1. ஆதியில் கடவுளாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோர் தம்முடைய மகிமையுள்ள நித்திய வல்லமை, ஞானம், நற்குணம் ஆகியவற்றின் வெளிப்பாட்டிற்காக ஆறு நாட்களில் உலகத்தையும், காணக்கூடியதும், காணமுடியாததுமான அதிலுள்ள அனைத்தையும் படைக்கத் திருவுளங்கொண்டார். அவையனைத்தும் மிக நல்லவையாக இருந்தன.
ஆதியாகமம் 1:31; யோபு 26:13; யோவான் 1:2,3; ரோமர் 1:20; கொலோசெயர் 1:16; எபிரெயர் 1:2.
2. கடவுள் மற்ற எல்லா படைப்புயிர்களையும் படைத்த பின்பு, அறிவுள்ளதும் அழியாததுமான ஆன்மாக்களோடு, ஆணும் பெண்ணுமாக மனித இனத்தை அவருக்காக வாழவேண்டிய வாழ்க்கையைக் கொடுத்துப் படைத்தார். அவர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டு, அறிவையும், நேர்மையையும், மெய்யான பரிசுத்தத்தையும் கொண்டு, தங்களுடைய இருதயத்திலே எழுதப்பட்டிருக்கும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும் வல்லமையுடையவர்களாய் இருந்தார்கள். அதேவேளை, மாறும் தன்மையுள்ள தங்களுடைய சுயசித்தத்தின் முழுச்சுதந்திரத்தோடு (கட்டுப்பாட்டை மீறும் சுதந்திரம்) பாவம் செய்யக்கூடிய சாத்தியத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.
ஆதியாகமம் 1:27; பிரசங்கி 7:29; ஆதியாகமம் 1:26; ரோமர் 2:14,15; ஆதியாகமம் 3:6.
3. இருதயத்திலே எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தைக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், நன்மை தீமை அறியக்கூடிய மரத்திலிருந்து எதையும் உணவாகக் கொள்ளக் கூடாது எனவும் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது. இக்கட்டளையைக் கடைப்பிடித்தவரை அவர்கள் கடவுளோடு ஆனந்தமாக ஐக்கியத்தை அனுபவித்ததுடன் எல்லாப் படைப்புயிர்கள் மீதும் தன்னாதிக்கத்தைக் கொண்டிருந்தார்கள். ஆதியாகமம் 2:17; 1:26,28.
