1. எல்லா விசுவாசிகளுக்கும் கிறிஸ்து விலை கொடுத்து வாங்கிய சுதந்திரம் நற்செய்தியில் இயல்பாகவே காணப்படுகின்றது. பாவத்தினால் ஏற்படும் குற்ற உணர்விலிருந்தும், அதைத் தொடர்ந்து ஏற்படும் கண்டனத்திலிருந்தும், தேவகோபத்திலிருந்தும், கடவுளின் நியாயப்பிரமாணத்தின் கடுமையான சாபத்திலிருந்தும் பெறும் விடுதலையை இச்சுதந்திரம் கொண்டுள்ளது. அத்தோடு தீமையான இவ்வுலகிலிருந்தும், சாத்தானுக்கு நம்மை அடிமையாக்கும் எல்லாக் காரியங்களிலிருந்தும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் நமக்கு விடுதலை தருகின்றது. மேலும், துன்பங்களினால் ஏற்படும் மனக்கசப்பிலிருந்தும், மரண வேதனையின் பயத்திலிருந்தும், நித்திய தண்டனையிலிருந்தும் விடுதலை தந்து கல்லறையின் வெற்றியையும் அளிக்கிறது. மேலும், இச்சுதந்திரம் ஓர் அடிமை தன்னை ஆளுபவரில் கொண்டிருக்கும் பயத்தோடல்லாமல், குழந்தையின் பயத்துடனும், வணக்கத்துடனும் ஆத்துமாக்கள் கடவுளிடம் சுதந்திரமாக அவருக்குக் கீழ்ப்படியுமாறு வரும்படிச் செய்கிறது.
இவ்வாசீர்வாதங்கள் அனைத்தையும் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளும் அனுபவித்திருந்தாலும் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு இச்சுதந்திரம் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. யூத சபை மேல் இருந்த சடங்குமுறைச் சட்டங்களின் சுமைகளிலிருந்து விடுதலையையும், கடவுளின் கிருபாசனத்தின் முன் மேலான தைரியத்தோடு வரக்கூடிய வாய்ப்பையும், கிறிஸ்தவ யுகத்திற்கு முன் வாழ்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அளவிற்கு மேலான ஆவியின் அனுபவத்தையும் பெருமளவிற்கு இச்சுதந்திரம் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு வழங்குகிறது.
லூக்கா 1:73-75; யோவான் 7:38,39; அப்போஸ்தலர் 26:18; ரோமர் 8:3,15,28; 1 கொரிந்தியர் 15:54-57; கலாத்தியர் 1:4; 3:9,13,14; 2 தெசலோனிக்கேயர் 1:10; எபிரெயர் 10:19-21; 1 யோவான் 4:18.
2. கடவுள் மட்டுமே மனச்சாட்சியின் ஆண்டவராக இருக்கிறார். அவருடைய வார்த்தைக்கு எதிரான, அதில் அடங்கியிராத சாதாரண மனிதர்களின் எந்தப் போதனைகளின் நிர்ப்பந்தத்திற்கும் நாம் உட்படவோ, அவற்றிற்குக் கீழ்ப்படியவோ அவசியமற்று அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்தும் நமது மனச்சாட்சிக்கு அவர் விடுதலை அளித்துள்ளார். அத்தகைய போதனைகளை ஏற்று அந்நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்படுவது மெய்யான மனச்சாட்சியின் சுதந்திரத்தைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். மனிதர்கள் தங்களுடைய சக மனிதர்களை கண்மூடித்தனமாக, கேள்வி முறையற்ற கீழ்ப்படிவிற்கு உட்படுத்த முனைவது நியாயமற்றதும், மெய்யான கிறிஸ்தவ சுதந்திரத்தை அழிக்கும் செயலுமாகும்.
மத்தேயு 15:9; அப்போஸ் 4:19,29; ரோமர் 14:4; 1 கொரி 3:5; 7:23; 2 கொரி 1:24; கொலோ 2:20,22,23; யாக்கோபு 4:12.
3. கிறிஸ்தவ சுதந்திரத்தின் பெயரில் பாவத்தை செய்பவர்கள் அல்லது பாவ இச்சைகளை வளர்ப்பவர்கள் நற்செய்திக் கிருபையின் பிரதான நோக்கத்தைத் தவறான வழியில் பயன்படுத்தி சுய அழிவைத் தேடிக்கொள்பவர்களாக உள்ளார்கள். இதன் மூலம் அவர்கள், தேவனுடைய மக்கள் தமது எதிரிகளின் செயல்களிலிருந்து விடுபட்டு வாழ்நாள் முழுவதும் பரிசுத்தத்துடனும், நீதியுடனும், பயத்தோடும் கடவுளுக்குப் பணி செய்யத் துணைபுரியும் கிறிஸ்தவ சுதந்திரத்தின் முக்கிய நோக்கத்தைப் பூரணமாக அழிக்கிறார்கள். லூக்கா 1:74,75; ரோமர் 6:1,2; கலாத்தியர் 5:13; 2 பேதுரு 2:18,21.
