1. கடவுள் இயற்கையிலேயே, மனித சித்தத்தை அது தான் எடுக்கும் தீர்மானத்தின்படி நடக்கக்கூடிய வல்லமையையும், சுதந்திரத்தையும் கொண்டுள்ளதாகப் படைத்திருந்தார். இச்சுயாதீனமான சித்தம் நன்மையையோ, தீமையையோ செய்வதற்கு புறநிர்ப்பந்தங்களினால் பாதிப்புறாமலும், இயற்கையாக அதன் உள்ளியல்பினால் வற்புறுத்தப்படாமலும் உள்ளது.
மத்தேயு 17:12; யாக்கோபு 1:14; உபாகமம் 30:19.
2. பாவமற்ற நிலையில், மனிதன் சுயாதீனமும் வல்லமையுமுள்ள சித்தத்தையும், நன்மையானதையும், கடவுளுக்கு ஏற்புடையதை செய்யக்கூடிய தன்மையையும் கொண்டிருந்தான். இருந்தபோதும் அவன் மாறும் இயல்புடையவனாக இருந்தபடியால் தனது நேர்மையான நிலையில் இருந்து அவனால் விழ முடிந்தது.
பிரசங்கி 7:29; ஆதியாகமம் 3:6.
3. மனிதன் பாவத்தில் வீழ்ந்ததால் இரட்சிப்போடு கூடிய எந்தவித ஆவிக்குரிய நன்மைகளையும் செய்யக்கூடிய தனது சித்தத்தின் வல்லமையைப் பூரணமாக இழந்தான். இயல்பாகவே மனிதன் ஆவிக்குரிய நன்மைகளை முற்றிலும் எதிர்ப்பவனாகவும் பாவத்தில் மரித்தவனாகவும் உள்ளான்.
ரோமர் 5:6; 8:7; எபேசியர் 2:1,5; தீத்து 3:3-5; யோவான் 6:44.
4. கடவுள் பாவிக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தி அவனைக் கிருபையின் நிலைக்குக் கொண்டு வரும்போது, இயற்கையாகவே அவனை அடிமைப்படுத்தியிருக்கும் பாவத்திலிருந்து அவனுக்கு விடுதலை தந்து கிருபையின் மூலமாக மட்டுமே அவன் சுயாதீனமான சித்தத்துடன் ஆவிக்குரிய நன்மைகளைச் செய்யும்படிச் செய்கிறார். ஆனால், அவனுள் தொடர்ந்திருக்கும் பாவசுபாவத்தினால் நன்மைகளை மட்டுமன்றி அவன் கேடானவைகளையும் செய்யச் சித்தங்கொள்கிறான். (மனமாற்றமடைந்த மனிதனின் சித்தம் இன்னும் பூரணமடையாவிட்டாலும் அது புதுப்பிக்கப்பட்டுள்ளது. மனமாற்றத்திற்கு முன்பு மனித சித்தம் ஆவிக்குரிய நன்மைகளைச் செய்யக்கூடிய விருப்பத்தையோ வல்லமையையோ கொண்டிருக்கவில்லை).
கொலோசெயர் 1:13; யோவான் 8:36; பிலிப்பியர் 2:13; ரோமர் 7:15,18,19,21,23.
5. உன்னத நிலையிலேயே மனித சித்தம் பூரணமாகவும், மாற்றம் எதுவுமின்றி சுயாதீனமாக நன்மையானதை மட்டும் செய்யக்கூடியதாக அமையும். எபேசியர் 4:13.
