22. ஆராதனையும் ஆண்டவரின் நாளும்

1. அனைத்தின் மீதும் ஆளுகையையும், இறை ஆண்மையையும் கொண்ட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று உள்ளுணர்வு காட்டுகின்றது. அவர் நீதியானவரும், நல்லவருமாக இருந்து எல்லோருக்கும் நல்லதையே செய்கிறார். ஆகவே, மனிதர்கள் தங்கள் முழு இருதயத்தோடும், ஆவியோடும், வல்லமையோடும் அவருக்குப் பயந்து, அவரில் அன்புகூர்ந்து, அவரைப் போற்றி, தொழுது, அவரில் நம்பிக்கை வைத்து அவருக்குப் பணி செய்யவேண்டும். ஆனால், ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே வழிபாட்டு முறையை தனது சித்தத்திற்கிணங்க கடவுளே ஏற்படுத்தியுள்ளார். ஆகவே, நமது வழிபாட்டு முறைகள் அவரது வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவரை, மனிதனால் உருவாக்கப்பட்ட வழிபாட்டு முறைகள் மூலமாகவோ அல்லது பிசாசின் வழிநடத்தலின்படியோ வழிபட முடியாது. கடவுளுடைய வார்த்தையின் மூலம் ஆணையிட்டுத் தரப்படாத அனைத்து வழிபாட்டு முறைகளும், கண்களுக்குப் புலனாகின்ற கடவுளைப்பற்றிய அடையாளங்களும் (உதாரணம்: சிலைகள், கடவுளைப்பற்றிய படங்கள் போன்றவை) தெளிவாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.

யாத்தி 20:4-6; உபாகமம் 12:32; எரேமியா 10:7; மாற்கு 12:33.

2. பிதா குமாரன் ஆவியாகிய கடவுளுக்கு மட்டுமே ஆராதனை உரியது. தேவ தூதர்களையோ, பரிசுத்தவான்களையோ வேறு எந்தப் படைப்புயிர்களையோ ஆராதிக்கக்கூடாது. மனிதன் பாவத்தில் வீழ்ந்தபின் மத்தியஸ்தர் ஒருவரின்றி கடவுளை வழிபட முடியாது; கிறிஸ்துவின் மத்தியஸ்தம் மட்டுமே ஏற்றக்கொள்ளத்தக்கதாகும்.

மத்தேயு 4:9,10; 28;19; யோவான் 5:23; 14:6; ரோமர் 1:25; கொலோசெயர் 2:18; 1 தீமோத்தேயு 2:5; வெளிப்படுத்தல் 19:10.

3. இயற்கையாகவே ஆராதனையின் ஒரு பகுதியாக எல்லா மனிதர்களும் தம்மை நோக்கி ஜெபம் செய்து நன்றி கூற வேண்டுமென்று கடவுள் கோருகிறார். ஆனால், அத்தகைய ஜெபங்கள் ஏற்றக்கொள்ளத்தக்கதாக அமைய பின்வருவன இன்றியமையாதவையாகும்: அவை கடவுளுடைய குமாரனின் நாமத்தில் அளிக்கப்படுவதோடு ஆவியின் துணையோடு, கடவுளுடைய சித்தத்திற்கு இணங்கியதாக அமைய வேண்டும். அதுமட்டுமன்றி அவை பயபக்தியும், தாழ்மையும், ஆர்வமும், விடாமுயற்சியும் உடையவையாய், விசுவாசம், அன்பு, அறிவாற்றல் ஆகியவற்றையும் கொண்டிருக்க வேண்டும். எல்லோருக்கும் புரியும் மொழியிலேயே கூட்டு ஜெபம் செய்யப்படல் வேண்டும்.

சங்கீதம் 65:2; 95:1-7; யோவான் 14:13,14; ரோமர் 8:26; 1 கொரிந்தியர் 14:16,17; 1 யோவான் 5:14.

4. நீதியான காரியங்களுக்கும், இப்போது வாழ்பவர்களுக்கும், இனிப் பிறக்கப்போகும் எல்லாவித மனிதர்களுக்கும் ஜெபம் செய்யப்படல் வேண்டும். ஆனால், மரணத்திற்கேதுவான பாவத்தைச் செய்தவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் நாம் ஜெபம் செய்யக்கூடாது.

2 சாமுவேல் 7:29; 12:21-23; 1 தீமோ 2:1,2; 1 யோவான் 5:16.

5. வேதாகமத்தை வாசிப்பதும், கடவுளின் வார்த்தையை அருளுரை செய்வதும், அதைக் கேட்பதும், சங்கீதங்களாலும், கீர்த்தனைகளாலும், ஞானப்பாட்டுக்களாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு இருதயத்தில் கர்த்தரைப் பாடிக்கீர்த்தனம் பண்ணுவதும், திருமுழுக்கையும், திருவிருந்தையும் கடைப்பிடித்தல் ஆகிய தெய்வீக வழிபாட்டு முறைகள் கீழ்ப்படிவோடும், அறிவுபூர்வமாகவும், விசுவாசத்தோடும், மரியாதையோடும் நடத்தப்படல் வேண்டும். அத்தோடு சிறப்பான காலங்களில் பயபக்தியோடு கூடிய தாழ்மையுடன் உணவு மறுப்பும் (உபாவசம்), நன்றி நவிலலும் பரிசுத்தத்தோடும், மரியாதையோடும் நடத்தப்படல் வேண்டும்.

யாத்திராகமம் 15:1-9; எஸ்தர் 4:16; சங்கீதம் 107; யோவேல் 2:12; மத்தேயு 28:19,20; லூக்கா 8:18; 1 கொரிந்தியர் 11:26; எபேசியர் 5:19; கொலோசெயர் 3:16; 1 தீமோத்தேயு 4:13; 2 தீமோத்தேயு 4:2.

6. இச்சுவிசேஷக் காலங்களில் நாம் ஆராதனை செய்பவராலோ அல்லது ஆராதனை நடத்தப்படும் இடத்தாலோ ஜெபமோ அல்லது ஆராதனையோ வேறு எந்த அம்சங்களோ பயனிறைவடைவதில்லை; ஏனெனில் ஆவியோடும், உண்மையோடும் கடவுளை நாம் எல்லா இடங்களிலும் ஆராதிக்க வேண்டும். உதாரணமாக, குடும்ப வழிபாட்டினாலும், தங்களுடைய தனி வழிபாட்டினாலும், பொதுவான சபை வழிபாட்டினாலும் கிறிஸ்தவர்கள் அவரை ஆராதிக்க வேண்டும். இத்தகைய வழிபாடுகள் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலும், பராமரிப்பின் அடிப்படையிலும் செய்யப்பட வேண்டும். விசுவாசிகள் அவற்றை சுய உணர்வோடு நிராகரிக்கவோ, அல்லது கவனக்குறைவினால் தவிர்க்கவோ கூடாது.

சங்கீதம் 55:17; மல்கியா 1:11; மத்தேயு 6:6; யோவான் 4:21; அப்போஸ்தலர் 2:42; 10:2; 1 தீமோத்தேயு 2:8; எபிரெயர் 10:25.

7. இயற்கையின் விதிகளின்படி எல்லோருக்கும் பொதுவான, கடவுளால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலம் அவருடைய ஆராதனைக்காக ஒதுக்கப்பட வேண்டும்; ஆகவே, தனது வார்த்தையின் மூலம் கடவுள் தனக்காக ஏழு நாட்களில் ஒரு நாளை பரிசுத்த ஓய்வு நாளாக அமையும்படியாக நிர்ணயித்துள்ளார். இது எல்லா மனிதர்களும், எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய மாறாத, ஒழுக்கம் சார்ந்த, தொடர்ந்து பின்பற்ற வேண்டிய கட்டளையாகும். உலகம் ஆரம்பித்த காலம் முதல் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள்வரை ஓய்வு நாள் வாரத்தின் இறுதி நாளாக இருந்தது. ஆனால், கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளுக்குப்பின் இது வாரத்தின் முதல் நாளாக மாற்றமடைந்து ஆண்டவரின் நாள் என்று அழைக்கப்படுகிறது. வாரத்தின் இறுதி நாளான ஏழாவது நாள் ஆராதனையின் நாளாக இருந்த முறை ஒழிக்கப்பட்டுவிட்டதால், வாரத்தின் முதல் நாள் உலக முடிவு பரியந்தம் கிறிஸ்தவ ஓய்வு நாளாகத் தொடர வேண்டும்.

யாத்திராகமம் 20:8; அப்போஸ்தலர் 20:7; 1 கொரிந்தியர் 16:1,2; வெளிப்படுத்தல் 1:10.

8. தமது இருதயத்தை ஆராதனைக்காக முறையாகத் தயார் செய்து உலகத்துக்குரிய காரியங்களையும், வீட்டுக் காரியங்களையும் ஏற்கனவே நிறைவேற்றி முடித்தபின் தமது சொந்த வேலைகள் சம்பந்தமானதும், வேலைத்தளம் சம்பந்தமானதும், உலக இன்பப்பொழுதுபோக்கு பற்றியதுமான சிந்தனைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து, முழுநாளிலும் பரிசுத்தமாக இளைப்பாறி பொதுவானதும், தனிப்பட்டதுமான கடவுள் வழிபாட்டுக் காரியங்களுக்கும், இன்றியமையாததும், கருணைக்கிடமானதுமான கடமைகளுக்கும் தம்மை ஒப்புக்கொடுத்து மனிதர்கள் ஓய்வு நாளைக் கடவுளுக்கென்று பரிசுத்தமாக வைத்திருத்தல் அவசியம். நெகேமியா 13:15-22; ஏசாயா 58:13; மத்தேயு 12:1-13.