13. பரிசுத்தமாக்குதல்

1. கிறிஸ்துவின் திட்ப உறுதியான அழைப்பினால் அழைக்கப்பட்டும், மறுபிறப்பைப் பெற்றும் அவரோடு இணைக்கப்பட்டவர்களில் புதிய இருதயமும், புதிய ஆவியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தோடு, கடவுளுடைய வார்த்தையினாலும், விசுவாசிகளில் வாசம் செய்யும் ஆவியினாலும் விசுவாசிகளில் பரிசுத்தமாக்குதலாகிய செயல் நடைபெறுகிறது. கிறிஸ்துவின் மரணத்தினாலும், உயிர்த்தெழுதலினாலும் ஏற்பட்ட பலாபலன்களினால் இவ்வாசீர்வாதங்கள் அனைத்தும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. விசுவாசிகளில் பாவத்திற்கு இருந்த ஆளுகை பூரணமாக முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் அது ஏற்படுத்தும் கேடான இச்சைகள் தொடர்ந்து பலவீனப்படுத்தப்பட்டு ஒறுத்தடக்கப்பட்டுள்ளன. அத்தோடு, அவர்களில் காணப்படும் இரட்சிப்பின் கிருபைகள் தொடர்ந்து உயிர்ப்பிக்கப்பட்டு வலுப்படுத்தப்படுகின்றன. எந்தப் பரிசுத்தமில்லாமல் ஒருவர் கர்த்தரைத் தரிசிக்க முடியாதோ அம்மெய்யான பரிசுத்தத்திற்கான பயிற்சி இவ்வாறாகவே விசுவாசிகளில் நடைபெறுகின்றது.

யோவான் 17:17; அப்போஸ் 20:32; ரோமர் 6:5,6,14; 2 கொரி 7:1; கலாத்தியர் 5:24; எபேசியர் 3:16-19; கொலோ 1:11; 1 தெசலோ 5:21-23; எபிரெயர் 12:14.

2. இவ்விதமாக விளக்கப்படும் பரிசுத்தமாக்குதல் மனிதனின் அனைத்துப் பாகங்களுக்கும் பரவினாலும் அவனுடைய பூவுலக வாழ்க்கையில் பூரணமடையாமலிருக்கின்றது. பாவத்தின் மாசுள்ள எஞ்சிய பகுதிகள் தொடர்ந்தும் மனிதனின் அனைத்துப் பாகங்களையும் பாதித்து அவனுள் தொடர்கின்ற ஒரு போராட்டத்தை ஏற்படுத்தி ஒப்புரவாக்குதலை ஏற்க மறுக்கிறது. அத்தோடு, மாம்சம் ஆவிக்கெதிராகவும், ஆவி மாம்சத்திற்கெதிராகவும் போராடுகின்றது.

ரோமர் 7:18,23; கலாத்தியர் 5:17; 1 தெசலோ 5:23; 1 பேதுரு 2:11.

3. ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையிலான போராட்டத்தில் பாவத்தின் மாசுள்ள எஞ்சிய பகுதிகள் சில சந்தர்ப்பங்களில் மேலோங்கப் பார்த்தாலும் கிறிஸ்துவின் பரிசுத்தமாக்கும் ஆவியளிக்கும் தொடர்ச்சியான வல்லமையினால் மனிதன் ஒரு புதுப்பிறவியாக வெற்றியடைய முடிகின்றது. இவ்வாறாக, பரிசுத்தமாக்குதலுக்குள்ளானோர் கிருபையில் வளர்ச்சியடைந்து தேவபயத்தோடு பரிசுத்தத்தின் பூரணத்துவத்தை நோக்கி முன்னேறுகிறார்கள். அவர்கள் மோட்ச நீதிச்சட்டங்களின்படி வாழ அனைத்து முயற்சிகளையும் எடுப்பதோடு தங்களுடைய தலைவரும் அரசருமான கிறிஸ்து தம் வார்த்தையில் தந்துள்ள அனைத்துக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவும் முயல்கிறார்கள். ரோமர் 6:14; 7:23; 2 கொரிந்தியர் 3:18; 7:1; எபேசியர் 4:15,16.