19. கடவுளின் நீதிச் சட்டம்

1. ஆதாமின் இருதயத்தில் எழுதப்பட்டிருந்த அவனுடைய முழுமையான கீழ்ப்படிவைக் கோரும் நியாயப்பிரமாணத்தை கடவுள் அவனுக்குத் தந்தார். அத்தோடு முக்கியமாக நன்மை தீமையை அறியத்தக்க மரத்திலிருந்த கனியை உணவாகக் கொள்ளக்கூடாது என்றும் அவனுக்குக் கட்டளையிட்டிருந்தார். இதன்மூலம் ஆதாமும், அவனது வழித்தோன்றல்களும், தனிப்பட்டதும், முழுமையானதும், துல்லியமானதும், தொடர்ச்சியானதுமான கீழ்ப்படிவிற்கு உட்படுத்தப்பட்டார்கள். கடவுள் இதனை நிறைவேற்றுபவர்களுக்கு ஜீவனை அளிப்பதாக வாக்குறுதியளித்ததோடு நியாயப்பிரமாணத்தை மீறுபவர்கள் மரணத்தைச் சந்திக்க நேரிடும் என்று பயமுறுத்தி தனது நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்கக்கூடிய வல்லமையையும், ஆற்றலையும் அவனுக்குத் தந்தார்.

ஆதி 2:16,17; பிரசங்கி 7:29; ரோமர் 10:5; கலாத்தியர் 3:10,12.

2. முதன் முதலாக மனிதனின் இருதயத்தில் எழுதப்பட்டிருந்த நியாயப்பிரமாணம் மனிதன் பாவத்தில் வீழ்ந்த பின்பும் தொடர்ந்து பூரணமான நீதிச்சட்டமாக இருந்து கடவுளால் இரு கற்களில் எழுதப்பட்டு பத்துக்கட்டளைகளாக சீனாய் மலையில் கொடுக்கப்பட்டது. முதல் நான்கு கட்டளைகளும் கடவுளுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளையும், ஏனைய ஆறு கட்டளைகளும் சக மனிதர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் எடுத்து விளக்குகின்றன. இப்பத்துக் கட்டளைகளும் அறவிதி நெறிமுறை ஒழுங்குச் சட்டங்கள் (ஒழுக்க நீதிச்சட்டங்கள்) என அழைக்கப்படுகின்றன.

உபாகமம் 10:4; ரோமர் 2:14,15.

3. இவ்வொழுக்க நீதிச் சட்டங்களைத் தவிர கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு வரப்போகும் காரியங்களை எடுத்துக்காட்டும் மாதிரிகளாக அமைந்த சடங்குமுறைச் சட்டங்களையும் அளித்தார். அவை இரு முக்கிய பகுதிகளாக அமைந்துள்ளன. ஒரு குழுவில் அவர்களுடைய ஆராதனையோடு சம்பந்தப்பட்ட, கிறிஸ்துவையும் அவருடைய கிருபைகள், நடவடிக்கைகள், பட்ட துன்பங்கள், நமக்காக அவர் பெற்றெடுத்த ஆசீர்வாதங்கள் என்பவற்றை முன்குறித்துணர்த்தும் சடங்குகள் அமைகின்றன. இன்னுமொரு குழு ஒழுக்கக் கடமைகள் பற்றிய பல்வேறு போதனைகளைக் கொண்டிருந்தது. மெய்யான மேசியாவும், நியாயப்பிரமாணத்தை அளிப்பவருமான இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டுக் காலத்தில் பிதாவினால் தரப்பட்ட வல்லமையைக் கொண்டு சடங்குமுறைச் சட்டங்களை அகற்றும்வரை அவை அனைத்தும் கடவுளின் கட்டளையின்படி பின்பற்றப்பட வேண்டும்.

1 கொரிந்தியர் 5:7; எபேசியர் 2:14,16; கொலோசெயர் 2:14,16,17; எபிரெயர் 10:1.

4. கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு அவர்கள் ஒரு நாடாகத் தொடர்ந்திருக்கும்வரை பயன்படக் கூடிய பல்வேறு நீதிமுறைச் சட்டங்களையும் அளித்தார். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் காணப்பட்ட காரணங்களினால் அல்லாமல் அவற்றில் அடங்கியுள்ள நீதித்தத்துவங்களின் மாறாத்தன்மையினால் அவை இன்றும் செல்லுபடியானவை.

1 கொரிந்தியர் 9:8-10.

5. நீதிமான்களாக்கப்பட்டவர்களும் ஏனையோரும் எப்போதுமே ஒழுக்க நீதிச் சட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவற்றில் அடங்கியுள்ள காரியங்களுக்காகவும் படைப்பாளியானவரும், நியாயப்பிரமாணத்தை அளித்தவருமான கடவுளின் அதிகாரத்திற்கு மதிப்பளித்தும் இதை அவர்கள் செய்ய வேண்டியவர்களாக உள்ளார்கள். நற்செய்தியின் மூலம் கிறிஸ்து நாம் இதற்குக் கீழ்ப்படிய வேண்டிய நிலையை அகற்றிவிடாமல், அதற்குக் கீழ்ப்படிய வேண்டிய நமது கடமைப்பொறுப்பை மேலும் வலிமைப்படுத்துகிறார்.

மத்தேயு 5:17-19; ரோமர் 3:31; 13:8-10; யாக்கோபு 2:8,10-12.

6. மெய்யான விசுவாசிகளை நீதிமான்களாக்கவோ அல்லது கண்டனத்துக்குள்ளாக்கவோ பயன்படும் கிரியைகளின் உடன்படிக்கையாக நியாயப்பிரமாணம் இருக்கும்வரை அது அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. ஆனால், வேறு சில வழிகளில் அது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பெரும் பலனளிப்பதாக இருக்கிறது. அது அவர்களுக்கு கடவுளுடைய சித்தத்தையும் அவர்களுடைய கடமையையும் எடுத்துக்கூறும் வாழ்க்கை நியதியாக இருப்பதோடு, அதன்படி நடக்கும்படியாக அவர்களைக் கட்டாயப்படுத்தியும் வழி நடத்துகிறது. அவர்களுடைய இருதயத்திலும், வாழ்க்கையிலும் காணப்படும் பாவத்தின் பாதிப்புகளை வெளிப்படுத்தி அதன்மூலம் அவர்கள் தங்களை நியாயப்பிரமாணத்தின் மூலம் சுயபரிசோதனை செய்து, தங்களுடைய பாவங்களுக்காக மிக ஆழமாக மனம் வருந்தி அவற்றின் பொருட்டு தாழ்மையுணர்வடைந்து பாவங்களை மேலும் வெறுக்கவும் செய்கிறது. அதே சமயம் நியாயப்பிரமாணம் கிறிஸ்துவின் அவசியத்தை அவர்களுக்கு தெளிவாக உணர்த்துவதோடு கிறிஸ்து நியாயப்பிரமாணத்திற்கு பூரணமாகக் கீழ்ப்படிந்ததையும் விளக்குகிறது. அவ்வாறே நியாயப்பிரமாணம் பாவத்தைக் கண்டிப்பதோடு மறுபிறப்படைந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் காணப்படும் பாவத்தைத் தூண்டும் கேடான எண்ணங்களுக்கெதிராகப் போராடவும் தூண்டுகிறது. மறுபிறப்படைந்தவர்கள் நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்தும், அதன் தடையற்ற கண்டிப்பான விதிகளிலிருந்தும் விடுதலை அடைந்திருந்தாலும் நியாயப்பிரமாணத்தின் பயமுறுத்தல்கள் அவர்களுடைய பாவங்கள் எத்தகைய தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதையும், அப்பாவங்களால் இவ்வுலக வாழ்வில் அவர்கள் பட வேண்டிய துன்பங்களையும் விளக்கப் பயன்படுகிறது. நியாயப்பிரமாணத்தோடு தொடர்புடைய வாக்குறுதிகள் விசுவாசிக்கு அவர்களுடைய கீழ்ப்படிவை கடவுள் ஏற்பதையும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது எத்தகைய ஆசீர்வாதங்கள் கிட்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், நியாயப்பிரமாணத்தை கிரியைகளின் உடன்படிக்கையாக அவர்கள் கருதினால் இவ்வாசீர்வாதங்களை அவர்கள் அடைய முடியாது. நியாயப்பிரமாணம் செய்யும்படித் தூண்டும் நன்மைகளை மட்டும் செய்து தீமைகளை ஒருவர் செய்யாதிருப்பது அவர் கிருபையை அனுபவிக்காமல் நியாயப்பிரமாணத்தின் கீழ் தொடர்ந்திருக்கிறார் என்பதற்கு தகுந்த சான்றல்ல.

ரோமர் 3:20; 6:12-14; 7:7; 8:1; 10:4; கலாத்தியர் 2:16; 1 பேதுரு 3:8-13.

7. நாம் இதுவரை பார்த்த நியாயப்பிரமாணத்தின் பயன்கள் நற்செய்தியின் கிருபைக்கு முரணானவையாக அல்லாமல் அத்தோடு ஒத்துப்போகிறவையாயுள்ளன. ஏனெனில், கிறிஸ்துவின் ஆவி மனிதனின் மாம்ச சித்தத்தை அடக்கி, நியாயப்பிரமாணத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு மனிதன் பின்பற்றும்படி எதிர்பார்க்கப்படும் கடவுளுடைய சித்தத்தை அவன் சுதந்திரத்தோடும், ஆர்வத்தோடும் செய்யும்படிச் செய்கிறது. எசேக்கியேல் 36:27; கலாத்தியர் 3:21.