26. திருச்சபை

1. ஆவியின் உள்ளார்ந்த கிரியையையும், கிருபையின் சத்தியத்தையும் பொருத்தளவில் உலகளாவிய சபை கண்ணுக்குப் புலனாகாததொன்றாகும். அது திருச்சபையின் தலையாகிய கிறிஸ்துவுக்குள் முன்பிருந்தவர்களும், தற்போதிருக்கிறவர்களும், இனிப்பிறக்கப் போகின்றவர்களுமாகிய தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் முழு எண்ணிக்கையையும் தன்னுள் கொண்டுள்ளது. திருச்சபையானது எல்லோரையும் எல்லோருக்குள்ளும் நிறைவு செய்யும் கிறிஸ்துவில் நிறைவு பெறும் அவரது மனைவியும் சரீரமுமாகும்.

எபேசியர் 1:10,22,23; 5:23,27,32; கொலோ 1:18; எபிரெயர் 12:23.

2. தங்களுடைய விசுவாசத்தை நற்செய்திக்கு எதிரான முரண்பாடுள்ள தவறான போதனைகளின் மூலம் அழிக்க முற்படாமலும், பரிசுத்தமற்ற வாழ்க்கை வாழாமலும் நற்செய்தியை விசுவாசித்து கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு அடிபணிந்து வாழும் உலகெங்குமுள்ள அனைவரும் கண்களுக்குப் புலனாகும் பரிசுத்தவான்களாகக் கருதப்பட வேண்டும். எல்லா உள்ளூர் சபைகளும் அத்தகையோரையே கொண்டு அமைய வேண்டும்.

அப்போஸ் 11:26; ரோமர் 1:7; 1 கொரி 1:2; எபேசியர் 1:20-22.

3. உலகில் காணப்படும் எல்லாத் தூய சபைகளும் கலவைகளாலும், தவறுகளாலும் பாதிக்கப்பட்டபோதும் அவற்றில் சில கிறிஸ்தவ சபைகள் என்று அழைக்கப்பட முடியாதபடிக்கு மேலும் கீழான நிலையை அடைந்து ‘பேய்களின் குடியிருப்பாக’ உள்ளன. இருப்பினும் தன்னை விசுவாசித்து, தனது பெயரைத் தாங்கியவர்களைக் கொண்ட இராஜ்யத்தைக் கிறிஸ்து இவ்வுலகில் எப்போதுமே கொண்டிருந்ததோடு உலக முடிவுவரையும் அத்தகைய இராஜ்யத்தைக் கொண்டிருப்பார்.

சங்கீதம் 72:17; 102:28; மத்தேயு 16:18; 1 கொரிந்தியர் 5; 2 தெசலோனிக்கேயர் 2:11,12; வெளிப்படுத்தல் 2; 3; 12:17; 18:2.

4. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே திருச்சபையின் தலைவராக உள்ளார். பிதாவின் நியமனத்தின் மூலம் சபையை அழைக்கவும், நிறுவவும், கட்டளையிடவும், ஆளவும் சகல அதிகாரமும் வேறெவருக்கும் இல்லாதவகையில் இறை ஆண்மையுடன் அவருக்கே தரப்பட்டுள்ளது. ரோமன் கத்தோலிக்க சபைத் தலைவரான போப் (றிஷீஜீமீ) அந்திக் கிறிஸ்துவாக இருப்பதாலும், வேதத்தில் ‘பாவமனிதன்’ என்றும், ‘கேட்டின் மகன்’ என்றும் அழைக்கப்பட்டிருப்பதாலும், கடவுளுக்கெதிராகவும் கிறிஸ்துவுக்கெதிராகவும் திருச்சபையில் தன்னை உயர்த்தி மகிமைப்படுத்திக் கொள்வதாலும் எந்தவிதத்திலும் திருச்சபையின் தலைவராக அமைய முடியாது. கர்த்தர் தம்முடைய வருகையின் பிரசன்னத்தாலே இவர்களை அழிப்பார்.

மத்தேயு 28:18-20; எபே 4:11,12; கொலோ 1:18; 2 தெசலோ 2:2-9.

5. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழு முகமாக வேதபிரசங்கத்தின் மூலமாகவும், தனது ஆவியின் மூலமாகவும் பிதாவினால் தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ளவர்களை உலகத்திலிருந்து தன்னிடத்தில் அழைத்துக்கொள்கிறார். அவ்வாறு, தம்மால் அழைக்கப்படுபவர்கள் திருச்சபைகளை நிறுவி அவற்றின் பொது நலன்களில் அக்கறைகொண்டு, பொது வழிபாட்டையும் இவ்வுலகில் இருக்கும்வரை நடத்த வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

மத்தேயு 18:15-20; 28:20; யோவான் 10:16; 12:32.

6. கிறிஸ்துவின் தெய்வீக அழைப்பின் காரணமாகவும், அவரது அழைப்பிற்கு கீழ்ப்படிவதின் அடையாளமாக கிறிஸ்துவின் மீது தாம் கொண்டுள்ள விசுவாசத்தை அறிக்கையிடுவதன் மூலமும், அதன்படி வாழ்வதாலும், இத்திருச்சபை அங்கத்தவர்கள் பரிசுத்தவான்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் போதனைகளின்படி ஆர்வத்துடன் ஒருவரோடொருவர் ஐக்கியத்தில் வர உடன்படுவதுடன், கடவுளின் சித்தத்தின்படி ஆண்டவருக்கும் மற்றவர்களுக்கும் தம்மை ஒப்புக்கொடுத்து நற்செய்தியின் கோரிக்கைகளையும் முழு மனத்துடன் ஏற்றுக்கொள்கின்றனர்.

அப்போஸ் 2:41,42; 5:13,14; ரோமர் 1:7; 1 கொரி 1:2; 2 கொரி 9:13.

7. வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவ சித்தத்தின்படி ஒன்று சேர்க்கப்பட்ட இத்திருச்சபைகள் ஒவ்வொன்றிற்கும் அவர்கள் கடைப்பிடிக்கும்படியாக தாம் நியமித்துள்ள வழிபாட்டு முறைகளையும், ஒழுங்கு முறைகளையும் கொண்டு நடத்த அவசியமான அனைத்து வல்லமையையும், அதிகாரத்தையும் ஆண்டவர் தந்துள்ளார். அத்தோடு, இவ்வதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தத் தேவையான எல்லாக் கட்டளைகளையும், விதிகளையும் அவர் திருச்சபைகளுக்குத் தந்துள்ளார்.

மத்தேயு 18:17,18; 1 கொரிந்தியர் 5:4,5,13; 2 கொரிந்தியர் 2:6-8.

8. கிறிஸ்துவின் சித்தப்படி ஒன்று சேர்க்கப்பட்டு பூரணமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் உள்ளூர் சபை பணியாளர்களையும், அங்கத்தவர்களையும் கொண்டிருக்கும். அழைக்கப்பட்டதும், ஒன்று சேர்க்கப்பட்டதுமான சபைகளினால் கிறிஸ்துவின் நியதிப்படி தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்படும் பணியாளர்கள்: மூப்பர்களும், உதவியாளர்களுமாவர். கடவுளால் ஆணையிடப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளைச் செய்வதும், தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்காக தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதும் அவர்களது சிறப்பான பொறுப்பாகும். உலக முடிவுவரை அத்தகைய ஏற்பாடுகள் திருச்சபையில் தொடர வேண்டும்.

அப்போஸ்தலர் 20:17,28; பிலிப்பியர் 1:1.

9. கிறிஸ்துவின் நியமனத்தின்படி சபையில் மூப்பராக இருக்கத் தகுதி பெற்று, பரிசுத்த ஆவியிடம் அதற்குரிய வரங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் முழுச் சபையின் உடன்பாட்டுடன் அத்தகைய பணிக்குத் தெரிவுசெய்யப்பட்டு அழைக்கப்பட வேண்டும். சபையில் ஏற்கனவே மூப்பர்கள் இருந்தால், இவ்வாறாகத் தெரிவு செய்யப்பட்டவர்களை அவர்கள் உபவாசம் செய்து, கரங்களை வைத்து ஜெபித்து பயபக்தியுடன் அப்பணிக்கு நியமிக்க வேண்டும். இதேவிதமாகவே உதவிக்காரர்களும் முழு சபையின் உடன்பாட்டுடன் தெரிவு செய்யப்பட்டு கரங்களை வைத்து ஜெபித்து அப்பணிக்கு நியமிக்கப்பட வேண்டும்.

அப்போஸ்தலர் 6:3,5,6; 14:23; 1 தீமோத்தேயு 4:14.

10. போதகர்கள் கிறிஸ்துவின் சபைகளில் வேதத்தைப் போதித்தும், ஜெபித்தும் மனிதர்களுடைய ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருப்பதன் மூலமும் கிறிஸ்துவின் பணியில் விடாது தொடர்ச்சியாக ஈடுபட வேண்டியிருப்பதால் அவர்கள் பணிபுரியும் சபைகள் தங்களுடைய திறமைக்குத் தகுந்தபடி அவர்களுக்குத் தகுந்த மரியாதைகளை அளிப்பதுமட்டுமன்றி இவ்வுலகிற்குரிய தொழில்களில் அவர்கள் ஈடுபட வேண்டிய அவசியமின்றி வசதியுடன் வாழ்வதற்கும், மற்றவர்களுக்கு விருந்துபசாரம் செய்வதற்கும் தேவையான சகல பொருளாதார உதவிகளையும் செய்ய வேண்டியது அவர்கள் பணிபுரியும் சபைகளின் கடமைப் பொறுப்பாகும். இவ்வாறான ஏற்பாட்டை இயற்கை விதியும், நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் நற்செய்தியினாலேயே பிழைப்பு உண்டாக வேண்டுமென்று ஆணையிட்டுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தெளிவான கட்டளைகளும் கோருகின்றன.

அப்போஸ்தலர் 6:4; 1 கொரிந்தியர் 9:6-14; கலாத்தியர் 6:6,7; 1 தீமோத்தேயு 3:2; 5:17,18; 2 தீமோத்தேயு 2:4; எபிரெயர் 13:17.

11. தொடர்ந்து ஊக்கத்துடன் வேதத்தைப் பிரசங்கிப்பது மூப்பர்கள் அல்லது போதகர்களின் கடமையாயினும் அது அவர்களுக்கு மட்டுமே முழுமையாக உரித்தான பணி என்று கருதப்படக்கூடாது. ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் தகுந்த வரங்களைக் கொடுத்து ஏனையோரையும் அத்தகைய ஊழியத்திற்கு தகுதியாக்கலாம். இந்நிலையில் அத்தகைய மனிதர்கள் திருச்சபையினால் அங்கீகரிக்கப்பட்டு அவ்வூழியத்திற்கு அழைக்கப்பட்டபின் அதைச் செய்ய வேண்டும்.

அப்போஸ்தலர் 11:19-21; 1 பேதுரு 4:10,11.

12. சந்தர்ப்பம் கூடிவருகின்ற வேளையில் எல்லா விசுவாசிகளும் உள்ளூர் சபைகளுடன் தம்மை இணைத்துக்கொள்ளும் கடமைப் பொறுப்பைக் கொண்டுள்ளார்கள். ஆகவே, கிறிஸ்துவின் கட்டளையின்படி திருச்சபை ஐக்கியத்தின் சலுகைகளை அனுபவிக்க அனுமதிக்கப்பட்ட அனைவரும் அதன் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும், அரசாங்கத்திற்கும் கட்டுப்படுகிறார்கள்.

1 தெசலோனிக்கேயர் 5:14; 2 தெசலோனிக்கேயர் 3:6,14,15.

13. திருச்சபையின் ஏனைய அங்கத்தவர்களின் நடத்தையினால் பாதிப்புற்ற ஓர் அங்கத்தவர் அத்தகைய நிலைமையைத் தீர்க்குமுகமாக வேதத்தில் காணப்படும் போதனைகளின்படி நடந்த பின், சபையின் சமாதானத்தைக் குழப்பாமலும், மற்ற அங்கத்தவர்களால் பாதிக்கப்பட்ட காரணத்தால் சபைக்கூட்டங்களில் கலந்துகொள்ளாமலிருக்காமலும், திருநியம அனுசரிப்பு ஆகியவற்றைத் தவிர்க்காமலும், சபையானது இதைக்குறித்து மேலும் நடவடிக்கைகளை எடுக்கும்வரை கிறிஸ்துவில் தங்கியிருத்தல் வேண்டும்.

மத்தேயு 18:15-17; எபேசியர் 4:2,3.

14. உள்ளூர் சபைகளைச் சார்ந்த அங்கத்தவர்கள் அனைவரும் எல்லா இடங்களிலுமுள்ள எல்லாச் சபைகளின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஜெபம் செய்யக் கடமைப்பட்டிருப்பதோடு எல்லாச் சமயங்களிலும் தம்மிடம் வரும் எல்லா விசுவாசிகளுக்கும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரம்புகளுக்குட்பட்டு தங்களுடைய வரங்களாலும், கிருபைகளாலும் உதவ வேண்டும். ஆகவே, கடவுளின் பராமரிப்பு அளிக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி திருச்சபைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு ஐக்கியத்தில் வந்து இத்தகைய பலாபலன்களை அனுபவிக்க வேண்டும்.

சங்கீதம் 122:6; ரோமர் 16:1,2; எபேசியர் 6:18; 3 யோவான் 8-10.

15. கோட்பாடு அல்லது சபை ஆட்சியமைப்பு குறித்து பிரச்சனைகளோ அல்லது கருத்து வேறுபாடுகளோ ஏற்பட்டு அதில் தனியொரு சபையோ அல்லது பல சபைகளோ சம்பந்தப்பட்டிருந்து அவற்றின் சமாதானம், ஐக்கியம், வளர்ச்சி ஆகியவை ஆபத்தை எதிர்நோக்கினாலோ அல்லது ஒரு சபையின் அங்கத்தவர்கள் சத்தியத்திற்கும், சபை ஆட்சி முறைக்கும் புறம்பான சபையின் ஒழுங்கு நடவடிக்கை முறைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலோ ஐக்கியத்தில் வரும் பல சபைகள் இத்தகைய சந்தர்ப்பங்களில் தங்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மூலம் கருத்து வேறுபாடுள்ள விஷயம் பற்றி கிறிஸ்துவின் சித்தப்படியான தங்களுடைய ஆலோசனையை எல்லாச் சபைகளுக்கும் வழங்கலாம். அதேவேளை அவ்வாறு கூடிவரும் பிரதிநிதிகள் தமக்கு எத்தகைய சபை அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என்பதையும், தங்களுடைய முடிவுகளை திருச்சபைகள் மீது திணிக்கும் அதிகாரமும் தமக்கு இல்லை என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அப்போஸ் 15:2,4,6,22,23,25; 2 கொரி 1:24; 1 யோவான் 4:1.