1. இறந்தபின் மனிதர்களுடைய சரீரம் மண்ணை அடைந்து அழுகிப்போகின்றன. ஆனால், அவர்களுடைய நித்தியமான ஆவிகள் இறக்காமலும், உணர்வற்ற நிலையை அடையாமலும், உடனடியாக தம்மைப் படைத்த கடவுளை அடைகின்றன. நீதிமான்களின் ஆவிகள் மரணத்தின்போது தங்களுடைய பரிசுத்தம் பூரணமடைந்து பரலோகத்தை அடைகின்றன. அங்கே அவர்கள் கிறிஸ்துவோடிருந்து, மகிமையின் ஒளியில் கடவுளின் முகத்தைப் பார்த்துக்கொண்டு, தங்களுடைய சரீரங்களின் முழு விடுதலைக்கான நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். கேடானவர்களின் ஆவிகள் நரகத்திற்கு தள்ளப்பட்டு, கடுமையான இருளில் வேதனையை அனுபவித்து நியாயத்தீர்ப்பு நாளுக்காகக் காத்திருக்கின்றன. மனித சரீரங்களை விட்டகன்ற ஆவிகள் ஒன்றில் பரலோகத்திலோ அல்லது நரகத்திலோ இருக்கின்றன. இவை தவிர்ந்த வேறு எந்த இடத்தைப் பற்றியும் வேதம் போதிக்கவில்லை.
ஆதி 3:19; பிரசங்கி 12:7; லூக்கா 16:23,24; 23:43; அப்போஸ் 13:36; 2 கொரி 5:1,6,8; பிலி 1:23; எபி 12:23; 1 பேதுரு 3:19; யூதா 6,7.
2. கடைசி நாளில் இவ்வுலகில் உயிரோடிருக்கும் விசுவாசிகள் இறக்காது உடனடியாக மாற்றமடைவார்கள். இறந்த அனைவரும் தாங்கள் எப்போதும் கொண்டிருந்த அதே சரீரத்துடன் உயிர்த்தெழுந்து தங்களுடைய ஆவிகளுடன் நிரந்தரமாக இணைக்கப்படுவார்கள். இருப்பினும் அவர்களுடைய சரீரம் தன்மையில் வேறுபட்டதாக இருக்கும்.
யோபு 19:26,27; 1 கொரிந்தியர் 15:42,43,51,52; 1 தெசலோ 4:17.
3. கிறிஸ்துவின் வல்லமையால் அநீதியானவர்களின் சரீரங்கள் அவமதிப்பிற்காக உயிர்த்தெழும். தன்னுடைய ஆவியால் கிறிஸ்து நீதிமான்களின் சரீரங்களை மகிமைக்காக உயிர்த்தெழச்செய்து தன்னுடைய மகிமையான சரீரத்தைப்போல மாற்றி அமைப்பார். யோவான் 5:28,29; அப்போஸ்தலர் 24:15; பிலிப்பியர் 3:21.
