸ்பரம் நன்மை தரக்கூடிய பகிரங்கமானதும், தனிப்பட்டதுமான சேவைகளை செய்யக் கடமைப்பட்டுள்ளார்கள்.

யோவான் 1:16; ரோமர் 1:12; 6:5,6; 1 கொரிந்தியர் 3:21-23; 12:7; கலாத்தியர் 6:10; எபேசியர் 4:15; பிலிப்பியர் 3:10; 1 தெசலோனிக்கேயர் 5:11,14; 1 யோவான் 1:3; 3:17,18.

2. தமது விசுவாச அறிக்கையின்படி பரஸ்பர நலன்களை ஊக்குவிக்கும் கடவுள் வழிபாடு மற்றும் வேறு சிறப்பான சேவைகள் மூலம் பரிசுத்தவான்கள் பரிசுத்த ஐக்கியத்தையும் ஆத்மீகக் கூட்டுறவையும் பராமரிக்கத் தம்மை ஒப்புக்கொடுத்துள்ளனர். அவர்கள் தங்களுடைய ஆற்றலுக்கும் வசதிக்கும் தகுந்தவாறு இவ்வாழ்வுக்குரிய காரியங்களில் ஒருவருக்கொருவர் துணைசெய்ய வேண்டிய கடமைப்பாட்டையும் கொண்டுள்ளனர். நற்செய்திக் கட்டளையின்படி பரிசுத்தவான்கள் தம்மைச் சுற்றிவர இருக்கும் குடும்பத்தார் மத்தியிலும், சபை மக்கள் மத்தியிலும் பங்குகொள்ளும் இவ்வைக்கியம் கடவுள் அளிக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, எல்லா இடங்களிலும் ஆண்டவருடைய பெயரைத் தாங்கி நிற்கும் எல்லா விசுவாசிகள் மத்தியிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். அதேவேளை பரிசுத்தவான்கள் இவ்விதமாக ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் ஐக்கியம் எந்த மனிதனும் சொந்தமாகக் கொண்டுள்ள சொத்துக்களின் உரிமையை அகற்றவோ அல்லது மீறவோ மாட்டாது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

அப்போஸ்தலர் 5:4; 11:29,30; 1 கொரிந்தியர் 12:14-27; எபேசியர் 4:28; 6:4; எபிரெயர் 3:12,13; 10:24,25.