10. திட்ப உறுதியான (தவிர்க்க முடியாத) அழைப்பு

1. தம்மால் தீர்மானிக்கப்பட்டதும், தமக்கு ஏற்புடையதுமான காலத்தில் கடவுள் தாம் நித்திய ஜீவனுக்காக தெரிந்து கொண்டவர்களை சுபாவத்திலேயே அவர்களைப் பிடித்திருந்த மரணத்தில் இருந்து விடுவித்து இயேசு கிறிஸ்துவின் மூலமாக கிருபையையும் இரட்சிப்பையும் அடைய தனது வார்த்தையாலும் ஆவியாலும் திட்ப உறுதியாய் அழைத்தார். இரட்சிப்பை அடைந்தவர்கள் ஆன்மீக அறிவொளியைப் பெற்றிருப்பதால் கடவுளுடைய செயல்களை அறிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். கடவுள் அவர்களுடைய கல்லான இருதயத்தை அகற்றி அவர்களுக்கு மென்மையான இருதயத்தைத் தருகிறார். அவர்களுடைய சித்தத்தைப் புதுப்பித்து தமது எல்லாம் வல்ல வல்லமையினால் நன்மையானவற்றை அவர்கள் நாடிப் பின்பற்றச் செய்து அதேவேளை திட்ப உறுதியாய் அவர்களை இயேசு கிறிஸ்துவிடம் இட்டுச் செல்கிறார்.

உபாகமம் 30:6; சங்கீதம் 110:3; உன்னதப்பாட்டு 1:4; எசேக்கியேல் 36:26,27; அப்போஸ்தலர் 26:18, ரோமர் 8:30; 11:7; எபேசியர் 1:10,11,17,19; 2:1-6; 2 தெசலோனிக்கேயர் 2:13,14.

2. இந்தத் திட்ப உறுதியான அழைப்பு கடவுளுடைய இலவசமானதும், விசேஷமானதுமான கிருபையினால் மட்டுமே ஏற்படுவதாகும். ஒரு மனிதன் ஆவியினால் புதுப்பிக்கப்பட்டு, ஜீவனடையும் வரை அவன் பாவத்தில் மரித்தவனாகவே காணப்படுகிறான். ஆகவே, இரட்சிப்பைப் பொறுத்தவரையில் மனிதன் அதில் எந்தப் பங்கும் வகிக்காதவனாகக் காணப்படுகிறான். ஏனெனில், அது அவனில் முன் உணரப்பட்ட எந்த நன்மையின் அடிப்படையிலோ அல்லது அவனில் தங்கியுள்ள எந்த வல்லமையின் அடிப்படையிலோ ஏற்பட்டதல்ல. கிறிஸ்துவை மரணத்தில் இருந்து எழுப்பிய அதே வல்லமையே மனிதன் கடவுளுடைய அழைப்பிற்கு செவிகொடுக்கவும், அவ்வழைப்பு அளிக்கும் கிருபையை அணைத்துக்கொள்ளவும் செய்கிறது.

யோவான் 5:25; 1 கொரிந்தியர் 2:14; எபேசியர் 1:19,20; 2:5,8; 2 தீமோத்தேயு 1:9.

3. தம் விருப்பப்படி எப்போதும், எங்கேயும், எவ்வாறும் கிரியை செய்யும் கிறிஸ்து, குழந்தைப் பருவத்தில் இறக்கும் தெரிந்து கொள்ளப்பட்ட குழந்தைகளை ஆவியின் மூலம் மறுபிறப்பளித்து இரட்சிக்கிறார். வெளிப்படையாக நற்செய்தியின் பிரசங்கத்தினால் அழைக்கப்பட முடியாத தெரிந்து கொள்ளப்பட்ட அனைத்து மனிதர்களையும் பொறுத்தவரையிலும் இது உண்மையே.

யோவான் 3:3,5,6,8.

4. நற்செய்திப் பிரசங்கிகள் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளும்படிக் கொடுக்கும் அழைப்பைக் கேட்டும், ஆவியின் பொதுவான சில செயல்களின் கீழ் வரவும் வாய்ப்பும் பெற்றவர்கள் பிதாவினால் திட்ப உறுதியாக கிறிஸ்துவிடம் இட்டுச் செல்லப்படாததால் இரட்சிப்பைப் பெறும் சித்தங்கொள்ளவோ அல்லது அதை அடையவோ முடியாதவர்களாக இருக்கிறார்கள். அதேபோல், கிறிஸ்தவ மார்க்கத்தைச் சாராதவர்கள் இயற்கை அளிக்கும் போதனைகளையும், தங்களுடைய மதம் தரும் போதனைகளையும் எவ்வளவுதான் பின்பற்றி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தளராத முயற்சி எடுத்தாலும் அவர்களால் இரட்சிப்பை அடைய முடியாது. மத்தேயு 13:20,21; 22:14; யோவான் 4:22; 6:44,45,65; 17:3; அப்போஸ்தலர் 4:12; எபிரெயர் 6:4-6; 1 யோவான் 2:24,25.