32. இறுதி நியாயத்தீர்ப்பு

1. இயேசு கிறிஸ்துவால் நீதியுடன் இவ்வுலகை நியாயந்தீர்க்க கடவுள் ஒரு நாளை நியமித்திருக்கிறார். பிதா, குமாரனுக்கு நியாயத்தீர்ப்பிற்கான சகல அதிகாரத்தையும் வல்லமையையும் தந்துள்ளார். அந்நாளில் விழுந்துபோன தேவதூதர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். அதேபோல் உலகத்தில் வாழ்ந்திருந்த அனைவரும் நியாயந்தீர்க்கப்படுவார்கள். அவர்கள் தங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் எல்லாவற்றிற்கும் கணக்குக் கொடுப்பதற்கும், தாங்கள் இவ்வுலக வாழ்வில் செய்துள்ள நன்மை தீமைகளின் அடிப்படையில் வெகுமதியைப் பெற்றுக்கொள்ளவும் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு சிம்மாசனத்திற்கு முன்பாக தோன்றுவார்கள்.

பிரசங்கி 12:14; மத்தேயு 12:36; 25:32-46; யோவான் 5:22,27; அப்போஸ்தலர் 17:31; ரோமர் 14:10,12; 1 கொரிந்தியர் 6:3; 2 கொரிந்தியர் 5:10; யூதா 6.

2. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நித்திய இரட்சிப்பின் மூலம் தமது கருணையின் மகிமையை வெளிப்படுத்தவும், தன்னால் புறக்கணிக்கப்பட்டவர்களின் அதாவது கேடானவர்களும், கீழ்ப்படியாதவர்களும் நித்திய அழிவின் மூலம் தமது நீதியின் மகிமையை வெளிப்படுத்தவும் கடவுள் நியாயத்தீர்ப்புக்கென்று ஒரு நாளைத் தீர்மானித்துள்ளார். அந்நாளில் நீதிமான்கள் நித்திய ஜீவனையும், தேவனுடைய சந்நிதானத்தில் மனமகிழ்ச்சியையும், மகிமையையும் நித்திய வெகுமதியாகப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால், கடவுளை அறியாத, இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படிய மறுத்த கேடானவர்கள் நித்திய வேதனையை அடையும்படி நியமிக்கப்பட்டு கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

மத்தேயு 25:21,34,46; மாற்கு 9:48; ரோமர் 9:22,23; 2 தெசலோ 1:7-10; 2 தீமோத்தேயு 4:8.

3. எல்லா மனிதர்களும் பாவத்தைச் செய்வதை தடுப்பதற்காகவும், உபத்திரவத்தில் நீதிமான்களுக்கு அதிக ஆறுதலைக் கொடுப்பதற்காகவும் நியாயத்தீர்ப்பு நாள் வருகிறது என்பதை நாம் நம்ப வேண்டுமென்று கிறிஸ்து எதிர்பார்க்கிறார். அதற்காகவே அந்நாளை அவர் மிகவும் இரகசியமாக வைத்திருக்கிறார். மனிதர்கள் எல்லாத் தன்னம்பிக்கைகளையும் உதறித்தள்ளி, ஆண்டவர் எந்நேரத்தில் வருவார் என்ற அறியாமையுடன், எப்போதும் கவனத்துடன் இருந்து “ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்; சீக்கிரமாய் வாரும்” என்று சொல்லத் தயாராய் இருப்பதற்காக கிறிஸ்து இவ்வாறு செய்தார். மாற்கு 13:35-37; லூக்கா 12:35-40; 2 கொரி 5:10,11; 2 தெசலோ 1:5-7; வெளிப்படுத்தல் 22:20.