1. தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் சிலர் தாங்கள் பிறந்த ஸ்தானத்தில் தொடர்ந்திருந்து எல்லாவிதமான கேடான ஆசைகளையும், இச்சைகளையும் அனுபவித்து தங்கள் வாழ்வின் பிற்பகுதியிலேயே மனந்திரும்புகிறார்கள். அப்போது, கடவுள் திட்ப உறுதியான அழைப்பின் மூலம் அவர்களுக்கு நித்திய ஜீவனைத் தரும் மனந்திரும்புதலை அளிக்கிறார்.
தீத்து 3:2-5.
2. இவ்வுலகில் பாவமேயில்லாது நன்மைகள் செய்யும் மனிதர் ஒருவருமே இல்லை. மனிதர்களில் மிகச்சிறந்தவர்களும் அவர்களுக்குள் இருக்கும் சீரழிவின் வல்லமையாலும் வஞ்சகத்தாலும், சோதனைகளின் பலத்தாலும் கடவுள் வெறுக்கும் பெரும் பாவங்களைச் செய்யலாம். இதனிமித்தம் பாவத்தில் விழும் விசுவாசிகள் மனந்திரும்பி இரட்சிப்புப்பெற கடவுள் கருணைகூர்ந்து கிருபையின் உடன்படிக்கை மூலமாக வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளார்.
பிரசங்கி 7:20; லூக்கா 22:31,32.
3. பரிசுத்த ஆவியின் மூலம் தன்னில் உள்ள பாவத்தின் பலவிதமான கேடுகளையும் உணருபவன் நற்செய்தியின் கிருபையாகிய இரட்சிக்கும் மனந்திரும்புதல் மூலம் இதை அடைகிறான். அத்தோடு, அவன் பாவத்தின் காரணமாக தன்னைத் தாழ்த்தி கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறான். இத்தாழ்மைப்படுத்தல் தேவனுக்கேற்ற துக்கம், பாவத்தில் வெறுப்பு, சுய அருவருப்பு ஆகிய குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். இம்மனந்திரும்புதல் கடவுளுக்கு முன்பாக அவரை மகிழ்விக்கும்விதத்தில் நிலையாகத் தொடரக் கூடியதாகவும், இலட்சியத்தையும், விடாமுயற்சியையும், பரிசுத்த ஆவி தரும் வல்லமையோடு கூடிய மன்னிப்பை நாடும் ஜெபம், கிருபையின் பலம், தீர்மானம், முயற்சி ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.
சங் 119:6,128; எசே 36:31; சக 12:10; அப்போஸ் 11:18; 2 கொரி 7:11.
4. நாம் நம்மில் கேட்டை நாடும் மரணத்தின் சரீரத்தை சுமந்து நிற்பதால் நம் வாழ்நாள் முழுவதும் மனந்திரும்புதலை நம்மில் நாம் கொண்டிருப்பது அவசியமாகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது மனச்சாட்சியை உறுத்துகின்ற ஒவ்வொரு குறிப்பிட்ட பாவத்திலிருந்தும் கவனத்தோடு மனந்திரும்புவதைக் கடமையாகக் கொண்டுள்ளான்.
லூக்கா 19:8; 1 தீமோத்தேயு 1:13,15.
5. கிருபையின் உடன்படிக்கை மூலம் இரட்சிப்பைப் பெற்றிருக்கும் விசுவாசிகளைப் பாதுகாக்க கடவுள் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். எனவே, மிகச் சிறிதான பாவங்களும் கண்டனத்துக்குரியதாக இருப்பினும் மனந்திரும்பும் ஒருவனைக் கண்டனத்துக்குள்ளாக்கக்கூடிய பெரிய பாவம் என்று ஒன்றில்லை. இதனால் மனந்திரும்புதலைப்பற்றி அடிக்கடி பிரசங்கிப்பது அவசியமாகின்றது. ஏசாயா 1:16-18; 55:7; ரோமர் 6:23.
