கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற நாங்கள் “சென்னை சீர்திருத்த பாப்திஸ்து ஐக்கியம்” என்ற பெயரில் சென்னை நகரில் வேத பூர்வமான சபையொன்று அமைய வேண்டும் என்ற வாஞ்சையில் 15.06.2008ல் கூடிவர ஆரம்பித்தோம். கர்த்தருடைய சுவிசேஷத்தை அறிவிப்பதிலும் கர்த்தருடைய நாளில் கூடிவந்து கர்த்தரை ஆராதிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தோம். கர்த்தருடைய கிருபையினாலும் ஆசீர்வாதத்தினாலும் 2011 ஜுன் மாதம் 27ம் நாள், இந்த ஐக்கியம் “கிருபை சீர்திருத்த திருச்சபை” (Grace Reformed Church) என்ற பெயரில், சீர்திருத்த பாப்திஸ்து (Reformed Baptist) திருச்சபையாக கர்த்தருடைய வார்த்தையின்படி முறையாக அமைக்கப்பட்டது. இச்சபை, “1689 விசுவாச அறிக்கையை” (1689 Confession of Faith) தன்னுடைய விசுவாச அறிக்கையாக ஏற்றிருக்கிறது.
கர்த்தருடைய திருச்சபை தேவனுடைய வீடாக இருப்பதாலும், வேதத்தின் வெளிப்படையானதும் உள்ளடக்கமானதுமான போதனைகளின்படி அது ஒழுங்கோடு இயங்க வேண்டும் என்று கர்த்தர் வேதத்தில் கட்டளையிட்டிருப்பதாலும் இத்திருச்சபை கர்த்தருடைய வார்த்தையின் அடிப்படையில் தனக்கென சட்ட அமைப்பு விதிகளைக் (Church Constitution) கொண்டு இயங்கி வருகிறது.
இத்திருச்சபை அமைவதற்கான ஆலோசனைகளையும், வழிநடத்தல்களையும் நியூசிலாந்திலுள்ள சவரின் கிரேஸ் திருச்சபையின் போதகர் பாலா (Pastor R. Bala) அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டோம்.
இத்திருச்சபையின் நோக்கம்
தனிப்பட்ட முறையிலும், ஒருங்கிணைந்தும், பாவிகளுக்கு நற்செய்தியை எடுத்துரைப்பதன் மூலமும், விசுவாசிகளைக் கட்டியெழுப்புவதன் மூலமும், வேதாகமம் போதிக்கும் கர்த்தரின் ஆராதனையை நடத்தி அவரை மகிமைப்படுத்துவதே இத்திருச்சபையின் நோக்கம். ஆகவே, கர்த்தருடைய பூரணமான நியாயப்பிரமாணத்தையும், அவருடைய மகிமையுள்ள கிருபையின் நற்செய்தியைப் போதிப்பதையும் இத்திருச்சபை கடமையாகக் கொண்டுள்ளது. அத்தோடு, விசுவாசத்திற்காகப் போராடுவதையும், புதிய உடன்படிக்கையின் கிருபையின் சாதனங்களை விசுவாசத்தோடும், பரிசுத்தத்தோடும் பொறுப்பாக அனுசரிப்பதையும் இத்திருச்சபை நோக்கமாக கொண்டுள்ளது.