11. நீதிமானாக்குதல்

1. கடவுள் தாம் திட்ப உறுதியாய் அழைப்பவர்களை இலவசமாக நீதிமான்களாக்குகிறார். இதை அவர் அவர்களுள் நீதியை உட்புகுத்துவதன் மூலமாக அல்லாமல் அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களை நீதிமான்களாக எண்ணி ஏற்றுக்கொள்ளுவதன் மூலம் செய்கிறார். அவர்களில் நிகழ்ந்த அல்லது அவர்கள் செய்த எந்தச் செயல்களின் மூலமாகவுமல்லாமல் கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே இதை அவர் செய்கிறார். அவர்களுக்கு அளிக்கப்பட்ட, அதாவது அவர்களுடைய கணக்கில் வைக்கப்பட்ட நீதி, அவர்களுடைய விசுவாசமோ அல்லது விசுவாசிக்கும் செயலோ அல்லது நற்செய்தியைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படியும் அவர்களுடைய ஏதாவதொரு செய்கையாகவோ அல்லாமல் கிறிஸ்துவினுடைய கீழ்ப்படிவாகவே உள்ளது. கிறிஸ்துவினுடைய கீழ்ப்படிவு, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து அதை முழுமையாகக் கடைப்பிடித்தல், மரணத்திற்குத் தன்னை உட்படுத்திக் கீழ்ப்படிதல் ஆகிய இரண்டு தன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. இவ்வாறாக நீதிமான்களாக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் நீதியை விசுவாசத்தினால் பெற்று அதில் ஆறுதல் அடைகிறார்கள். இவ்விசுவாசம் அவர்களால் உண்டானதாக அல்லாமல் தேவனுடைய ஈவாக இருக்கின்றது.

யோவான் 1:12; ரோமர் 3:24; 4:5-8; 5:17-19; 8:30; 1 கொரிந்தியர் 1:30,31; எபேசியர் 1:7; 2:8-10; பிலிப்பியர் 3:8,9.

2. கிறிஸ்துவையும் அவரது நீதியையும் பெற்று அதைச் சார்ந்திருக்கும் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்குதல் பெறப்படுவதாக இருக்கிறது. ஆனாலும், இது எப்போதுமே நீதிமானாக்கப்பட்டவனில் தனித்திராமல் ஏனைய அனைத்து இரட்சிப்பின் கிருபைகளோடும் இணைந்தே காணப்படுகின்றது. அத்தோடு, இது உயிரற்ற விசுவாசமாக இல்லாமல் அன்போடு செயல்படுவதாகவும் உள்ளது.

ரோமர் 3:28; கலாத்தியர் 5:6; யாக்கோபு 2:17,22,26.

3. தனது கீழ்ப்படிவினாலும், மரணத்தினாலும் கிறிஸ்து நீதிமான்களாக்கப்பட்ட அனைவரது கடன்களையும் முழுமையாகத் தீர்த்தார். கல்வாரியில் தனது இரத்தத்தைச் சிந்தி தன்னைப் பலியாகக் கொடுத்ததன் மூலமும், அவர்களுக்குப் பதிலாக அவர்களுடைய தண்டனையைத் தாமே அனுபவித்ததன் மூலமும், அவர்கள் மீதிருந்த கடவுளுடைய நீதியின் எல்லாக் கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். ஆனாலும், இலவசமான கிருபையின் மூலமாகவே அவர்கள் முழுமையாக நீதிமான்களாக்கப் பட்டார்கள். ஏனெனில், முதலாவதாக, கிறிஸ்து அவர்கள் சார்பாக கிரியை செய்யும்படியாக பிதாவினால் இலவசமாகக் கொடுக்கப்பட்ட ஈவு. இரண்டாவதாக, கிறிஸ்துவின் கீழ்ப்படிவும், நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றியதும் அவர்கள் சார்பாக இலவசமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூன்றாவதாக, அவர்களில் காணப்பட்ட எதுவுமே இத்தகைய கருணைகளுக்கு அவர்களைத் தகுதியாக்கவில்லை. ஆகவே, கடவுளுடைய பூரணமான நீதியும், கிருபையும் பாவிகளினுடைய நீதிமானாக்குதலினால் மகிமைப்படுத்தப்படுகிறது.

ஏசாயா 53:5,6; ரோமர் 3:26; 8:32; 2 கொரிந்தியர் 5:21; எபேசியர் 1:6,7; 2:7; எபிரெயர் 10:14; 1 பேதுரு 1:18,19.

4. தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரையும் நீதிமான்களாக்க கடவுள் அநாதி காலத்தில் ஆணையிட்டதோடு, அனைத்தும் கூடிவந்த காலத்தில் கிறிஸ்து அவர்களுடைய பாவத்திற்காக மரித்து உயிர்த்தெழுந்தார். இருந்தபோதும் பரிசுத்த ஆவி கிறிஸ்துவின் ஆள் தன்மை, கிரியை ஆகியவற்றின் நன்மைகளை அவர்களில் பயன்படுத்தும்வரை தனிப்பட்ட முறையில் அவர்கள் நீதிமான்களாக்கப்படவில்லை.

ரோமர் 4:25; கலாத்தியர் 3:8; கொலோசெயர் 1:21,22; 1 தீமோத்தேயு 2:6; தீத்து 3:4-7; 1 பேதுரு 1:2.

5. நீதிமான்களாக்கப்பட்ட அனைவரது பாவங்களையும் கடவுள் தொடர்ந்து மன்னிக்கிறார். அவர்கள் தங்களுடைய நீதிமான்களாக்கப்பட்ட நிலையை ஒருபோதும் இழந்துவிட முடியாது. ஆனால், அவர்கள் பாவத்தின் காரணமாக கடவுளின் தண்டனைக்கு உரித்தான கோபத்திற்குட்படலாம். அந்நிலையில் அவர்கள் தங்களைத் தாழ்த்தி, தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு கடவுளுடைய மன்னிப்பிற்காக இரங்கி தங்களுடைய விசுவாசத்தையும், மனந்திரும்புதலையும் புதுப்பித்தாலன்றி கடவுள் பொதுவாக தன்னுடைய முகப்பிரகாசத்தை அவர்களுக்கு அளிக்கமாட்டார்.

சங்கீதம் 32:5; சங்கீதம் 51; 89:31-33; மத்தேயு 6:12; 26:75; யோவான் 10:28; 1 யோவான் 1:7,9.

6. பழைய ஏற்பாட்டுக் காலத்து விசுவாசிகள் புதிய ஏற்பாட்டுக் காலத்து விசுவாசிகளைப் போலவே நீதிமான்களாக்கப்பட்டார்கள். ரோமர் 4:22-24; கலாத்தியர் 3:9.