8. மத்தியஸ்தராகிய கிறிஸ்து

1. கடவுள் தன்னுடைய நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தனது ஒரேபேறான குமாரனோடு தான் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி அவரைத் தனக்கும் மனிதனுக்கும் இடையிலான மத்தியஸ்தராகத் தெரிவு செய்து நியமித்தார். மேலும், அவரை தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், அரசராகவும், தமது சபையின் தலைவராகவும், இரட்சகராகவும் ஏற்படுத்தினார். அத்தோடு அனைத்தின் சுதந்திரவாளியாகவும், இவ்வுலகத்தின் நியாயாதிபதியாகவும் கடவுள் அவரை நியமித்தார். நித்தியத்திலிருந்தே கடவுள் தனது குமாரனுக்கு சந்ததியாகப் போகிறவர்களை அவரிடம் தந்திருந்தார். குமாரன் அவர்களை குறிப்பிட்ட காலத்தில் மீட்டு, அழைத்து, நீதிமான்களாக்கி, பரிசுத்தப்படுத்தி, மகிமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டார்.

சங்கீதம் 2:6; ஏசாயா 42:1; 53:10; லூக்கா 1:33; யோவான் 17:6; அப்போஸ்தலர் 3:22; 17:31; ரோமர் 8:30; எபேசியர் 1:22,23; எபிரெயர் 1:2; 5:5,6; 1 பேதுரு 1:19,20.

2. கடவுளுடைய குமாரனாகிய பரிசுத்த திரித்துவத்தின் இரண்டாம் நபரே இவ்வுலகத்தை படைத்து, தான் படைத்த அனைத்தையும் தாங்கி ஆளுகை செய்யும் தெய்வீக நபராவார். அவரே மெய்யான, நித்திய தேவனும், பிதாவின் மகிமையின் பிரகாசமானவரும், பிதாவின் அதே சாரத்தைக் கொண்டவரும், அவருக்கு சமமானவருமாவார். இவரே, குறிக்கப்பட்ட காலத்தில் மனித சுபாவத்தை அதன் எல்லா அடிப்படைக் குணாதிசயங்களோடும், அதற்குரிய எல்லா இயலாமைகளோடும், பாவம் நீங்கலாக தன் மீது சுமந்தார். யூதா கோத்திரத்துப் பெண்மணியான மரியாளின் மீது பரிசுத்த ஆவியானவர் வந்தபோது, உன்னதமானவருடைய வல்லமை அவள் மீது நிழலிட்டபோது கன்னிமரியாளின் கர்ப்பத்திலே அவர் பரிசுத்த ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டார். மேலும், வேதம் சொல்வதுபோல் அவர் ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும் ஆபிரகாம் மற்றும் தாவீதினுடைய சந்ததியுமானார். இவ்விதமாக முழுமையான, பூரணமான, முற்றிலும் வேறுபட்ட தெய்வீக மற்றும் மானிடத்தன்மைகளாகிய இவ்விரண்டும் ஒரே நபரில் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டது. இருந்தபோதும், இவ்விரண்டு தன்மைகளும் ஒரு தன்மை இன்னொரு தன்மையாக மாற்றமடையாமலும், ஒன்றோடொன்று கலந்துவிடாமலும், வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் எந்தவிதக் குழப்பமுமில்லாமல் அவரில் காணப்படுகின்றன. இப்படியாக, கடவுளுடைய குமாரன் இப்போது மெய்யான தேவனாகவும், மெய்யான மனிதனாகவும் இருக்கும் வேளையில் கடவுளுக்கும் மனிதனுக்கு மிடையில் மத்தியஸ்தராகிய ஒரே கிறிஸ்துவாகவும் இருக்கிறார்.

மத்தேயு 1:22,23; லூக்கா 1:27,31,35; யோவான் 1:14; ரோமர் 8:3; 9:5; கலாத்தியர் 4:4; 1 தீமோத்தேயு 2:5; எபிரெயர் 2:14,16,17; 4:15.

3. தெய்வீகம் மற்றும் மானிடத் தன்மைகளாகிய இவ்விரண்டும் கடவுளுடைய குமாரனின் ஆள்தத்துவத்தில் இவ்விதமாக இணைக்கப்பட்டு, அவர் பரிசுத்தப்படுத்தப்பட்டு, அளவில்லாமல் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார். அறிவு மற்றும் ஞானத்தின் பொக்கிஷங்கள் அனைத்தும் அவரிலேயே காணப்படுகின்றன. அவர் பரிசுத்தமுள்ளவராயும், கபடமற்றவராயும், பாவத்தினால் கறைபடாதவராயும், கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராயும் இவ்விதமாக பிதாவுக்குப் பிரியமான அனைத்தும் நிறைந்தவராகக் காணப்பட்டார். இவ்விதமாக அவர் ஒரு மத்தியஸ்தருடைய வேலையையும், பிணையாளியினுடைய வேலையையும் செய்வதற்குரிய சகல தகுதிகளையும் கொண்டவராக இருந்தார். அழைக்கப்படாமல் இவ்வேலையை அவர் தானே செய்ய முற்படவில்லை; மாறாக பிதாவினால் இவ்விதமாகச் செயல்படும்படிக் கட்டளையிடப்பட்டார். அத்தோடு, அவருடைய பிதா அவர் ஆளுவதற்கான முழு அதிகாரத்தையும் தந்து அனைவரையும் நியாயந்தீர்க்கவும் கட்டளையிட்டார்.

சங்கீதம் 45:7; மத்தேயு 28:18; யோவான் 1:14; 3:34; 5:22,27; அப்போஸ் 2:36; 10:38; கொலோ 1:19; 2:3; எபிரெயர் 5:5; 7:22,26.

4. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மத்தியஸ்த ஊழியத்தை மிகவும் விருப்பத்தோடு பொறுப்பேற்றார். அதை செய்து முடிப்பதற்காக தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டு அதைப் பூரணமாக நிறைவேற்றினார். நாம் பொறுப்பேற்று அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அவர் தன்மேல் சுமந்து அனுபவித்து நமக்காக சாபமானார். தனது ஆத்துமாவில் நாம் புரிந்துகொள்ள முடியாத அளவு கடுமையான வேதனையை அனுபவித்தார். தனது சரீரத்தில் ஏற்பட்ட மிகவும் வேதனையுள்ள துன்பங்களையும் சகித்துக் கொண்டார். சிலுவையில் அறையப்பட்டதன் மூலமாக அவர் மரித்தார். மரண நிலையில் இருந்தபோது அவரது சரீரம் அழுகிப் போகவில்லை. பாடுகளை அனுபவித்த அதே சரீரத்தோடு மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்தார். அதே சரீரத்துடன் அவர் பரலோகத்திற்கு எழுந்தருளி பிதாவின் வலது பக்கத்தில் அமர்ந்து தமது மக்களுக்காக வேண்டுதல் செய்து வருகிறார். உலகத்தின் முடிவில் மனிதர்களையும் தேவதூதர்களையும் நியாயந்தீர்க்க அவர் வருவார்.

சங்கீதம் 40:7,8; ஏசாயா 53:6; மத்தேயு 3:15; 26:37,38; 27:46; மாற்கு 16:19; லூக்கா 22:44; யோவான் 10:18; 20:25,27; அப்போஸ் 1:9-11; 10:42; 13:37; ரோமர் 8:34; 14:9,10; 1 கொரி 15:3,4; 2 கொரி 5:21; கலா 3:13; 4:4; எபி 9:24; 10:5-10; 1 பேதுரு 3:18; 2 பேதுரு 2:4.

5. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கடவுளுடைய நியாயப் பிரமாணத்திற்கு தாம் பரிபூரணமாக கீழ்ப்படிந்ததன் மூலமாகவும், நித்திய ஆவியினாலே ஒரே தரம் தன்னைத்தானே பலியாகக் கொடுத்ததன் மூலமும் தெய்வீக நீதியின் எல்லாக் கோரிக்கைகளையும் முழுவதுமாக திருப்தி செய்தார். அவர் ஒப்புரவாகுதலை இவ்விதமாக உண்டுபண்ணி, பிதாவினால் தமக்கு கொடுக்கப்பட்ட எல்லோருக்காகவும் பரலோக ராஜ்யத்தில் ஒரு நித்திய சுதந்திரத்தை கிரயம் செலுத்தி வாங்கினார்.

யோவான் 17:2; ரோமர் 3:25,26; எபிரெயர் 9:14,15; 10:14.

6. மீட்பின் கிரயம் கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பாக இவ்வுலகத்தில் செலுத்தப்படவில்லை. ஆனால், அவருடைய மீட்கும் செயலின் மதிப்பு, பயனுரம், பலாபலன்கள் அனைத்தும் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு உலகம் உருவான நாள் முதல் எல்லாக் காலங்களிலும் பயனுள்ளதாக ஆக்கப்பட்டிருந்தது. இது அவரை வெளிப்படுத்திய வாக்குத்தத்தங்கள், மாதிரிகள், பலிகள் மூலமாக நிறைவேற்றப்பட்டது. அவை அவரை சர்ப்பமாகிய பிசாசின் தலையை நசுக்கும் ஸ்திரீயின் வித்தாகவும், உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகவும் அடையாளம் காட்டின. அவர் கிறிஸ்துவாக நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராக இருக்கிறார்.

1 கொரி 4:10; எபிரெயர் 4:2; 13:8; 1 பேதுரு 1:10,11; வெளி 13:8.

7. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான மத்தியஸ்த வேலையில் கிறிஸ்து தமது இரண்டு சுபாவங்களின்படி செயல்படுகிறார். ஒன்று தெய்வீக சுபாவம் மற்றொன்று மானிட சுபாவம். இந்த இரண்டு சுபாவங்களுக்குமுரிய பொருத்தமான காரியங்களை அவர் அந்தந்த சுபாவத்தில் செய்கிறார். இருந்தபோதும் அவரது ஆள்தத்துவத்தின் ஒருமை காரணமாக, சில வேளைகளில் அவருடைய ஒரு சுபாவத்திற்குரிய செயலை, அவரில் மற்ற சுபாவம் தலைதூக்கி நிற்கும்போது அந்த சுபாவத்திற்குரியதாக வேதாகமம் விளக்குகிறது.

யோவான் 3:13; அப்போஸ்தலர் 20:28.

8. கிறிஸ்து தான் யாருக்காகவெல்லாம் நித்திய மீட்பை பெற்றுக்கொண்டாரோ அவர்கள் அனைவருக்கும் அதை நிச்சயமாகவும், திட்ப உறுதியாகவும் அளித்துப் பலிதமாக்குகிறார். அவர்களுடைய சார்பில் அவர் பரிந்து பேசுகிறார். தமது ஆவியின் மூலமாக அவர்களைத் தன்னோடு இணைத்துக்கொள்கிறார். தனது வார்த்தையிலும், வார்த்தையின் மூலமும் இரட்சிப்பின் இரகசியத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். தனது வார்த்தையினாலும் ஆவியினாலும் அவர்களுடைய இருதயத்தை ஆண்டு அவர்கள் விசுவாசிக்கும்படியும், கீழ்ப்படியும்படியும் தூண்டுகிறார். அவர் தனது அதிசயமானதும், ஆராய முடியாததுமான பராமரிப்பின் ஏற்பாடுகளைப் பயன்படுத்தி தமது வல்லமையினாலும், ஞானத்தினாலும் அவர்களுடைய எல்லா சத்துருக்களையும் மேற்கொள்கிறார். இந்தக் காரியங்கள் அனைத்துமே அவருடைய இலவசமான ஆளுமையுள்ள கிருபையினால் செய்யப்படுகின்றது. அதுவும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் காணப்படக்கூடிய எந்த நன்மையையும் முன்னறிந்ததன் விளைவாக அல்லாமல் நிபந்தனையற்ற முறையில் இவை செய்யப்படுகின்றன.

சங்கீதம் 110:1; யோவான் 3:8; 6:37; 10:15,16; 17:6,9; ரோமர் 5:10, 8:9,14; 1 கொரிந்தியர் 15:25,26; எபேசியர் 1:8,9; 1 யோவான் 5:20.

9. கிறிஸ்து மட்டுமே கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருக்கத் தகுதியுள்ளவர். அவரே, கடவுளின் திருச்சபையின் தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், அரசராகவும் இருக்கிறார். அவரது ஆசாரியப் பணியை முழுமையாகவோ அல்லது அதன் ஒரு சிறு பகுதியையோ அவரிடமிருந்து வேறு எவருக்கும் மாற்ற முடியாது.

1 தீமோத்தேயு 2:5.

10. கிறிஸ்துவின் இந்த மூன்று வகையான ஊழியங்களும் நமக்குத் தேவை. நமது மடமையின் நிமித்தமாக அவருடைய தீர்க்கதரிசனப்பணி நமக்குத் தேவை. நாம் கடவுளைவிட்டு சோரம் போனவர்கள் என்பதாலும், நமது சிறந்த சேவைகள் அனைத்தும் குறைபாடுள்ளவை என்பதாலும் நம்மைக் கடவுளோடு ஒப்புரவாக்கவும், நம்மை தேவ சமூகத்திலே அங்கீகரிக்கப்பண்ணவும் அவருடைய ஆசாரியப்பணி நமக்குத் தேவை. நாம் கடவுளை விட்டு விலகுகிறபடியினாலும், நம்மால் ஒருபோதும் அவரிடம் சுயமாகத் திரும்ப முடியாது என்பதாலும், நமது ஆவிக்குரிய எதிரிகளிடமிருந்து மீட்கப்பட்டு நாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் நமக்கு உணர்த்தவும், நம்மைக் கீழ்ப்படுத்தவும், தம்மிடம் இழுத்துக்கொள்ளவும், பராமரிக்கவும், பாதுகாக்கவும், இறுதியில் தமது பரலோக ராஜ்யத்தில் நம்மைப் பிரகாசிக்கச் செய்யவும் அவரது அரச ஊழியம் நமக்குத் தேவையாயிருக்கிறது. சங்கீதம் 110:3; லூக்கா 1:74,75; யோவான் 1:18; 16:8; கலாத்தியர் 5:17; கொலோசெயர் 1:21.