25. திருமணம்

1. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையிலேயே எப்போதும் திருமணம் நடக்க வேண்டும். ஒரு சந்தர்ப்பத்தில் ஓர் ஆண் ஒரு மனைவிக்குமேல் வைத்திருப்பதோ அல்லது ஒரு பெண் ஒரு கணவனுக்கு மேல் வைத்திருப்பதோ நீதியானதல்ல.

ஆதியாகமம் 2:24; மல்கியா 2:15; மத்தேயு 19:5,6.

2. கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் துணையாக அமையவும் கடவுளுடைய நீதிப்படி மனித வர்க்கம் அதிகரிக்கவும், ஒழுக்கமற்ற வாழ்விலிருந்து அவர்களைத் தடுக்கவும் கடவுள் திருமணத்தை ஏற்படுத்தினார்.

ஆதியாகமம் 1:28; 2:18; 1 கொரிந்தியர் 7:2,9.

3. அனைத்து மனிதர்களும் அறிவுபூர்வமான மனம் விரும்பி திருமண உறவிற்கு உட்படலாம். ஆனால், கிறிஸ்தவர்கள் ஆண்டவருக்குள்ளாகத் திருமணம் செய்வது அவர்களுடைய கடமையாகும். இதனால் கிறிஸ்தவ விசுவாசிகள் புற சமயத்தைச் சார்ந்தவர்களுடனும், உருவ வழிபாடு செய்பவர்களுடனும் திருமணத் தொடர்பு வைத்தலாகாது. பக்திவிருத்தியுடையவர்கள் தீயவாழ்க்கை வாழ்பவர்களுடனும், கண்டிப்புக்குரிய போதனைகளைப் பின்பற்றுபவர்களுடனும் திருமணத்தில் பங்குகொள்வது தகுதியற்ற செயலாகும்.

நெகேமியா 13:25-27; 1 கொரி 7:39; 1 தீமோ 4:2; எபி 13:4.

4. வேதாகமத்தால் தடைசெய்யப்பட்டுள்ள இரத்தத் தொடர்புடைய உறவினர்களுடன் திருமணத் தொடர்பு வைத்தலாகாது. அத்தகைய முறைகேடான தொடர்புகள் ஏற்படின் நாட்டுச் சட்டங்களின் மூலமாகவோ அல்லது அத்தகைய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்களாலோ அவ்வுறவுகள் சட்டபூர்வமாக்கப்பட முடியாது. அத்தோடு அத்தகைய வாழ்க்கை நடத்துபவர்கள் கணவனும் மனைவியுமாக ஒருபோதும் முறையாக வாழவும் முடியாது. லேவியராகமம் 18; மாற்கு 6:18; 1 கொரிந்தியர் 5:1.