1. தாம் இரட்சிக்கப்பட்டிருப்பதாகவும், கடவுளின் தயவு தம்மோடிருப்பதாகவும் தற்காலிக விசுவாசிகளும், மறுபிறப்பு அடையாதவர்களும் தவறான நம்பிக்கையையும், மாம்சத்திற்குரிய ஊக்கத்தையும் கொண்டிருந்தாலும் அத்தகைய நம்பிக்கைகள் இறுதியில் வீண்போகும். இருப்பினும், இயேசு கிறிஸ்துவை மெய்யாக விசுவாசித்து, உண்மையுடன் அவரில் அன்பு செலுத்தி, நல்மனச்சாட்சியுடன் அவருக்காக வாழ்பவர்களின் இவ்வுலக வாழ்வில் தாம் கிருபையின் ஸ்தானத்தில் இருக்கும் நிச்சயத்தை அடைவர். அவர்கள் தேவ மகிமையின் நம்பிக்கையிலும் மகிழ்ச்சி அடைவார்கள். அத்தகைய நம்பிக்கை அவர்களை ஒருபோதும் அவமானத்திற்குள்ளாக்காது.
யோபு 8:13,14; மத்தேயு 7:22,23; ரோமர் 5:2,5; 1 யோவான் 2:3; 3:14,18,19,21,24; 5:13.
2. இரட்சிப்பின் நிச்சயமானது ஊகத்திற்கிடமானதோ அல்லது தவறும் இயல்புடைய நம்பிக்கையில் அமைந்ததோ அல்ல. ஆனால், அது நற்செய்தியில் வெளிப்படுத்தப்படும் கிறிஸ்துவின் இரத்தத்தையும், நீதியையும் ஆதாரமாகக் கொண்ட தவறிழைக்காத விசுவாசத்தின் நிச்சயமாக இருக்கிறது. (இது கிறிஸ்துவின் வரலாற்று நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டது). அத்தோடு, இது பரிசுத்த ஆவியின் உள்ளான கிருபையின் அடையாளங்களையும் ஆதாரமாகக் கொண்டது. ஏனெனில், அவ்வித கிருபைகளுக்கே கடவுள் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார். மேலும் இது நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோமென்று நம்முடைய ஆவியினூடாக சாட்சியளிப்பதோடு, இரட்சிப்பின் நிச்சயமான அனுபவத்தின் மூலம் நமது இருதயத்தைத் தாழ்மையுடனும் பரிசுத்தமாகவும் வைத்திருக்கும் புத்திரசுவிகார ஆவியின் சாட்சியையும் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.
ரோமர் 8:15,16; எபிரெயர் 6:11,17-19; 2 பேதுரு 1:4,5,10,11; 1 யோவான் 3:1-3
3. இத்தவறிழையாத இரட்சிப்பின் நிச்சயமானது இரட்சிப்பின் இன்றியமையாத பகுதியல்ல. மாறாக மெய்யான விசுவாசி அதை அடைவதற்கு அநேக காலம் காத்திருந்து பலவிதமான துன்பங்களுக்கூடாகவும் செல்ல நேரிடும். அற்புதமான வெளிப்படுத்தல் எதன் மூலமாகவும் அல்லாமல் கடவுளால் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஆவியின் மூலமாக அறிந்து கிருபையின் சாதனங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்நிச்சயத்தை விசுவாசி அடைய முடியும். ஆகவே, தனது அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கிக் கொள்ளுவதில் முழுமுயற்சி எடுப்பது ஒவ்வொரு விசுவாசியினுடையதும் கடமையாக இருக்கின்றது. இதைச் செய்வதன் மூலம் பரிசுத்த ஆவியில் மேலான சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதோடு, கடவுளிடம் மேலான அன்பையும் நன்றியறிதலையும் கொண்டு கடமையுணர்வுடைய தமது கீழ்ப்படிவில் உற்சாகமும் அதிக வல்லமையும் பெறுகிறார்கள். மேற்கூறப்பட்டவையே இரட்சிப்பின் நிச்சயத்துவத்தினால் ஏற்படுபவையாக இருப்பதோடு மனிதர்கள் இழிவான வாழ்க்கை வாழ்வதற்கு இந்நிச்சயம் வழிகாட்டியாக இருக்கமாட்டாது என்பதற்கும் உறுதியான சான்றுகளாக உள்ளன.
சங் 77:1-12; சங் 88; 119:32; ஏசாயா 50:10; ரோமர் 5:1,2,5; 6:1,2; 14:17; தீத்து 2:11,12,14; எபிரெயர் 6:11,12; 1 யோவான் 4:13.
4. மெய்யான விசுவாசிகள் தமது இரட்சிப்பின் நிச்சயம் சில வேளைகளில் உயர்ந்தும், சில வேளைகளில் தாழ்ந்தும் இருப்பதை உணருவார்கள். இது அதனைப் பாதுகாப்பதில் அவர்கள் கவனக்குறைவாக இருந்ததனாலோ அல்லது அவர்கள் குறிப்பிட்ட ஒரு பாவத்தைச் செய்து தங்கள் மனச்சாட்சியைக் காயப்படுத்தி ஆவியைத் துக்கப்படுத்தியதாலோ அல்லது திடீரென்றோ தீவிரமாகவோ ஏற்பட்ட சோதனையாலோ அல்லது கடவுள் தமது முகதரிசனத்தை மீளப்பெற்றுக்கொண்டு தம்மில் பயமுள்ளவர்களின் மீது இருள்படியச் செய்வதாலோ ஏற்படலாம். எது நடந்த போதிலும் கடவுளால் பிறந்த புதிய சுபாவம், விசுவாச வாழ்க்கை, கிறிஸ்துவின் மீதும் சக விசுவாசிகளின் மீதும் உள்ள அன்பு, இதய சுத்தி மற்றும் கடமையுணர்வு ஆகிய இன்றியமையாத காரியங்கள் நிலைத்திருக்கும். இவற்றின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் செய்யும் செயலின் மூலமாகவும் அவர்களது இரட்சிப்பின் நிச்சயம் ஏற்ற காலத்தில் புதுப்பிக்கப்படும். அதற்கிடைப்பட்ட காலத்தில் இந்தக் காரியங்களின் செல்வாக்குகள் அவர்கள் முற்றிலும் அழிந்து போகாவண்ணம் அவர்களைப் பாதுகாக்கின்றது.
சங்கீதம் 30:7; 31:22; 45:5,11; 51:8,12,14; 77:7,8; 116:11; உன்னதப்பாட்டு 5:2,3,6; புலம்பல் 3:26-31; லூக்கா 22:32; 1 யோவான் 3:9.
