1. நியாயபூர்வமான உறுதிமொழி எடுத்தல் ஒரு சமய வழிபாட்டுச் சடங்காகும். இவ்வாறாக உறுதிமொழி எடுப்பவர் கடவுளின் சத்தியத்தையும், நீதியையும், நியாயத்தீர்ப்பையும் மனதில் கொண்டு பயபக்தியுடன் தான் எடுத்த உறுதிமொழிக்கு சாட்சியாக இருக்குமாறும், அவ்வுறுதிமொழியில் காணப்படும் உண்மை அல்லது பொய்யின் அடிப்படையில் தன்னை நியாயந்தீர்க்கும்படியும் கடவுளை வேண்டுகிறார்.
யாத்திராகமம் 20:7; உபாகமம் 10:20; 2 நாளாகமம் 6:22,23; எரேமியா 4:2.
2. பயபக்தியுடனும், மரியாதையுடனும் கடவுளின் பெயரில் எடுக்கப்படும் உறுதிமொழியே நியாயபூர்வமானது. பயபக்திக்குரியதும், மரியாதையுள்ளதுமான அப்பெயரின் மூலம் கண்மூடித்தனமாகவோ, வீணாகவோ அல்லது வேறு எந்தப் பெயரைப் பயன்படுத்தியோ உறுதிமொழி எடுப்பது பாவமானதும், வெறுக்கப்பட வேண்டியதுமான செயலுமாகும். முக்கியமானதும், பெருஞ்சிறப்பு வாய்ந்ததுமான காரியங்களுக்காகவும், சத்தியம் நிலை நாட்டப்பட வேண்டிய நிலைமையிலும், சச்சரவுகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வருமுகமாகவும் எடுக்கப்படும் உறுதிமொழிகளுக்கு கடவுளின் வார்த்தை ஒப்புதலளிக்கின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் சட்டபூர்வமான அதிகாரமுள்ளவர்களால் சுமத்தப்படும் நியாயபூர்வமான உறுதிமொழிகளை எடுப்பது அனுமதிக்கப்படுகின்றது.
நெகேமியா 13:25; மத்தேயு 5:34,37; 2 கொரிந்தியர் 1:23; எபிரெயர் 6:16; யாக்கோபு 5:12.
3. கடவுளின் வார்த்தைக்கு இணக்கமான உறுதிமொழிகளை எடுப்பவர்கள் தாம் செய்யும் காரியத்தின் பொறுப்பை உணர்வதோடு, தமக்குத் தெரிந்த உண்மையைத் தவிர வேறு எதையும் கூறாமலிருப்பதில் மிகக் கவனம் செலுத்தல் அவசியம். கண்மூடித்தனமாகவும், பொய்யாகவும், வீணாகவும், எடுக்கப்படும் உறுதிமொழிகளால் கடவுள் எரிச்சலூட்டப்படுகிறார். இதனால் ஒரு நாடே துன்பத்திற்குள்ளாகியது.
லேவியராகமம் 19:12; எரேமியா 23:10.
4. எடுக்கப்படும் உறுதிமொழி சாதாரணமானதாகவும், வழமையாகப் பயன்படுத்தப்படும் சொற்களைக் கொண்டும் அமைந்திருப்பதோடு இரு பொருள் கொண்டதாகவோ அல்லது அரைகுறை மனத்துடனோ இருக்கக்கூடாது.
சங்கீதம் 24:4.
5. கடவுளுக்காக மட்டுமேயன்றி வேறெந்த படைப்புயிர் களுக்காகவும் வாக்குறுதிகள் எடுக்கப்படக்கூடாது. எடுக்கப்படும் வாக்குறுதிகள் இம்மையும் பிழையாது, உண்மையோடு கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆனால், ரோமன் கத்தோலிக்க சபையோடு தொடர்புடைய, திருமணமாகாமல் மதகுருவாக இருந்து எடுக்கப்படும் வாக்குறுதிகளும், வறிய வாழ்க்கை முறையும், இடைவிடாத கீழ்ப்படிதலும் மேலான பரிசுத்தத்தின் அடையாளங்களாக இல்லாமல் வெறும் மூட நம்பிக்கையாகவும், பாவத்தின் சூழ்ச்சிகளுமாக இருப்பதால் கிறிஸ்தவர்கள் இவற்றைப் பின்பற்றக்கூடாது.
ஆதியாகமம் 28:20-22; சங்கீதம் 76;11; மத்தேயு 19:11; 1 கொரிந்தியர் 7:2,9; எபேசியர் 4:28.
