20. நற்செய்தியும் அதன் செல்வாக்கும்

1. மனிதனுடைய பாவத்தால் கிரியைகளின் உடன்படிக்கை முறிக்கப்பட்டு அதனால் ஜீவன் அளிக்க முடியாமல் போனதால் கடவுள் தன்னுடைய கருணையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை அழைத்து அவர்களுள் மனந்திரும்புதலையும், இரட்சிப்பையும் கொண்டுவரும் பொருட்டு பெண்ணின் வித்தாகிய கிறிஸ்துவைத் தர விருப்பத்துடன் வாக்களித்தார். இவ்வாக்குறுதியில், பாவிகள் மனந்திரும்பவும், இரட்சிப்பைப் பெறவும், பயன்தரக்கூடிய சாதனமான நற்செய்தியின் உள்ளடக்கம் வெளிப்படுத்தப்படுகிறது.

ஆதியாகமம் 3:15; வெளிப்படுத்தல் 7:9.

2. கடவுளின் வார்த்தையின் மூலமாக மட்டுமே மனிதனுக்கு கிறிஸ்துவின் இவ்வாக்குறுதியும், இரட்சிப்பும் வெளிப்படுத்தப்படுகிறது. படைப்பின் கிரியைகளோ, பராமரிப்போ, இயற்கை வெளிப்படுத்தும் அறிவோ மனிதர்களுக்கு கிறிஸ்துவையும் அவரது கிருபையையும் பொதுவாகவோ அல்லது மறைமுகமாகவோகூட வெளிப்படுத்த முடியாது. நற்செய்தியின் வாக்குறுதி மூலமாக வெளிப்படும் கிறிஸ்துவைப் பற்றிய அறிவைப் பெறாத மனிதர்கள் இரட்சிப்பின் விசுவாசத்தையோ மனந்திரும்புதலையோ இவற்றின் மூலமாக ஒருபோதும் அடைய முடியாது.

நீதிமொழிகள் 29:18; ஏசாயா 25:7; 60:2,3; ரோமர் 1:17; 10:14,15,17.

3. கடவுளின் இறையாண்மையுள்ள சித்தத்தினாலும், நல்விருப்பத்தினாலும் நற்செய்தியானது அதனுடைய வாக்குறுதிகளோடும் நற்செய்தியின் கீழ்ப்படிவுக்குரிய கட்டளைகளோடும், நாடுகளுக்கும் குறிப்பிட்ட தனி மனிதர்களுக்கும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது. நற்செய்தியை வெளிப்படுத்தும் வாக்குறுதியானது எல்லோருக்கும் பொதுவான அறிவின் மூலம் வளர்ந்த மனிதனுடைய இயற்கைத் திறமைகளின் மூலம் ஏற்பட்ட எந்த நற்பணியின் அடிப்படையிலும் கொடுக்கப்படவில்லை. அத்தகைய வளர்ச்சி ஒருபோதும் ஏற்படவில்லை, ஏற்படவும் முடியாது. ஆகவே, எல்லாக் காலங்களிலும் கடவுளுடைய சித்தத்தின் ஆலோசனையின்படி தனிப்பட்ட மனிதனுக்கும் அல்லது நாடுகளுக்கும் சில குறிப்பிடப்பட்ட இடங்களிலோ அல்லது பரவலான பகுதிகளிலோ நற்செய்தியின் பிரசங்கமானது வெவ்வேறான அளவுகளில் (பரிமாணங்களில்) கொடுக்கப்படுகிறது.

சங்கீதம் 147:20; அப்போஸ்தலர் 16:7; ரோமர் 1:18-32.

4. கிறிஸ்துவையும், இரட்சிக்கும் கிருபையையும் வெளிப்படுத்தும் புற சாதனமாக நற்செய்தி மட்டுமே அமைவதன்றி இப்பணியைப் பூரணமாக நிறைவேற்றக்கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. ஆனால், பாவத்தில் மரித்துள்ள மனிதன் மறுபிறப்படைவதற்கு இதைவிட மேலான செயல் அவசியமாகின்றது. அதாவது, மனிதனின் ஆத்துமாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு புதிய ஆவியின் வாழ்வை ஏற்படுத்தக்கூடிய திட்ப உறுதியும், அசைக்க முடியாததுமான பரிசுத்த ஆவியின் கிரியை அவசியமாகின்றது. இதைத் தவிர்த்த வேறெந்த செயலும் மனிதன் மனந்திரும்ப உதவாது. சங்கீதம் 110:3; யோவான் 6:44; 1 கொரி 2:14; 2 கொரி 4:4,6; எபேசியர் 1:19,20.