1. இரட்சிப்புக்கு இன்றியமையாத சகலவிதமான அறிவையும், விசுவாசத்தையும், கீழ்ப்படிவையும் அளிக்கக்கூடிய, தவறிழைக்காத நியதியாகவும் (கட்டளைவிதி), உறுதியானதாகவும், போதுமானதாகவும், பரிசுத்த வேதாகமம் மட்டுமே அமைந்துள்ளது. இயற்கையும், படைப்பின் கிரியைகளும் (பொது வெளிப்பாடு), மனிதன் எந்தவித சாக்குப்போக்கும் சொல்ல இடமளியாதபடி, தேவனுடைய ஞானம், வல்லமை, நற்குணம் ஆகியவற்றைத் தெளிவாக வெளிப்படுத்தினாலும், இரட்சிப்புக்கு இன்றியமையாத கடவுளைப்பற்றிய அறிவையும், அவரது சித்தத்தையும் வெளிப்படுத்த வல்லமையற்றவையாக உள்ளன. ஆகவே, தேவன் தமது திருச்சபைக்கு வெவ்வேறு காலங்களில் பல்வேறுவிதத்தில் தம்மையும், தமது சித்தத்தையும் வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாது, சத்தியத்தின் பாதுகாப்பிற்காகவும், பரப்புதலுக்காகவும், தீய மனிதர்கள், பிசாசு, உலகம் ஆகியவற்றின் தொல்லைகளின் மூலம் திருச்சபை பாதிப்புறாதபடி நிலைநிறுத்தப்பட்டு ஆறுதல் பெறவும், தம் சித்தத்தைக்குறித்தும், தம்மைக் குறித்துமான வெளிப்பாட்டை எழுத்துவடிவில் அருளத் திருவுளங் கொண்டார்.
2 தீமோத்தேயு 3:15-17; ஏசாயா 8:20; லூக்கா 16:29,31; எபேசியர் 2:20; ரோமர் 1:19-21; 2:14-15; சங்கீதம் 19:1-3; எபிரெயர் 1:1; நீதிமொழிகள் 22:19-21; ரோமர் 15:4; 2 பேதுரு 1:19-20.
2. பரிசுத்த வேதாகமம் அல்லது எழுத்து வடிவில் அமைந்த தேவனுடைய வார்த்தை, கீழ்வரும் பழைய, புதிய ஏற்பாடுகளை மட்டுமே கொண்டது.
பழைய ஏற்பாடு:
ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம், யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், 1 சாமுவேல், 2 சாமுவேல், 1 இராஜாக்கள், 2 இராஜாக்கள், 1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, எஸ்தர், யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு, ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல், ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.
புதிய ஏற்பாடு:
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலருடைய நடபடிகள், ரோமர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1 தெசலோனிக்கேயர், 2 தெசலோனிக்கேயர், 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன், எபிரெயர், யாக்கோபு, 1 பேதுரு, 2 பேதுரு, 1 யோவான், 2 யோவான், 3 யோவான், யூதா, யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம்.
மேல்வரும் புத்தகங்கள் அனைத்தும் தேவனுடைய ஏவுதலினால், நமது விசுவாசத்திற்கும் வாழ்க்கைக்கும் நியதிப்பிரமாணமாக இருக்கும்படியாக அளிக்கப்பட்டுள்ளன.
2 தீமோத்தேயு 3:16.
3. தள்ளுபடி புத்தகங்கள் (Apocrypha) என அழைக்கப்படுபவை தெய்வீக ஏவுதலால் அருளப்படாதவையால் பரிசுத்த வேதாகமத்தில் அவற்றிற்கு இடமில்லை. ஆகையால், அவை ஏனைய சாதாரண புத்தகங்களைப்போல் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர திருச்சபையில் அவற்றிற்கு எந்தவிதமான அதிகாரமுமில்லை.
லூக்கா 24:27,44; ரோமர் 3:2.
4. பரிசுத்த வேதாகமத்தின் அதிகாரம் எந்த ஒரு மனிதனிலோ அல்லது சபையின் சாட்சியிலோ தங்கியிராமல் அதன் ஆக்கியோனாகிய உண்மையுள்ள கடவுளை முழுமையாக சார்ந்துள்ளது. அது கடவுளின் திருவார்த்தையாக இருப்பதால் அதற்கு நாம் அடிபணிதல் வேண்டும்.
1 தெசலோனிக்கேயர் 2:13; 2 தீமோத்தேயு 3:16; 2 பேதுரு 1:19-21; 1 யோவான் 5:9.
5. திருச்சபையினுடைய சாட்சியினால் உந்தப்பட்டு நாம் பரிசுத்த வேதாகமத்தைப்பற்றிய ஓர் உயர்வான மரியாதைக்குரிய எண்ணத்தைக் கொண்டிருக்கலாம். அதன் உள்ளடக்கங்களின் தெய்வீகத்தன்மை, அதன் போதனைகளின் நற்பயன், அதன் மாண்புமிக்க தன்னியல்பு, ஆரம்பம் முதல் இறுதிவரை எல்லாப் பகுதிகளும் ஒன்றோடொன்று ஒத்துப்போகும் தன்மை, எல்லா வகையிலும் எல்லா மகிமையையும் தேவனுக்கே கொடுக்கும் அதன் மாட்சி, இரட்சிப்புக்குரிய ஒரே வழிமுறையைக்குறித்த அதன் முழுமையான வெளிப்படுத்தல், அத்தோடு, அதனுடைய இன்னும் அநேக உயர்ந்த தன்மைகளும், முழுமையான பூரணத்துவமும், அது தேவனுடைய பரிசுத்த வேதாகமம் தான் என்று நிரூபிக்கும் அளவற்ற சாட்சியங்களை நமக்கு அள்ளித் தருகின்றது. ஆயினும், தவறிழைக்க இயலாத (Infallible) திருமறையின் இத்தெய்வீக அதிகாரத்தைக் குறித்த முழு நம்பிக்கையையும் விசுவாசத்தையும், பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த வேதாகமத்தின் மூலம் நமது இருதயத்தில் ஏற்படுத்தும் சான்றினாலும், நம்மில் நடப்பிக்கின்ற செயலின் மூலமும் மட்டுமே அனுபவிக்க முடியும்.
யோவான் 16:13-14; 1 கொரிந்தியர் 2:10-12; 1 யோவான் 2:20,27.
6. தேவனுடைய மகிமைக்கும், மனிதனுடைய இரட்சிப்புக்கும், விசுவாசத்திற்கும், வாழ்க்கைக்கும் அவசியமான தேவனுடைய எல்லாத் திட்டங்களும் பரிசுத்த வேதாகமத்தில் திட்டவட்டமாக (வெளிப்படையாக) அல்லது உள்ளடக்கமாக (இன்றியமையா நிலையில், Necessarily contained) காணப்படுகின்றது. இவற்றோடு எக்காலத்திலும், ஆவியின் பெயரில் எந்தவித புதிய வெளிப்பாடுகளையோ அல்லது மனித மரபுசார்ந்த வழிமுறைகளையோ சேர்க்கக்கூடாது. (இன்றியமையா நிலையில் என்ற பதம் நேரிடையான கட்டளைகளாக இல்லாமல் பொதுவான வகையில் கொடுக்கப்பட்டுள்ள தேவ போதனைகளைக் குறிப்பதாகும். இத்தகைய போதனைகளை நாம் வேதப்பகுதிகளை ஆராய்ந்து அதில் காணப்படும் தெளிவானதும், எளிதில் நிலைநாட்டக் கூடியதுமான முடிவுகளைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்.) ஆயினும், தேவனுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இத்தகைய போதனைகளில் சரியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள நமக்கு தேவ ஆவியானவரின் ஆன்மீக அறிவொளி அவசியமானதாகும்.
அதேவேளை, கடவுள் வழிபாடு மற்றும் சபை ஆட்சியமைப்பு தொடர்புடைய – பொதுவாக எல்லா மனித நடவடிக்கைகளிலும், அமைப்புக்களிலும் கவனிக்கக் கூடியதுமான – சில சந்தர்ப்பங்களை நாம் இயற்கையின் விதிகள், கிறிஸ்தவ விவேகம், வேதாகமத்தின் பொதுவான விதிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தீர்மானித்து அவற்றை எக்காலத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். (உதாரணமாக வாரத்தின் முதல் நாளில் வழிபாட்டிற்காக சபைகூடிவர வேண்டும் என்றுதான் வேதம் சொல்கிறதே தவிர, எந்தெந்த நேரங்களில் கூடிவரவேண்டுமென்று கூறவில்லை. நாம் இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி எல்லோருக்கும் வசதியான நேரத்தில் கூடிவர வேண்டும்.)
2 தீமோத்தேயு 3:15-17; கலாத்தியர் 1:8-9; யோவான் 6:45; 1 கொரிந்தியர் 2:9-12; 11:13-14; 14:26,40.
7. வேதாகமத்தின் உள்ளடக்கங்கள் அனைத்தும் சமமான தெளிவினைக் கொண்டிராதது மட்டுமன்றி, எல்லா மனிதர்களும் அதில் சமமான தெளிவும் பெற்றிருப்பதில்லை. ஆனாலும், மனிதன் அறிந்து, விசுவாசித்து, கீழ்ப்படிய வேண்டிய இரட்சிப்பிற்கு இன்றியமையாதவைகள் அனைத்தும், படித்த அல்லது படிக்காத மனிதர்கள், சாதாரண வழிமுறைகளைத் தகுந்த முறையில் பயன்படுத்திப் போதுமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில், வேதத்தின் ஒரு பகுதியில் அல்லது பிற பகுதிகளில், தெளிவாக முன்னுரைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. (அச்சாதாரண வழிமுறைகளாவன: பயபக்தியோடு கூடிய வேதவாசிப்பும், அதன் அருளுரையைக் கேட்டலும், கற்றுக்கொள்ளத்தக்க மனப்பான்மையும் ஜெபமுமாகும். அத்தோடு, விசுவாசிகளின் துணையுமாகும்).
2 பேதுரு 3:16; சங்கீதம் 19:7; 119:130.
8. எபிரெய மொழியில் பழைய ஏற்பாடும், கிரேக்க மொழியில் புதிய ஏற்பாடும் (அதாவது, மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பிருந்த அவற்றின் மூலமொழிகளில்) நேரடியாக தேவனால் ஏவப்பட்ட நாள் முதல், அவரது தனிப்பட்ட கவனத்தாலும், முன்னுணர்வாலும் பரிசுத்தமாக பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஆகவே, அவை நம்பிக்கைக்குரியவையாதலால், சகலவித மத சம்பந்தமான விவாதத்திற்குரிய காரியங்களிலும், திருச்சபை, அவற்றின் போதனையையே தீர்வாகவும் இறுதியானதாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுளின் மக்கள் அனைவருக்கும் வேதத்தில் உரிமையும் ஆர்வமும் இருப்பதோடு, அவர்கள் அதை தேவபயத்தோடு படிக்கவும், ஆராயவும் வேண்டுமென கட்டளையிடப்பட்டிருக்கின்றது. ஆனால், எல்லோருக்கும் எபிரெய, கிரேக்க மொழிகள் தெரிந்திராததால், வேதமளிக்கும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும்படி பரிசுத்த வேதாகமம், எல்லா உலக மொழிகளிலும் துல்லியமாக மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
ரோமர் 3:2; ஏசாயா 8:20; அப்போஸ்தலர் 15:15; யோவான் 5:39; 1 கொரிந்தியர் 14:6,9,11-12,24,28; கொலோசெயர் 3:16.
9. வேதாகமத்தை வேதாகமத்தால்தான் விளக்க வேண்டும் என்பது பரிசுத்த வேதாகமத்தின் பொருள் விளக்கங்குறித்த தவறிழைக்க இயலாத (நம்பத் தகுந்த) ஒரு விதிமுறை. அதாவது, அதன் ஒரு பகுதியை ஏனைய பகுதியோடு ஒப்பிட்டு விளக்க வேண்டும். ஆகவே, வேதாகமத்தில் (ஒன்றேயன்றி பல்வேறானதல்ல) ஒரு பகுதியின் தெளிவான உட்கருத்தைப் பற்றிக் கேள்வி எழும்போது, அதைவிட மிகத் தெளிவாய்ப் பேசுகிற மற்றப் பகுதிகளைக் கொண்டே அதன் கருத்தை முடிவு செய்ய வேண்டும்.
2 பேதுரு 1:20-21; அப்போஸ்தலர் 15:15-16.
10. சமய சம்பந்தமான எல்லா விவாதத்திற்குரிய காரியங்களும் வேதத்தால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும். அதேவிதமாக, சமய சீரமைப்புக் குழுக்களின் எல்லாக் கட்டளைகளும், பூர்வகால எழுத்தாளர்களின் எண்ணங்களும், தனிப்பட்ட முறையில் அல்லது குழுவாக மனிதர்கள் கொண்டிருக்கும் தத்துவங்களும் பரிசுத்த ஆவியானவரால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள வேதாகமத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே, ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நிராகரிக்கப்படவோ வேண்டும். ஆவியானவரால் அளிக்கப்பட்டுள்ள வேதாகமத்திலேயே நமது விசுவாசம் அமைதி காண்பதால் அதன் தீர்ப்பிலேயே நாம் திருப்தி அடைய வேண்டும். (உலகப்பிரகாரமான மனிதன் தன் சுய எண்ணங்களிலும், வாதங்களிலுமே நம்பிக்கை வைத்திருக்கிறான். ஆனால், விசுவாசியினுடைய விசுவாசம் வேதாகமத்தின் தீர்ப்பிலேயே முழு நம்பிக்கை வைத்திருக்கின்றது.)
மத்தேயு 22:29,31-32; எபேசியர் 2:20; அப்போஸ்தலர் 28:23.
