1. கடவுள் ஒருவராகவும் ஜீவனுள்ள மெய்யான தேவனாகவும் இருக்கிறார். அவர் தன்னியல்பானவராயும் (அவர் தன்னுடைய இயல்புக்குத் தேவையான எல்லா வல்லமையையும் தன்னிடத்தில் இருந்தே பெற்றுக்கொள்வதோடு, புறத்திலிருந்து எதுவுமே தேவையில்லாதவராகவும் இருக்கிறார்), தன்னியல்பிலும் முழுநிறைவிலும் எல்லையற்றவராகவும் இருக்கிறார். அவரால் மட்டுமேயன்றி வேறொருவராலும் அவரது உள்ளியல்பைப் புரிந்து, அறிந்துகொள்ள முடியாது. அவர் தூய ஆவியானவரும், கண்ணிற்கு புலப்படாத உருவமற்றவரும், மாறுதலுக்குரிய மனித உணர்ச்சிகளும் (கோபம், வெறுப்பு, பேராசை, பாலியல், அன்பு போன்ற மனிதனை ஆளும் உணர்ச்சிகள்) அற்றவர்; அவர் ஒருவரே என்றும் உள்ளவராக (மற்றெல்லோரும் அவரிடத்தில் இருந்தே ஜீவனைப் பெற்றுக்கொள்கிறார்கள்) மனிதன் அடையமுடியாத ஒளியின் மத்தியில் வாழ்கிறார்; அவர் மாறாதவர்; அளக்க முடியாதவர்; என்றுமுள்ளவர்; புரிந்துகொள்ள முடியாதவர் (மனிதனுடைய சிந்தனைகளுக்கும், அறிவிற்கும் அப்பாற்பட்டவர்); எல்லாம் வல்லவர்; எல்லாவிதத்திலும் எல்லையற்றவர்; மிகப்பரிசுத்தர்; மிகுந்த ஞானமுள்ளவர்; பெருஞ்சுதந்திரம் உள்ளவர்; முழுமையானவர்; எல்லாக் காரியங்களையும் தனது மாறாத பெருநீதியுள்ள சித்தத்தின் திட்டப்படி, தன் சுயமகிமைக்காகவே செய்பவர்; அவர் பேரன்பும், பேரருளும், பெருங்கருணையும், சகிப்புத்தன்மையும், நற்குணமும், உண்மையும் உள்ளவர்; அநீதியையும், ஒழுங்குமீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; ஊக்கத்தோடு தம்மை நாடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவர்; அதேநேரத்தில், அவர் குற்றப்பழிகளையும், குற்றவாளிகளையும் எவ்விதத்திலும் விட்டுவைக்காது, எல்லாப் பாவங்களையும் வெறுத்தொதுக்கி, பெருநீதியோடும் பயங்கரத்தோடும் நியாயந்தீர்ப்பவர்.
ஆதியாகமம் 17:1; யாத்திராகமம் 3:14; 34:6,7; உபாகமம் 4:15,16; 6:4; 1 இராஜாக்கள் 8:27; நெகேமியா 9:32,33; சங்கீதம் 5:5,6; 90:2; 115:3; நீதிமொழிகள் 16:4; ஏசாயா 6:3; 46:10; 48:12; எரேமியா 10:10; 23:23,24; நாகூம் 1:2,3; மல்கியா 3:6; யோவான் 4:24; ரோமர் 11:36; 1 கொரிந்தியர் 8:4,6; 1 தீமோத்தேயு 1:17; எபிரெயர் 11:6.
2. கடவுள் ஜீவன், மகிமை, நற்குணம், பேரின்பம் அனைத்தையும் தன்னில் கொண்டும், தன்னிலிருந்தே பெற்றும், தனக்குள்ளும், தனக்காகவும், தன்னிறைவுடையவராய் ஒரு தனித்தன்மையைக் கொண்டு, தான் படைத்த படைப்புயிர்களிடமிருந்து எவ்வித மகிமையையும் பெறாது, அவற்றின் தேவையற்றுமிருக்கிறார். இதற்கு மாறாக, தன் சுயமகிமையைக் கடவுளே அவர்களுக்குள்ளும், அவர்கள் மூலமும், அவர்களிடத்தும், அவர்கள் மேலும் வெளிப்படுத்திக் காட்டுகிறார். உயிருள்ளவை அனைத்தும், தங்கள் நிலைபேற்றிற்கு அவரையே காரணகர்த்தராகக் கொண்டு, அவர் மூலமும், அவராலும், அவருக்காகவுமே வாழ்கின்றன. எல்லாப் படைப்புயிர்கள் மூலமாகவும், அவற்றிற்காகவும், அவற்றிற்குள்ளும் தான் விரும்பியதைச் செய்யும் முழுமையான இறை ஆண்மையுள்ள அதிகாரத்தை அவர் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்பாக அனைத்தும் திறந்தபடி வெளிப்படையாக இருக்கின்றன. அவரது அறிவு, படைப்புயிர்களில் தங்கியிராது எல்லையற்றதாகவும், தவறாநிலையுடையதாகவுமுள்ளது (அதாவது, அவர் அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகளை அறிந்துகொள்வதற்கு, தேவதூதர்களிலோ, மனிதரிலோ தங்கியிருப்பதில்லை). ஆகவே, எந்த நிகழ்ச்சியுமே அவரைப் பொறுத்தவரையில் தற்செயலானதோ, நிச்சயமற்றதோ அல்ல. அவர், தன் திட்டங்கள், செயல்கள், கட்டளைகளனைத்திலும் மகா பரிசுத்தர். தேவதூதர்களும், மனிதர்களும், தம்மைப் படைத்தவருக்கு அளிக்கவேண்டிய சகலவிதமான வழிபாட்டையும், ஊழியத்தையும், கீழ்ப்படிவையும், அவர் கேட்கச் சித்தமாயிருக்கின்ற எதையும் அவருக்குத் தரவேண்டியவர்களாயிருக்கிறார்கள்.
யோபு 22:2,3; சங்கீதம் 119:68; 145:17; 148:13; எசேக்கியேல் 11:5; தானியேல் 4:25,34,35; யோவான் 5:26; அப்போஸ்தலர் 15:18; ரோமர் 11:34-36; எபிரெயர் 4:13; வெளிப்படுத்தல் 5:12-14.
3. அவரது எல்லையற்ற தெய்வீக உள்ளியல்பில் பிதா, வார்த்தை அல்லது குமாரன், ஆவியானவர் மூவரும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறார்கள். உள்ளியல்பு (சாரம்), வல்லமை, நித்தியம் ஆகியவற்றில் அவர்கள் அனைவரும் ஒருவரே. அதேவேளை ஒவ்வொருவரும் பிரிக்கப்படாத முழுமையான தெய்வீகத்தையும் உடையவர்களாய் இருக்கிறார்கள். பிதாவானவர் வேறெந்த உயிரினத்தில் இருந்தும் பெறப்படவில்லை; அவர் எந்தவொரு உயிரினத்தாலும் தோற்றுவிக்கப்படாததோடு, எந்தவொரு உயிரினத்திலிருந்தும் தோற்றுவிக்கப்படவுமில்லை. குமாரன் தந்தையிடமிருந்து நித்தியமாய் தோன்றினவராய் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர், தந்தையிடமிருந்தும், குமாரனிடமிருந்தும் நித்தியமாய் வெளிப்படுகிறவராய் இருக்கிறார். தொடக்கமற்ற மூவருமே எல்லையற்ற ஒரே கடவுளாய் இருப்பதால் அவர்களுடைய இயற்கைத் தன்மையையோ, உள்ளியல்பையோ பிரித்துப் பார்க்கக்கூடாது. ஆனாலும் அவர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவைக்குறித்தும் (அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் குடும்ப உறவு), அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் பல்வகையான செயல்கள் குறித்தும் வேதத்தில் வேறுபடுத்திக்காட்டப்பட்டுள்ளது. கடவுளோடு நமக்குள்ள எல்லா ஐக்கியத்திற்கும், அவரில் நாம் தங்கியிருப்பதால் நாம் பெறும் ஆறுதலுக்கும் திரித்துவத்தைக் குறித்த இந்தக் கோட்பாடே அடிப்படையாக அமைகின்றது.
யாத்திராகமம் 3:14; மத்தேயு 28:19; யோவான் 1:14,18; 14:11; 15:26; 1 கொரிந்தியர் 8:6; 2 கொரிந்தியர் 13:14; கலாத்தியர் 4:6; 1 யோவான் 5:7.
