1. தேவனுக்கும் அவருடைய படைப்பான மனிதனுக்கும் இடையிலுள்ள இடைவெளி மிக அதிகமாக இருப்பதால், மனிதர்கள் சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டவர்களாய், தம்மைப் படைத்தவருக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்களாயிருந்தும், கடவுளே தானாக முன்வந்து மனமிரங்கி உடன்படிக்கையை ஏற்படுத்தியிராவிட்டால் அவர்களால் ஜீவனை பிரதிபலனாக ஒருபோதும் அடைந்திருக்க முடியாது.
யோபு 35:7,8; லூக்கா 17:10.
2. மேலும், மனிதன் பாவத்தில் விழுந்ததன் காரணமாக கடவுளின் நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்குக் கீழாக தன்னைக் கொண்டு வந்திருப்பதால் பாவிகளுக்கு இலவசமாக ஜீவனையும், இரட்சிப்பையும் இயேசு கிறிஸ்துவின் மூலமாகக் கொடுப்பதற்காக ஒரு கிருபையின் உடன்படிக்கையை ஏற்படுத்துவது கடவுளுக்குப் பிரியமாயிருந்தது. இரட்சிப்பை அடையும்படியாக மனிதர்கள் தன்னை விசுவாசிக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். அத்தோடு அவர்கள் தாமே விருப்பத்துடன் விசுவாசிக்கும் ஆற்றலை அடையும்படிக்கு நித்திய ஜீவனுக்காகத் தெரிந்து கொள்ளப்பட்ட அனைவருக்கும் தனது பரிசுத்த ஆவியைத் தருவதாக கடவுள் வாக்குத்தத்தம் செய்துள்ளார்.
ஆதி 2:17; சங்கீதம் 110:3; எசேக்கியேல் 36:26,27; மாற்கு 16:15,16; யோவான் 3:16; 6:44,45; ரோமர் 3:20,21; 8:3; கலாத்தியர் 3:10.
3. கடவுளின் உடன்படிக்கை சுவிசேஷத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில், ஆதாமுக்கு ஸ்திரீயின் வித்தினால் உண்டாகும் இரட்சிப்பைக்குறித்த வாக்குத்தத்தத்தின் மூலம் அது வெளிப்படுத்தப்பட்டது. பின்பு இரட்சிப்பின் முழு வெளிப்பாடும் புதிய ஏற்பாட்டில் நிறைவேறும்வரையிலும் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் இரட்சிப்பானது நித்தியத்தில் பிதாவுக்கும் குமாரனுக்குமிடையில் ஏற்பட்ட மீட்பின் உடன்படிக்கையை ஆதாரமாகக் கொண்டது. விழுந்துபோன ஆதாமின் சந்ததியில் யாரெல்லாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் ஜீவனையும், அழிவற்ற வாழ்வையும் இவ்வுடன்படிக்கையின் கிருபையின் மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்கிறார்கள். ஏனெனில், ஆதாம் பாவம் செய்வதற்கு முன்னிருந்த நிலைமையில் பெற்றிருந்த ஆசீர்வாதங்களின் நிபந்தனைகளின்படி அவனுடைய சந்ததியினர் தேவ சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆதியாகமம் 3:15; யோவான் 8:56; அப்போஸ்தலர் 4:12; ரோமர் 4:1-5; 2 தீமோத்தேயு 1:9; தீத்து 1:2; எபிரெயர் 1:1,2; 11:6,13.
