பரிசுத்த வேதாகமத்தின் வேத சத்தியங்களை முறையாகத் தொகுத்து வழங்குகிறது 1689 விசுவாச அறிக்கை. 1677 ஆம் ஆண்டில் மூப்பர்களையும், விசுவாசிகளையும் கொண்ட இங்கிலாந்தில் இருந்த பல சபைகள் இணைந்து இதை முதலில் வெளியிட்டன. கிறிஸ்தவர்கள் அதிகமாக அரசால் துன்புறுத்தப்பட்டு வந்த காலமிது.
1644-1648 ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் இங்கிலாந்தையும், ஸ்கொட்லாந்தையும் சேர்ந்த பியூரிட்டன் பெரியோர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையைத் (Westminster Confession of Faith) தொகுத்து வெளியிட்டனர். அதேவேளை கொங்கிரிகேஷனல் சபை (Congregationalists) அமைப்பைத் தழுவியவர்களும் சவோய் விசுவாச அறிக்கையை (Savoy Declaration of Faith and Order) 1658 ஆம் ஆண்டில¢ வெளியிட்டனர். வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை பிரஸ்பிடீரியன் சபை அமைப்பு முறையின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது. திருச்சபையின் தன்மை, திருமுழுக்கு, திருவிருந்து, சபை அரசமைப்பு போன்ற விஷயங்களில் அவர்களிலிருந்து வேறுபட்ட கோட்பாடுகளை பாப்திஸ்து விசுவாசிகள் கொண்டிருந்தனர். 1644 ஆம் ஆண்டில் பாப்திஸ்துகள் ஏற்கனவே ஒரு சுருக்கமான விசுவாச அறிக்கையை எழுதி வைத்திருந்தனர். காலங்கூடி வந்தபோது அவர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையையும், சவோய் விசுவாச அறிக்கையையும் தழுவி, பாப்திஸ்து கோட்பாடுகளின் அடிப்படையில் 1677 ஆம் ஆண்டில் ஒரு விசுவாச அறிக்கையை எழுதினர். இம்மூன்று விசுவாச அறிக்கைகளும் சீர்திருத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றியதால் பல விதங்களில் ஒன்றையொன்று ஒத்திருந்தன. கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் அக்காலத்தில் அரசால் துன்புறுத்தப்பட்டதால் இவ்விசுவாச அறிக்கையை பாப்திஸ்துகளால் உடனடியாக வெளியிட முடியவில்லை. 1689 ஆம் ஆண்டில் அரசின் துன்புறுத்தல் நின்று வழிபாட்டு சுதந்திரம் கிடைத்தபோது 37 பாப்திஸ்து போதகர்கள் இணைந்து இவ்விசுவாச அறிக்கையை வெளியிட்டனர். அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு இங்கிலாந்திலும், வேல்ஸ் தேசத்திலும் பார்டிகுலர் அல்லது கல்வினிச பாப்திஸ்து சபைகளின் (Particular or Calvinistic) விசுவாச அறிக்கையாக இதுவே இருந்தது. இது இலண்டன் விசுவாச அறிக்கை என்றும் அழைக்கப்பட்டது. 1744 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவில் இருந்த கல்வினிச பாப்திஸ்து சபைகள் இதை அங்கீகரித்து ஏற்று பிலடெல்பியா விசுவாச அறிக்கை (Philadelphia Confession of Faith) என்ற பெயரில் பயன்படுத்தினர்.
இலண்டனில் நியூ பார்க் சாலை சபையின் போதகராக இருந்த சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் 1853 ஆம் ஆண்டில் தனது சபையினதும் தம்மைச் சார்ந்திருந்த சபைகளினதும் அத்திவாரத்தை உறுதிப்படுத்தி வேத சத்தியங்களில் வழி நடத்த 1689 விசுவாச அறிக்கையை மறுபடியும் வெளியிட்டார். இதற்கு எழுதிய முன்னுரையில் ஸ்பர்ஜன், “உங்கள் விசுவாசத்தைக் குறித்து வெட்கப்படாதீர்கள். சத்தியத்தின் காரணமாக நமக்கு ஒரு கொள்கைச் சின்னம் தேவைப்படுகிறது. மகத்துவமான நற்செய்தியின் நோக்கத்தை நிறைவேற்றத் துணைபுரிய, அதன் முக்கிய கோட்பாடுகளுக்கு இச்சிறுநூல் தெளிவான சாட்சியாக விளங்கும்” என்று எழுதினார். இது போதிக்கும் வேத சத்தியங்களை விசுவாசிக்காது தெளிந்த மனச்சாட்சியுடன் எவரும் சபையில் அங்கத்தவராக இருக்க முடியாது என்றும் சொன்னார். அதற்குப்பின் 19 ஆம் நூற்றாண்டில் பல தடவைகள் இது மறு வெளியீடு செய்யப்பட்டது.
திருச்சபை சீர்திருத்தத்திற்கு சீர்திருத்தக் கோட்பாடுகளின் அவசியத்தை உணர்ந்த சபைகள் இதை ஏற்றுப் பயன்படுத்தின. முன்னூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டிருந்த போதும் இவ்விசுவாச அறிக்கை இன்றும் உலகெங்கும் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு சீர்திருத்த பாப்திஸ்து சபைகளின் விசுவாச அறிக்கையாக விளங்குகிறது.
வேத சத்தியங்களை முறையாகத் தொகுத்தளிக்கும் இவ்விசுவாச அறிக்கை வேதத்தின் அதிகாரத்தை தன்னில் கொண்டிருக்கவில்லை. இது வேதத்திற்கு அடிமை. வேதத்திற்கு மட்டுமே அடிபணிய வேண்டிய விசுவாசிகள் வேதசத்தியத்தில் மேலான அறிவை பெற்றுக்கொள்ளவும், திருச்சபைகள் வேதசத்தியங்களின் அடிப்படையில் இயங்கவும் இவ்விசுவாச அறிக்கை பயன்படும். நாம் விசுவாசிக்கும் சத்தியங்களை வெட்கப்படாமல் எடுத்துச் சொல்லவும், அவற்றைப் பாதுகாத்து வளர்க்கவும் இவ்விசுவாச அறிக்கை துணை செய்யும். இளைய சமுதாயத்திற்கு இது வழிகாட்டியாக அமைவதோடு, வேத ஆதாரங்களுடன் அவர்கள் தங்களுடைய விசுவாசத்திற்கான காரணத்தையும் எடுத்துக்கூற துணைபுரியும் என்று ஸ்பர்ஜன் வலியுறுத்தினார்.
இதுவரை ஆங்கிலத்தில் இருந்த இவ்விசுவாச அறிக்கை, தமிழ் விசுவாசிகளுக்கும் திருச்சபைகளுக்கும் பயன்படும்படியாக முதன் முதலாக தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்போது திருத்தங்கள் செய்து மூன்றாம் பதிப்பாக சீர்திருத்த வெளியீடுகளின் மூலம் வெளியிடப்படுகிறது. சபைப் போதகர்கள் இதைப் படித்து வேத சத்தியங்களில் மேலான அறிவு பெற்று தம் மக்களுக்கு அவற்றைத் தெளிவாகப் போதிக்கவும், அச்சத்தியங்களின்படி சபையை வழி நடத்தவும் இது உதவும். தமிழ் மக்கள் மத்தியில் சீர்திருத்தக் கோட்பாடுகள் வளரவும், வேதசத்தியங்களின் அடிப்படையில் திருச்சபைகள் இயங்கவும் இவ்விசுவாச அறிக்கை பயன்பட கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்.
விசுவாச அறிக்கை ஏன் அவசியம்?
- நாம் எதை விசுவாசிக்கிறோம் என்பதைத் தயக்கமில்லாமல் வெளிப்படையாக எடுத்துக்கூற விசுவாச அறிக்கை உதவுகிறது. சிலர் No Creed, No Confession, Bible alone என்று கூறி தாம் விசுவாசிப்பதை வெளிப்படையாக சொல்லத் தயங்குகிறார்கள். விசுவாச அறிக்கை மனிதனால் எழுதப்பட்டது என்று கூறி அதை வேதத்திற்கு விரோதமானதாக தவறாகக் கருதுகிறார்கள். ஆனால், விசுவாச அறிக்கை நமது நன்மைக்காக வேதசத்தியங்களை மட்டுமே தொகுத்துத் தந்து அவற்றை நாம் நாடறியப் பறைசாற்ற உதவுகிறது.
- சபைப் போதகர்களும், சபை அங்கத்தவர்களும் வேதத்தை விட்டு விலகிப்போகாதபடித் தம்மைக் காத்துக்கொள்ள இது உதவுகிறது. இவ்விசுவாச அறிக்கையை பயன்படுத்தும் சபைகளில் இதனை ஏற்றுக்கொள்ளாத போதகர்களுக்கு இடமில்லை, அங்கத்தவர்களுக்கும் இடமில்லை; “தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த இராஜ்யமும் பாழாய்ப்போகும்” என்று இயேசு சொன்னார். ஆர்மீனியனிசப் போதனைகள், பெலேஜியனிசப் போதனைகள், கெரிஸ்மெட்டிக் போதனைகள் என்று எல்லாவற்றையும் விசுவாசிக்கும் போதகர்களையும் அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய ஒரு சபை எப்படி ஒரே சத்தியத்தில் கூடி ஜெபிக்கவோ, ஆராதிக்கவோ, ஊழியம் செய்யவோ முடியும்? ஆகவே, விசுவாச அறிக்கையை முறையாகப் பின்பற்றும் சபைகளில் கலப்படமான இறையியலுக்கு இடமிருக்காது.
- ஒரு சபை தனது போதக ஊழியத்தை இதன் அடிப்படையில் ஆராய்ந்து தன்னையும், தனது போதகர்களையும் காத்துக்கொள்ள முடியும். போதகர்கள் (வேதத்தில்) உண்மையுள்ள மனிதர்களாக இருக்க வேண்டும் என்று பவுல் (2 தீமோத்தேயு 2:2) சொல்லுகிறார். அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைக் கொண்டவர்களாகவும், எதிர் பேசுகிறவர்களை கண்டனம் செய்ய வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் (தீத்து 1:9) என்றும் சொல்லுகிறார். வேதாகமக் கல்லூரிகள் இத்தகைய மனிதர்களை உருவாக்குவதை எதிர்பார்க்க முடியாத இந்நாட்களில் விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தி சபை தன் போதகர்கள் சத்தியத்தில் உண்மையுள்ளவர்களாகவும் அதை மட்டுமே போதிக்கிறவர்களாகவும் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள முடியும்.
- போலிப் போதனைகள் சபையை அணுகும்போது அவற்றை வேதரீதியில் ஆராய்ந்து அவற்றில் இருந்து சபையைப் பாதுகாத்துக்கொள்ள விசுவாச அறிக்கை துணை செய்கிறது. சபையில் சத்தியத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது அவற்றைத் தவிர்த்துக்கொள்ளவும் விசுவாச அறிக்கை துணை செய்கிறது.
- விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தி வேத சத்தியங்களை முறையாகப் போதித்து சபை மக்களை சத்தியத்தில் வளர்க்க முடியும். வினாவிடைப் போதனையும் (Catechism) இதே வகையில் உதவும்.
- சபையில் ஒழுங்கை நிலைநாட்டி தேவையானபோது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசுவாச அறிக்கை துணை செய்கிறது. சத்தியத்தை விட்டு விலகிப் போகிறவர்களை இனங்கண்டு அவர்களைத் திருத்தவும், சபையைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
- சத்தியத்தின் அடிப்படையில் அமையாத சபைக் கூட்டும், ஐக்கியமும், ஆத்மீக வளர்ச்சிக்கு உதவாது. விசுவாச அறிக்கை நாம் எதை விசுவாசிக்கிறோம் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ளவும், அவற்றை விசுவாசிப்பவர்களோடு சேர்ந்து நாம் ஐக்கியத்தில் வரவும், வளரவும் துணைபுரியும்.
- இறுதியாக, நமது சபைகளுக்கு வரலாற்று ரீதியிலான ஒரு தொடர்ச்சியை (Historical Continuity) விசுவாச அறிக்கை அளிக்கிறது. நாம் காளான்கள் போல இன்று முளைத்து நாளை அழியப்போகிறவர்கள் அல்ல. நமக்கு ஒரு வரலாறு இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையையும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு புத்துணர்ச்சியையும் விசுவாச அறிக்கை அளிக்கிறது. நமது சீர்திருத்தத் தந்தையரும், பியூரிட்டன் பெரியவர்களும் வேதம் வெளிப்படுத்தும் இச்சத்தியங்களையே நம்பிப் போதித்து சபை வளர்த்துள்ளார்கள். வளர்ச்சி கண்டார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ஊக்கத்தோடு ஊழியம் செய்ய விசுவாச அறிக்கை உதவும். நமது சந்ததியினருக்கு நமது பிதாக்களின் விசுவாசத்தை விட்டுச் செல்லும் பாக்கியத்தை இது நமக்கு அளிக்கிறது.
