16. நற்கிரியைகள்

1. கடவுள் தன்னுடைய பரிசுத்த வார்த்தையில் கட்டளையிட்டுள்ள கிரியைகள் மட்டுமே நன்மையானவை என்று எண்ணப்பட வேண்டும். மனிதன் தனது குருட்டு ஆர்வத்தால் செய்தவையும், வெளிப்பார்வைக்கு நல்ல நோக்கத்தோடு செய்தவைபோல் தோற்றமளிக்கும் அவனுடைய செயல்களும் நன்மையானவையல்ல. ஏனெனில் அவை பரிசுத்த வேதத்தால் அனுமதிக்கப்படாதவை.

ஏசாயா 29:13; மீகா 6:8; மத்தேயு 15:9; எபிரெயர் 13:21.

2. மெய்யாகவே நன்மையான கிரியைகளும், கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து செய்யப்படுகின்ற கிரியைகளுமே உண்மையான விசுவாசத்தின் சான்றுகளாக காணப்படுகின்றன. இவற்றின் மூலம் விசுவாசிகள் தங்களுடைய நன்றியைத் தெரிவிப்பதோடு தங்களது இரட்சிப்பின் நிச்சயத்துவத்தையும் பெலப்படுத்தி, தமது சக விசுவாசிகளையும் கட்டியெழுப்புகிறார்கள். அத்தோடு, இதன் மூலம் தங்களுடைய கிறிஸ்தவ சாட்சியையும் அலங்கரித்து தமது எதிரிகளின் நற்செய்திக்கெதிரான வாதங்களையும் தகர்க்கிறார்கள். மொத்தத்தில் தம்மைக் கிறிஸ்துவின் புதிய படைப்பாக மாற்றிய கடவுளை அவர்கள் மகிமைப்படுத்துகிறார்கள். அவ்வாறாக நித்திய ஜீவனை அடையும்படியாக பரிசுத்தத்தை வெளிப்படுத்தும் கனிகளைக் கொடுக்கிறார்கள்.

சங்கீதம் 116:12,13; மத்தேயு 5:16; ரோமர் 6:22; எபேசியர் 2:10; பிலிப்பியர் 1:11; 1 தீமோத்தேயு 6:1; யாக்கோபு 2:18,22; 1 பேதுரு 2:15; 2 பேதுரு 1:5-11; 1 யோவான் 2:3,5.

3. நற்கிரியைகளைச் செய்யும் வல்லமை கிறிஸ்துவின் ஆவியின் மூலமாகவே வருவதன்றி விசுவாசிகளில் இயற்கையாகக் காணப்படுவதில்லை. ஆவியினிடத்தில் இருந்து ஆரம்பத்தில் அவர்கள் பெற்றுக்கொண்ட கிருபைகளைத்தவிர, அவர் விரும்பத்தக்க கிரியைகளை முழுச்சித்தத்தோடும் வல்லமையோடும் செய்வதற்கு ஆவியின் அனுக்கிரகம் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. இதனால் ஆவியின் இவ்விசேஷ செல்வாக்கு இல்லாவிட்டால் அவர்கள் தங்கள் கடமையில் ஊக்கத்துடன் ஈடுபடாது கவனக்குறைவாக இருந்துவிடலாம் என்பது பொருளல்ல. மாறாக அவர்கள் தங்களில் உள்ள தேவ கிருபையை இந்நடவடிக்கைகளில் ஈடுபடும்படி ஊக்குவிக்க வேண்டும்.

ஏசாயா 64:7; யோவான் 15:4,5; 2 கொரிந்தியர் 3:5; பிலிப்பியர் 2:12,13; எபிரெயர் 6:11,12.

4. தங்களுடைய கீழ்ப்படிவின் மூலம் இவ்வுலக வாழ்க்கையில் இயலக்கூடிய உயர்ந்த நிலையை அடையும் விசுவாசிகள் கடவுள் அவர்களிடம் எதிர்பார்ப்பதையும்விட மேலான கிரியைகளைச் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அத்தோடு, அவர்கள் தங்களுடைய கடமைப்படி செய்யவேண்டிய கிரியைகளும் பூரணமற்ற நிலையிலேயே காணப்படுகின்றன.

யோபு 9:2,3; கலாத்தியர் 5:17; லூக்கா 19:8.

5. நாம், எந்தவிதத்திலும் நமது மிகச்சிறப்பான கிரியைகளாலும்கூட கடவுளிடம் இருந்து பாவ மன்னிப்பையோ நித்திய ஜீவனையோ அடையும் தகுதியைப் பெற்றுவிட முடியாது. ஏனெனில், நமது சிறப்பான கிரியைகளும்கூட எந்தவிதத்திலும் வரவிருக்கும் மகிமைக்கு சமமாக இருப்பதில்லை. அத்தோடு, கடவுளுக்கும் நமக்கும் இடையில் எல்லையற்ற இடைவெளி இருப்பதோடு, நமது எந்தவிதமான கிரியைகளும் அவருக்கு நன்மை பயக்கவோ அல்லது நாம் முன்பு செய்த பாவக்கடன்களைத் தீர்க்கக் கூடிய விலையாகவோ அமைய முடியாது. நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்து முடித்தபின், நமது கடமையை மட்டுமே செய்தவர்களாய் தகுதியற்ற ஊழியராய்க் காணப்படுகிறோம். அதுமட்டுமல்லாமல் நமது கிரியைகள் நன்மையானவையாக இருக்கும் வேளையில் அவை கடவுளின் ஆவியினால் செய்யப்பட்டவையாகவே இருக்கின்றன. அவை நம்முடைய கிரியைகளாக இருக்கும் வேளையில் அவை கறைபடிந்து, பலவீனத்துடன், பூரணமற்று கடவுளின் கோரிக்கைகளின் தரத்தைச் சந்திக்க இயலாத நிலையில் இருக்கின்றன.

சங்கீதம் 143:2; ஏசாயா 64:6; ரோமர் 3:20; 4:6; கலாத்தியர் 5:22,23; எபேசியர் 2:8,9.

6. இருந்தபோதும், விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின் அவர்களுடைய கிரியைகளும் கிறிஸ்துவுக்குள் செய்யப்பட்டவையாகவே கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவ்வுலக வாழ்வில் அவை குற்றமற்றவையாகவோ அல்லது கடவுளின் கண்டனத்திற்கு அப்பாற்பட்டவையாகவோ இல்லாமல் பலவீனமுடையவையாகவும், பூரணமற்றவையாகவும் காணப்படினும் கடவுள் கிறிஸ்துவுக்குள் அவற்றை நோக்கும்போது, அவற்றில் நேர்மையானவற்றை மனத்திருப்தியுடன் ஏற்று வெகுமதியும் அளிக்கிறார்.

மத்தேயு 25:21,23; எபேசியர் 1:6; எபிரெயர் 6:10; 1 பேதுரு 2:5.

7. கடவுளால் கட்டளையிடப்பட்ட கிரியைகள், அவற்றைச் செய்தவர்களுக்கும் ஏனையோருக்கும் உயர்ந்த பயன்களை அளிப்பவையாக இருந்தபோதும் மறுபிறப்படையாத மனிதர்கள் அவற்றைச் செய்யும்போது அவை பாவமானவையாகவே காணப்படுகின்றன. இதற்குக் காரணங்களாக கீழ்வருவனவற்றைக் கூறலாம்: இக்கிரியைகள் விசுவாசத்தினால் சுத்திகரிக்கப்படாத இருதயத்திலிருந்து உருவானவை. அத்தோடு அவை வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் அமைந்திருக்கவில்லை. அவை கடவுளின் மகிமையை இறுதியான இலக்காகக் கொண்டும் அமையவில்லை. எனவே, அவை கடவுளைத் திருப்திப்படுத்தவோ அல்லது கிருபையை அடையும்படி ஒருவரைத் தயார் செய்யவோ இயலாதவை. இருப்பினும் அவற்றைச் செய்வதைவிட செய்யாமலிருப்பது மிகப் பாவமானதும், கடவுளால் வெறுக்கப்படுவதுமாகும். ஆதியாகமம் 4:5; 1 இராஜாக்கள் 21:27,29; 2 இராஜாக்கள் 10:30; யோபு 21:14,15; ஆமோஸ் 5:21,22; மத்தேயு 6:2,5; 25:41-43; ரோமர் 9:16; 1 கொரிந்தியர் 13:1; தீத்து 3:5; எபிரெயர் 11:4,6.