1. பரிசுத்தவான்கள் கடவுளால் திட்ப உறுதியாய் அழைக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்கப்பட்டு கடவுளால் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். தெரிந்துகொள்ளப்பட்ட அனைவருக்கும் உரித்தான அரிதான விசுவாசத்தை அவர் அவர்களுக்குக் கொடுத்துள்ளார். அத்தகைய ஆசீர்வாதங்களை அடைந்தவர்கள் கிருபையின் ஸ்தானத்திலிருந்து முழுதாகவோ அல்லது இறுதியிலோ விழ முடியாது. ஆனால், அவர்கள் நிச்சயமாக இறுதிவரை விடாமுயற்சியுடன் கிருபையின் தொடக்கத்தில் இருந்து நித்திய ஜீவனை அடைவார்கள். ஏனெனில் அவர்களை அழைத்து ஈவுகளைத் தந்த கடவுள் ஒருபோதும் மனம்மாறமாட்டார். இதன் விளைவாக அவர்களில் அவர் நிலைபேறான வாழ்விற்கு இட்டுச் செல்லும் விசுவாசம், மனந்திரும்புதல், அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை ஆகியவற்றோடு ஆவியின் அனைத்துக் கிருபைகளையும் தொடர்ந்து தோற்றுவிப்பதோடு அவற்றை ஊட்டி வளர்க்கவும் செய்கிறார். அநேக புயல்களும், வெள்ளங்களும் அவர்களைத் தாக்கினாலும் விசுவாசத்தின் மூலம் அவர்கள் உறுதியாக நிறுவப்பட்டுள்ள தளத்தின் மீதிருந்தும் கல்லின் மீதிருந்தும் ஒருபோதும் அவர்களை அசைக்க முடியாது. அவநம்பிக்கை, பிசாசின் சோதனைகள் ஆகியவை சில காலம் கடவுளுடைய அன்பு, ஆறுதல் என்பவற்றிலிருந்து அவர்களை வழிதவறிப்போகச் செய்தாலும் மாறாக் கடவுள் தொடர்ந்தும் அவர்களுடைய கடவுளாயிருப்பதோடு அவர்கள் கிறிஸ்துவால் விலைகொடுத்து வாங்கப்பட்ட தங்களுடைய உடைமையை அனுபவிக்கும்வரை கடவுள் தன்னுடைய வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்து இரட்சிப்பார். ஏனெனில், அவருடைய உள்ளங்கையில் அவை செதுக்கப்பட்டிருப்பதோடு அநாதிக்காலம் முதலே அவர்களுடைய பெயர்கள் ஜீவ புத்தகத்திலே எழுதப்பட்டுள்ளன.
சங்கீதம் 89:31,32; மல்கியா 3:6; யோவான் 10:28,29; 1 கொரி 11:32; பிலிப்பியர் 1:6; 2 தீமோ 2:19; 1 யோவான் 2:19.
2. பரிசுத்தவான்களின் விடாமுயற்சி அவர்களுடைய சுய சித்தத்தில் தங்கியிராமல் மாறாத்தன்மையுடைய தெரிந்துகொள்ளப்படுதலின் ஆணையில் தங்கியுள்ளது. இது பிதாவாகிய கடவுளின் இலவசமான, மாறாத்தன்மையுடைய அன்பிலும், கிறிஸ்துவின் வல்லமையிலும், நிச்சயமான வெற்றியை அளிக்கும் அவருடைய தகுதியிலும், பரிந்துரைத்தலிலும், அவரோடு பரிசுத்தவான்களுக்குள்ள ஐக்கியத்திலும், கடவுளின் ஆணையிலும், பரிசுத்தவான்களில் வாசம் செய்யும் ஆவியின் நிலையான தன்மையிலும், அவர்கள் பங்குகொள்ளும் தெய்வீகத் தன்மையிலும் இறுதியாக கிருபையின் உடன்படிக்கையின் நிபந்தனைகளிலும் தங்கியுள்ளது. இக்காரணிகள் அனைத்தும் பரிசுத்தவான்களின் விடாமுயற்சியின் நிச்சயத்திற்கும், தவறாநிலைக்கும் உத்தரவாதம் அளிக்கின்றன.
எரேமியா 32:40; யோவான் 14:19; ரோமர் 5:9,10; 8:30; 9:11,16; எபிரெயர் 6:17,18; 1 யோவான் 3:9.
3. பிசாசாலும் உலகத்தாலும் ஏற்படும் சோதனைகளினாலும் அவர்களுக்குள்ளிருக்கும் பாவம் மேலோங்குவதற்கு எத்தனிப்பதாலும், அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு கடவுளால் கொடுக்கப்பட்டுள்ள சாதனங்களை அவர்கள் கடைப்பிடிக்கத் தவறுவதாலும் பெருங்கேடான பாவங்களைப் பரிசுத்தவான்கள் செய்ய நேரிடலாம். அவர்கள் இந்நிலையில் சில காலம் தொடர்ந்திருந்து கடவுளின் வெறுப்பைச் சம்பாதித்து, பரிசுத்த ஆவியையும் துக்கப்படுத்தி, தங்களுடைய கிருபைகளுக்கும் ஊறு செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி மனச்சாட்சியையும் காயப்படுத்தி ஏனையோரையும் துன்பப்படுத்தி அவமானத்துக்குள்ளாக்கலாம். இதன் மூலம் அவர்கள் கடவுளின் தண்டனைகளை அனுபவிக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் பரிசுத்தவான்களாதலால் அவர்களுடைய மனந்திரும்புதல் புதுப்பிக்கப்பட்டு இறுதிவரை கிறிஸ்துவுக்குள் விசுவாசத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறார்கள். 2 சாமுவேல் 12:14; சங்கீதம் 32:3,4; 51:10,12; ஏசாயா 64:5,9; மத்தேயு 26:70,72,74; லூக்கா 22:32,61,62; எபேசியர் 4:30.
