3. கடவுளின் ஆணை

1. கடவுள் தனது பேரறிவும் பரிசுத்தமும் கொண்ட சுயசித்தத்தின் ஆலோசனையினால் இனி நிகழப்போகிற அனைத்துக் காரியங்களையும் சுதந்திரமாகவும், மாறாத் தன்மையுடனும் நித்தியத்திலிருந்து தாமே தமக்குள்ளாகத் தீர்மானித்திருக்கிறார் (அதாவது, எவற்றாலும் உந்தப்படாது அவர் தன் திட்டங்களை செயற்படுத்துவது மட்டுமன்றி அணுவளவும் மாற்றம் இன்றி அவரது நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன). அதேவேளை, அவர் பாவத்தின் காரணகர்த்தரோ அல்லது அதைச் செய்வதில் எவரோடும் எந்தக் கூட்டும் உள்ளவரோ (அதற்குப் பொறுப்பானவரோ) அல்ல. அவரது ஆணையின் காரணமாக படைப்புயிர்களின் சித்தத்திற்கு ஊறேற்படாமலும், துணைப்பொருட்கள் அல்லது இடைக்காரணங்களின் சுதந்திரமான செயற்பாடுகள் நீக்கப்படாமலும் (துணைக்காரணங்கள் இடையூராக வராமல்) அனைத்தும் அவரால் நிலைநாட்டப்படுகின்றன. இவை எல்லாவற்றிலும், அனைத்தின் மீதும் ஆணை செலுத்தி அமைவுறச் செய்யும் கடவுளுடைய ஞானமும், தனது ஆணையை நிறைவேற்றும் அவரது வல்லமையும், நேர்மையும் வெளிப்படுகின்றது (கடவுளின் நேர்மை என்பது, அவருடைய பரிசுத்த குணாதிசயங்களுக்கும் வார்த்தைக்கும் ஏற்றபடி நடக்கும் அவரது நிலைதடுமாறாத் தன்மையைக் குறிக்கும்).

எண்ணாகமம் 23:19; ஏசாயா 46:10; யோவான் 19:11; அப்போஸ்தலர் 4:27,28; ரோமர் 9:15,18; எபேசியர் 1:3-5,11; எபிரெயர் 6:17; யாக்கோபு 1:13; 1 யோவான் 1:5.

2. அனைத்து சந்தர்ப்பங்களிலும் நிகழக்கூடிய அனைத்தையும் கடவுள் அறிந்திருந்தபோதும், எதிர்காலத்தில் அவற்றை அவர் முன்னறிந்திருந்ததனாலோ அல்லது சில சூழ்நிலைகளின் கீழ் அவை எவ்வகையிலாவது நடைபெறும் என்பதாலோ அவர் எதையும் ஆணையிடவில்லை.

அப்போஸ்தலர் 15:18; ரோமர் 9:11,13,16,18.

3. கடவுளின் ஆணையின் மூலமாக அவரது மகிமை வெளிப்படும்படியாகவும், அவரது மேன்மை பொருந்திய கிருபை வெளிப்பட்டு துதிபெறவும், சில மனிதர்களும், தேவதூதர்களும் இயேசு கிறிஸ்துவுக்குள் நித்திய ஜீவனை அடையும்படி முன்குறிக்கப்பட்டுள்ளார்கள். ஏனையோர் அவரது மேன்மையான நீதி வெளிப்பட்டு துதிபெறும்படியாக தங்கள் பாவத்தில் தொடர்ந்திருந்து நியாயமான கண்டனத்தைப் பெறும்படியாக விடப்பட்டுள்ளார்கள்.

மத்தேயு 25:34; ரோமர் 9:22,23; எபேசியர் 1:5,6; 1 தீமோத்தேயு 5:21; யூதா 4.

4. இவ்வாறாக, முன்குறிக்கப்பட்ட தேவதூதர்களும் மனிதர்களும் தனித்துவத்தோடும் மாறாநிலையிலும் நியமிக்கப்பட்டிருப்பதோடு அவர்களின் தொகை நிச்சயிக்கப்பட்டதாகவும் வரையறுக்கப்பட்டதாகவும் இருப்பதால் அவை எவ்விதத்திலும் அதிகரிக்கப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது.

2 தீமோத்தேயு 2:19; யோவான் 13:18.

5. மனிதகுலத்திலிருந்து முன்குறிக்கப்பட்டவர்கள், கடவுளின் நிலைபேறுடைய மாறாத செயல், நோக்கம், இரகசியத் திட்டம், திருவுளப்பிரியம் ஆகியவற்றோடு பொருந்தி உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். படைப்புயிர்களில் காணப்படும் எதுவுமே ஒரு காரணமாகவோ, கட்டுப்பாடாகவோ அமைந்து, அவற்றால் உந்தப்படாது, எக்காலத்திலுமுள்ள மகிமைக்காக, கடவுள் தனது சுதந்திரமான கிருபையினாலும் அன்பினாலும் அவர்களை இயேசு கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொண்டார்.

ரோமர் 8:30; 9:13,16; எபேசியர் 1:4,9,11; 2:5,12; 1 தெசலோ 5:9; 2 தீமோத்தேயு 1:9.

6. கடவுள், தெரிந்தெடுக்கப்பட்டவர்களை தனது மகிமைக்காக நியமித்ததோடு மட்டுமல்லாது, நித்தியமும், பூரணசுதந்திரமும் உடைய தனது சித்தத்தினால் அதற்கான எல்லா வழிவகைகளையும் முன்குறித்துள்ளார். அதேவேளை, தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் ஆதாமில் வீழ்ச்சியுற்றதனால், கிறிஸ்துவினால் மீட்கப்பட்டு, பரிசுத்த ஆவியினுடைய நேர்பயனுடைய அழைப்பினால் விசுவாசத்திற்காக கிறிஸ்துவுக்குள் அழைக்கப்பட்டும், நீதிமான்களாக்கப்பட்டும், தத்தெடுக்கப்பட்டும், பரிசுத்தமாக்கப்பட்டும், விசுவாசத்தினால் இரட்சிப்பிற்காக அவரது வல்லமையினால் காக்கப்படுகிறார்கள். தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே கிறிஸ்துவினால் மீட்கப்பட்டும், நேர்பயனுடைய அழைப்பினால் அழைக்கப்பட்டும், நீதிமான்களாக்கப்பட்டும், தத்தெடுக்கப்பட்டும், பரிசுத்தமாக்கப்பட்டும் இரட்சிக்கப்படுகிறார்கள்.

யோவான் 6:64; 10:26; 17:9; ரோமர் 8:30; 1 தெசலோனிக்கேயர் 5:9,10; 2 தெசலோனிக்கேயர் 2:13; 1 பேதுரு 1:2,5.

7. இந்த மறைபொருளுடைய முன்குறித்தல் கோட்பாடானது, கடவுளுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவரது சித்தத்தில் அக்கறை கொண்டு அவற்றிற்கு கீழ்ப்படியும் மனிதர்கள், நிச்சயமான நேர்பயனுள்ள அழைப்பின்மூலம் தங்களுடைய நித்திய தெரிந்துகொள்ளுதலில் உறுதிபெறும்படியாக விசேஷமான விவேகத்தோடும் கவனத்தோடும் கையாளப்பட வேண்டும். ஆகவே, இந்தக் கோட்பாடு உண்மையோடு நற்செய்திக்கு அடிபணியும் அனைவரும் கடவுளைப் போற்றவும் மதிக்கவும், வியந்து பாராட்டவும் காரணமாகவும், தாழ்மையுணர்வு, ஊக்கம், அளவற்ற ஆறுதல் என்பவற்றை அளிப்பதற்குக் காரணமாகவும் இருக்க வேண்டும்.

லூக்கா 10:20; ரோமர் 11:5,6,20,33; எபேசியர் 1:6; 1 தெசலோ 1:4,5; 2 பேதுரு 1:10.