6. மனிதனின் வீழ்ச்சியும் பாவமும், அதற்குரிய தண்டனையும்

1. மனிதனை, நேர்மையானவனாகவும் பூரணமானவனாகவும் கடவுள் படைத்து, தனக்குக் கீழ்ப்படிந்தால் மட்டுமே நல்வாழ்வு என்றும், மீறினால் மரணம் நிச்சயம் என்றும் போதிக்கும் நீதிச்சட்டத்தை அவனுக்குத் தந்தபோதும், அந்நிலைமையில் அவன் அதிக நாட்கள் வாழவில்லை. சாத்தான் பாம்பின் சூழ்ச்சித்திறத்தின் மூலம் ஏவாளைத் தன்வயப்படுத்தி, அவள் மூலம் ஆதாமையும் தன் வழியில் செல்லத் தூண்டினான். ஆதாமோ, எவ்வித புறத்தூண்டுதலுமின்றி தன்னிச்சையாக விலக்கிவைக்கப்பட்ட கனியைப் புசித்ததன் மூலம், படைப்பின் சட்டத்தையும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும் மீறி நடந்தான். கடவுள் விவேகமும், பரிசுத்தமும் உடைய தனது திட்டத்தினால் இச்செயலைத் தன்னுடைய சுயமகிமைக்கென்றே அனுமதிக்கத் திருவுளங்கொண்டார்.

ஆதியாகமம் 2:16-17; 3:12-13; 2 கொரிந்தியர் 11:3.

2. நமது முதல் பெற்றோர் இப்பாவத்தின்மூலம் தங்களுடைய நேர்மையையும், கடவுளோடிருந்த ஐக்கியத்தையும் இழந்தபோது, நாமும் அவர்களுடன் இருந்தோம். (அதாவது அவர்கள் செய்த பாவம் நம்மையும் உள்ளடக்கியதால், ஓரினமாக நாமும் அவர்களோடு பாவத்தில் வீழ்ந்தோம்). ஆகவே, இதன் மூலம், மரணம் எல்லோருக்கும் சம்பவித்தது, எல்லோரும் பாவத்தில் மரித்து, தங்களுடைய ஆவி, சரீரம் ஆகியவற்றின் அனைத்துப் பகுதிகளிலும் முழுமையாகக் கறைபடிந்து காணப்படுகிறார்கள்.

ரோமர் 3:23; 5:12-21; தீத்து 1:15; ஆதியாகமம் 6:5; எரேமியா 17:9; ரோமர் 3:10-19.

3. கடவுளின் நியமனத்தால், முதல் மனித ஜோடியே எல்லா மனித இனத்திற்கும் ஆதாரமாகவும், அதன் பிரதிநிதிகளாகவும் இருந்தார்கள். நமது முதல் பெற்றோரின் பாவத்தின் குற்றப்பழியும், கறைபடிந்த இயல்பும், பிறப்பின் மூலமாக அவர்களுடைய அனைத்து வழித்தோன்றல்களின் மீதும் சாட்டப்பட்டது. ஆகவே, ஆதாம், ஏவாளினுடைய வழித்தோன்றல்கள், கருவிலேயே பாவத்தில் உருவாகி, இயற்கையாகவே (கடவுளின்) கோபாக்கினையின் குழந்தைகளாய், பாவத்தின் ஊழியர்களாயும், மரணத்திற்குட்பட்டவர்களாயும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விடுவித்தாலன்றி மீட்படைய இயலாமல், ஆவிக்குரியதும், இவ்வுலகிற்குரியதும், எல்லையற்றதுமான பல்வேறு துன்பங்களுக்கும் உட்பட்டு வருகிறார்கள்.

ரோமர் 5:12-19; 1 கொரி 15:21,22,45,49; சங் 51:5; யோபு 14:4; எபேசியர் 2:3; ரோமர் 6:20; எபிரெயர் 2:14-15; 1 தெசலோ 1:10.

4. நம்மனைவரையும் எவ்வித நன்மையும் செய்ய முற்றிலும் இயலாதவர்களாயும், ஆற்றலற்றவர்களாயும், எல்லாவித நன்மைக்கும் எதிரானவர்களாயும், எல்லாவிதமான கேட்டையும் செய்ய முழுமையான நாட்டங்கொண்டவர்களாயும் மாற்றியிருக்கும் இம் மூலபாவத்திலிருந்தே எல்லா மீறுதல்களும் தோன்றி வெளிவருகின்றன.

யாக்கோபு 1:14-15; மத்தேயு 15:19; ரோமர் 8:7; கொலோ 1:21.

5. இவ்வுலக வாழ்க்கையில் பாவத்தினால் கறைபடிந்த மனித இயல்பு (கிறிஸ்துவுக்குள்) மறுபடியும் பிறந்தவர்களில் நிலைத்திருக்கின்றது. (மனிதனின்) இக்கறைபடிந்த இயல்பு (கிறிஸ்துவுக்குள்) மன்னிக்கப்பட்டும், பெலனற்ற நிலைக்குக் கொண்டுவரப்பட்டும் இருந்தபோதும், அதனுடைய அனைத்து இயங்கும் ஆற்றல்களும் மெய்யாகவும், முழுமையாகவும் பாவத்தன்மையுடையவை. ரோமர் 7:18,23; பிரசங்கி 7:20; 1 யோவான் 1:8; கலாத்தியர் 5:17.