14. இரட்சிக்கும் விசுவாசம்

1. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக விசுவாசத்தின் கிருபையினால் அவர்களை விசுவாசிக்க செய்வது ஆவியானவர் அவர்களுடைய இருதயத்தில் செய்யும் கிரியையே. பொதுவாக இது கடவுளின் வசனத்தைப் பிரசங்கிப்பதன் மூலம் நிகழ்கின்றது. கடவுளுடைய வார்த்தையாலும், அதன் சேவையாலும் திருமுழுக்கு, திருவிருந்து, ஜெபம் மற்றும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏனைய சாதனங்களின் மூலமாகவும் விசுவாசம் ஒருவரில் வளர்ந்து வலுவடைகின்றது.

லூக்கா 17:5; அப்போஸ்தலர் 20:32; ரோமர் 10:14,17; 2 கொரிந்தியர் 4:13; எபேசியர் 2:8; 1 பேதுரு 2:2.

2. கடவுள் அதிகாரத்துடன் பேசும் வார்த்தையின் மூலம் வெளிப்படுத்தப்படும் அனைத்தையும் விசுவாசத்தின் மூலம் ஒரு கிறிஸ்தவன் உண்மையென்று நம்புகிறான். அத்துடன் ஏனைய எழுத்துக்கள் அனைத்திலும், உலகத்திலுள்ள அனைத்திலும் காணப்படுவதையும்விட மேலான ஒரு சிறப்புத் தன்மையை கடவுளுடைய வார்த்தை கொண்டிருப்பதை அவன் உணர்கிறான். கடவுளுடைய வார்த்தை அவருடைய பலவித குணாதிசயங்களின் மகிமையையும், கிறிஸ்துவின் தன்மையிலும் அவரது பணிகளிலும் காணப்படும் சிறப்பையும் பரிசுத்த ஆவியானவரின் செயலாற்றல்கள் அனைத்திலும் காணப்படும் அவரது வல்லமையையும் பூரணத்துவத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. இவ்வகையில் ஒரு கிறிஸ்தவன் தான் விசுவாசித்த சத்தியத்தில் பூரணமாக நம்பிக்கை வைத்து திருமறையின் வெவ்வேறு பாகங்களின் பலவிதமான கோரிக்கைகளின்படி சேவை செய்ய முடிகின்றது. கடவுளின் கட்டளைகளுக்கு அவன் கீழ்ப்படிகிறான். அவரது பயமுறுத்துதல்களைக் கேட்டு அவன் நடுங்குகிறான். இவ்வுலக வாழ்க்கைக்கும் இனி வரப்போகும் வாழ்க்கைக்குமாகத் தரப்பட்ட தெய்வீக வாக்குறுதிகளை அவன் அணைத்துக் கொள்கிறான். இரட்சிக்கும் விசுவாசத்தின் மையமான நடவடிக்கைகள் கிறிஸ்துவோடு தொடர்புடையதாக இருக்கின்றன. ஏனெனில், நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல், நித்திய ஜீவன் ஆகியவற்றிற்கு விசுவாசி அவரையே ஏற்றும், அவரையே பெற்றும், அவரையே சார்ந்தும் நிற்கிறான். அத்தோடு, இவை அனைத்தையும் அவன் கிருபையின் உடன்படிக்கை மூலமே பெற்றுக்கொள்கிறான்.

சங்கீதம் 19:7-10; 119:72; ஏசாயா 66:2; யோவான் 1:12; 15:14; அப்போஸ்தலர் 15:11; 16:31; 24:14; கலாத்தியர் 2:20; 2 தீமோத்தேயு 1:12; எபிரெயர் 11:13.

3. இரட்சிக்கும் விசுவாசம், பலபடிகளைக்கொண்டுள்ளது. அது பலவீனமானதாகவோ அல்லது பெலமானதாகவோ இருக்கலாம். இருந்தபோதும், இது ஏனைய எல்லாவிதமான இரட்சிக்கும் கிருபையைப்போல, பலவீனமான நிலையிலும்கூட மெய்யான விசுவாசிகளல்லாதவர்களிடம் காணப்படும் விசுவாசம், பொதுவான கிருபை ஆகியவற்றைவிட வித்தியாசமான தன்மையை உடையதாக உள்ளது. அதன் விளைவாக இரட்சிக்கும் விசுவாசம் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி பெலவீனப்பட்டாலும் நமது விசுவாசத்தை தொடக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிற கிறிஸ்துவின் மூலம் கிறிஸ்தவர்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை அடையும்வரை வளர்ச்சியடைந்து இறுதியில் வெற்றியும் அடைகின்றது. மத்தேயு 6:30; ரோமர் 4:19,20; எபேசியர் 6:16; கொலோசெயர் 2:2; எபிரெயர் 5:13,14; 6:11,12; 12:2; 2 பேதுரு 1:1; 1 யோவான் 5:4,5.