1. அனைத்தையும் படைத்த நல்லவராகிய கடவுள், தமது அளவற்ற வல்லமையாலும், ஞானத்தாலும் மிகுந்த விவேகமுள்ள தமது பரிசுத்த பராமரிப்பினாலும் பெரிதானதிலிருந்து சிறியதான எல்லாப் படைப்புயிர்களையும், பொருட்களையும், தன்னுடைய படைப்பின் நோக்கத்தின் நிறைவேற்றுதலுக்காகத் தாங்கி, வழிகாட்டி ஆண்டு வருகிறார். தவறாநிலையுடைய முன்னறிவாலும் தமது சுயசித்தத்தின் தன்னுரிமையுள்ள மாறாத்திட்டத்தின் மூலமும், மகிமையுள்ள தமது ஞானம், வல்லமை, நீதி, எல்லையற்ற நற்குணம், இரக்கம் ஆகியவற்றின் துதிக்காகவும் கடவுள் அனைத்தையும் ஆண்டு வருகிறார்.
யோபு 38:11; சங்கீதம் 135:6; ஏசாயா 46:10,11; மத்தேயு 10:29-31; எபேசியர் 1:12; எபிரெயர் 1:3.
2. அனைத்திற்கும் காரணகர்த்தாவாகிய கடவுளுடைய முன்னறிவின் மூலமும், ஆணையின் மூலமும் எல்லாக் காரியங்களும் மாறாத்தன்மையுடனும், தவறாநிலையிலும் நேரிட்டபோதும் எதுவுமே எவருக்கும் தற்செயலாகவோ அல்லது அவரது பராமரிப்புக்கு (தெய்வ செயல்) அப்பாற்பட்டோ நிகழ்வதில்லை. அதேவேளை, கடவுள் இடைக்காரணங்களின் தன்மையின்படி தமது பராமரிப்பின் மூலம் தேவைக்கேற்பவும், சுதந்திரமாகவும், எதிர்பாராவேளைகளிலும் சம்பவங்கள் நிகழ உத்தரவிடுகிறார் (இயற்கையின் விதிகள் போன்ற துணைக்காரணங்களின் நடவடிக்கைகள் அல்லது மனிதனின் சுதந்திரமான நடவடிக்கைகள் அல்லது காரண காரியம் என்ற விதி போன்றவற்றின் மூலம் சம்பவங்கள் நிகழ அவற்றை ஒழுங்குபடுத்தி அனுமதியளிக்கிறார்). இத்தகைய வழிமுறைகளைப் பயன்படுத்தி அவற்றின் மூலமாக கடவுள் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்.
ஆதியாகமம் 8:22; நீதிமொழிகள் 16:33; அப்போஸ்தலர் 2:23.
3. சாதாரணமாக தனது பராமரிப்பில் கடவுள் பல சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார். அவற்றின் துணையில்லாமல் அவரால் தன்னுரிமையோடு இயங்க முடியும். அவரால் சுயவிருப்பப்படி அச்சாதனங்களுக்கு வழமைக்குமாறாக பயன்திறத்தை அளிக்கவும் அல்லது அவற்றிற்கு எதிர்மறையாக செயல்படவும் முடியும்.
ஏசாயா 55:10,11; தானியேல் 3:27; ஓசியா 1:7; அப்போஸ்தலர் 27:31,44; ரோமர் 4:19-21.
4. கடவுளின் வல்லமையும், கண்டு அறியமுடியாத ஞானமும், எல்லையற்ற நன்மையும் எல்லையற்றதும், அனைத்தையும் உள்ளடக்கியதாயும் இருப்பதால் அவருடைய இறை ஆண்மையுடைய நோக்கங்களின்படி முதல் மனிதன் பாவத்தில் விழுந்தமையும், ஏனைய தேவதூதர்களும், மனிதர்களும் பாவத்தில் வீழ்ந்த செயல்களும் நிகழ்ந்தன. கடவுள் வெறுமனே இவற்றின் நிகழ்வுகளுக்கு அனுமதிகொடாமல், பலவிதங்களில் அவர் பாவத்தை வல்லமையோடும் ஞானத்தோடும் கட்டுப்படுத்தியும், கட்டளையிட்டும், அதிகாரம் செலுத்தியும் தனது பரிசுத்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார். இருப்பினும் இந்நிகழ்வுகளின் பாவம் தேவதூதர்களிடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் தோன்றினவையே அல்லாமல் மிகப்பரிசுத்தமும், நீதியும் கொண்ட கடவுளிடம் இருந்து தோன்றவில்லை. அவர் பாவத்தின் காரணகர்த்தரோ அல்லது அதை அனுமதிப்பவரோ அல்ல.
ஆதியாகமம் 50:20; 2 சாமுவேல் 24:1; 2 இராஜாக்கள் 19:28; 1 நாளாகமம் 21:1; சங்கீதம் 50:21; 76:10; ஏசாயா 10:6,7,12; ரோமர் 11:32-34; 1 யோவான் 2:16.
5. மகா ஞானமும், நீதியும், கருணையுமுள்ள கடவுள் தன்னுடைய மக்களை அடிக்கடி பலவிதமான சோதனைகளுக்குள்ளாகப் போகும்படியும், அவர்கள் தங்களுடைய சொந்த இருதயத்தின் பாவத்தை அறிந்துகொள்ளவும் அனுமதிக்கிறார். அவர்கள் செய்த பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பதற்காகவும், அவர்களுடைய இருதயங்களில் காணப்படும் பாவத்தின் வல்லமையையும், கபடத்தையும் வெளிப்படுத்தி தாழ்மையைப் படிப்பிப்பதற்காகவும் இதை அவர் செய்கிறார். எல்லா சமயங்களிலும் எப்போதும் அவர்கள் கடவுளில் தங்கியிருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி, எதிர்காலத்தில் பாவத்தில் இருந்து அவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டே அவர் இவற்றைச் செய்கிறார். இவ்விதமாகவும், வேறு பலவிதங்களிலும் அவருடைய நீதியுள்ள பரிசுத்த நோக்கங்கள் நிறைவுபெறுகின்றன. அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் நிகழும் அனைத்தும் அவருடைய தீர்மானத்தின்படி அவருடைய மகிமைக்காகவும், அவர்களுடைய நன்மைக்காகவுமே நிகழ்கின்றன.
2 நாளாகமம் 32:25,26,31; ரோமர் 8:28; 2 கொரிந்தியர் 12:7-9.
6. நீதியுள்ள நீதிபதியாகிய கடவுள் கேடான, பரிசுத்தமற்ற மனிதர்களை நியாயந்தீர்க்கிறார். அவர்களுடைய பாவத்தினால் அவர்களுடைய இருதயத்தை இருளடையச் செய்து கடினப்படுத்துகிறார். அவர்களுடைய மனத்திற்கு அறிவொளி தந்து, இருதயத்தில் கிரியை செய்திருக்கக்கூடிய கிருபையை அவர்கள் அடையமுடியாதபடி தடுத்துக்கொள்வதோடு, வேறு சிலருக்கு அவர் கொடுத்திருந்த வரங்களையும் திரும்ப எடுத்துக்கொள்கிறார். அவர்கள் தங்களுடைய கேடான இருதயத்தின் பாவத்தினால் பாவ சந்தர்ப்பங்களை நாடிப் பயன்படுத்திக்கொள்ளும்படியான சந்தர்ப்பங்களிலும் கடவுள் அவர்களை விடுகிறார். வேறுவிதத்தில் கூறப்போனால், அவர்களில் காணப்படும் உள்ளார்ந்த பாவத்தின் சீரழிவுகளுக்கும், உலகத்தின் சோதனைகளுக்கும், சாத்தானின் வல்லமைக்கும் அவர்களைக் கைவிட்டுவிடுகிறார். இதன் காரணமாக ஏனையோருடைய இருதயங்களை மென்மையாக்கக் கடவுள் பயன்படுத்தும் அதே சாதனங்களை அவர்கள் தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
யாத்திராகமம் 8:15,32; உபாகமம் 2:30; 29:4; 2 இராஜாக்கள் 8:12,13; சங்கீதம் 81:11,12; ஏசாயா 6:9,10; மத்தேயு 13:12; ரோமர் 1:24-26,28; 11:7,8; 2 தெசலோனிக்கேயர் 2:10-12; 1 பேதுரு 2:7,8.
7. கடவுளின் பொதுவான பராமரிப்பு எல்லாப் படைப்புயிர்களையும் அடைகின்றது. ஆனால், மிகச் சிறப்பான விதத்தில் அது அவருடைய திருச்சபையின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. திருச்சபையின் நலனுக்காக அனைத்தும் தேவ பராமரிப்பினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஏசாயா 43:3-5; ஆமோஸ் 9:8,9; 1 தீமோத்தேயு 4:10.
