1. உலகத்தில் எல்லோருக்கும் மேலான ஆண்டவரும் அரசருமாகிய கடவுள் மக்களின் நன்மைக்காகவும், தனது மகிமைக்காகவும் தன்கீழாக அரசையும், உயர் அதிகாரிகளையும் சமுதாயத்தை ஆள்வதற்காக ஏற்படுத்தியுள்ளார். இந்நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும், நல்வழிகளில் நடக்கும் எல்லா மனிதர்களையும் பாதுகாத்து ஊக்குவிப்பதற்காகவும், தீமை செய்பவர்களைத் தண்டிப்பதற்காகவும் கடவுள் அவர்களுக்கு வாழ்க்கை மீதும், மரணத்தின் மீதும் அதிகாரத்தைத் தந்துள்ளார்.
ரோமர் 13:1-4.
2. கிறிஸ்தவர்கள் பொதுப்பணிக்கு அழைக்கப்படும்போது அதனை ஏற்று அக்கடமைகளைச் செய்வது நியாயபூர்வமானதே. அவ்வாறு செய்யும்போது அவர்கள் பணிபுரியும் அரசுகள், நாடுகளின் நல்ல சட்டங்களுக்கு ஏற்புடையதான நீதியையும் சமாதானத்தையும் நிலைத்திருக்கச் செய்வது அவர்களது கடமையாகும்.
2 சாமுவேல் 23:3; சங்கீதம் 82:3,4; லூக்கா 3:14.
3. மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக ஆட்சியாளர்களைக் கடவுள் நியமித்திருப்பதால் கிறிஸ்தவர்கள் வெறுமனே தண்டனையிலிருந்து தப்புவதற்காகவன்று தங்களுடைய மனச்சாட்சியின் நிமித்தமும், ஆண்டவரின் பொருட்டும் தம்மை ஆளுபவர்களின் எல்லா நீதிச்சட்டங்களுக்கும் அடங்கி நடத்தல் வேண்டும். அரசர்களுக்காகவும், அதிகாரத்தில் இருக்கும் அனைவருக்காகவும், அவர்களுடைய ஆட்சிக்குக் கீழுள்ளவர்கள் பக்திவிருத்தியும், நேர்மையும் உடையவர்களாய் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ விண்ணப்பங்களையும் ஜெபத்தையும் செய்தல் வேண்டும். ரோமர் 13:5-7; 1 தீமோத்தேயு 2:1,2; 1 பேதுரு 2:17.
